கொரோனா சிகிச்சைக்கு ஆந்திர ஆயுர்வேத லேகியம் பலன்படுமா? ஆய்வு அறிக்கை கூறியது என்ன?

லேகியம்

பட மூலாதாரம், TWITTER

கொரோனாவில் இருந்து குணப்படுத்துவதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் தயாரிக்கும் லேகியத்தை விநியோகிக்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதே நேரத்தில் கண்களில் ஊற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் சொட்டு மருந்துக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.

இது தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆயுர்வேத வைத்தியரின் லேகியத்தில் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை எனத் தெரியவந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணப்பட்டணத்தைச் சேர்ந்த போனிஜி அனந்தையா, பல ஆண்டுகளாக ஆயுர்வேத வைத்தியம் செய்து வருகிறார். கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக சில மருந்துகளை அவர் தயாரித்து வழங்கி வருகிறார்.

4 விதமான லேகியங்கள், கண்ணில் ஊற்றும் ஒரு சொட்டு மருந்து ஆகியவை மக்களிடையே பிரபலமாகின. அவரது மருந்துகள் கொரோனாவில் இருந்து குணப்படுத்துவதாக மக்கள் நம்புகிறார்கள்.

இந்த மருந்துகளை ஆய்வு செய்த ஆயுர்வேத படிப்புகளுக்கான ஆராய்ச்சிக் குழு தனது அறிக்கையை மாநில அரசுக்கு ஏற்கெனவே அளித்திருந்தது. அனந்தையாவின் மருந்துகளால் பக்கவிளைவுகள் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அனந்தையாவின் மூலிகை தயாரிப்புகளை வாங்க கிருஷ்ணம்பட்டிணம் கிராமத்தில் திரண்ட மக்கள்.

எனினும், கொரோனாவுக்கான சிகிச்சைக்கு இவற்றை பயன்படுத்த முடியாது என ஆயுர்வேத ஆய்வுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மருந்துகளால் கொரோனா பாதிப்புகள் குறையாது எனவும் ஆய்வுக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் பரிசீலித்த ஆந்திர அரசு அனந்தையாவின் 4 மருந்துகளில் 3 மருந்துகளை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. கண்ணில் ஊற்றும் சொட்டு மருந்து பற்றிய அறிக்கையை ஆயுர்வேத ஆய்வுக்குழு இன்னும் அளிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அனந்தையாவின் மூலிகை தயாரிப்புகளை வாங்க கிருஷ்ணம்பட்டிணம் கிராமத்தில் திரண்ட மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறும் காவல்துறையினர்

அனந்தையாவின் மருந்துகள் தொடர்பான முழுமையான அறிக்கை இன்னும் இரு வாரங்களில் அளிக்கப்படும் எனவும் ஆயுர்வேத ஆராய்ச்சிக் குழு தெரிவித்திருக்கிறது.

கொரோனாவுக்கு ஏற்கெனவே எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன் அனந்தையாவின் லேகியங்களையும் எடுத்துக் கொள்ளலாம் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மருந்துகளை விநியோகம் செய்யும்போது கொரோனா விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் எனவும் ஆந்திர அரசு கூறியுள்ளது.

அனந்தையாவின் லேகியங்கள் குறித்து தகவல் பரவியதால் அவற்றை வாங்குவதற்காக கடந்த 21-ஆம் தேதி அவரது ஊரில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். கள்ளச் சந்தையில் மருந்துகள் விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

இதையடுத்து அவரது மருந்துகளை விநியோகிக்க ஆந்திர அரசு தடை விதித்தது. அனந்தையாவை காவலர்கள் அழைத்துச் சென்றனர். இந்த நடவடிக்கைக்கு தெலுங்கு தேசம் கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :