200 ஆண்டுகளுக்கு முன்பே ஆணாதிக்கத்தையும் - சாதியயையும் எதிர்த்த கவிஞர் பீரோ ப்ரேமன்

200 ஆண்டுகளுக்கு முன்பே ஆணாதிக்கத்தையும் - சாதியயையும் எதிர்த்த கவிஞர் பீரோ ப்ரேமன்

(இந்தியக் குடியரசில் ஒடுக்கப்படும் வாழ்வை ஏற்காத தலித், பழங்குடி, முஸ்லிம் பெண்களின் வரலாறு இது. 'வரலாற்றில் பெண்கள்' என்ற தலைப்பில் பிபிசி வெளியிடும் கட்டுரைகளின் இரண்டாம் பாகம்)

நான் முஸ்லிமும் அல்ல, இந்துவும் அல்ல. பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்ரன் என்ற நான்கு வர்ணங்களையும் நான் நம்பவில்லை. ஒரு குறிப்பிட்ட ஆடையை மட்டும் அணிவதிலும் எனக்கு நம்பிக்கையில்லை.

இந்த வரிகள் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தலித் பாலியல் தொழிலாளியால் எழுதப்பட்டவை என்பதை நம்ப முடிகிறதா? அவரது சொற்கள் அப்போதே ஆணாதிக்கத்தையும் சாதியத்தையும் மத அடிப்படைவாதத்தையும் உலுக்கின. இந்த தைரியம் அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். அந்த தைரியத்துக்குப் பின்னால் இருந்த பெண்மணியின் பெயர் பீரோ ப்ரேமன்.

பீரோ ப்ரேமனை பஞ்சாபி மொழியின் முதல் பெண் கவிஞர் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். சிலர், இவரது இயற்பெயர் ஆயிஷா என்றும் கூறுகின்றனர். சூர் பீரோ என்ற புத்தகம், அவர் 1810ல் பிறந்ததாகச் குரிப்பிடுகிறது

"அவரது ஆரம்பகட்ட வாழ்க்கை கடினமானதாக இருந்தது. கணவரின் மறைவுக்குப் பிறகு இளவயதிலேயே அவர் பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டார். லாஹூரின் ஹீரா மண்டியில் அவரை விற்றுவிட்டார்கள். ஆனால் அங்கிருந்து எப்படியோ தப்பித்து அவர் ஆன்மீக ஆசிரமம் வைத்திருந்த சாது குலாப் தாஸிடம் வந்து சேர்ந்தார். முதலில் அது சர்ச்சையைக் கிளப்பினாலும் பிறகு எல்லாம் அமைதியாகி அவர் அங்கு வசிக்கத் தொடங்கினார்" என்கிறார் பஞ்சாப் பல்கலைக்கழகப் பேராசியர் ஜஸ்பீர் சிங்.

ஹீரா மண்டியிலிருந்து தப்பியோடிய பீரோ, ஆன்மீக குரு குலாப் தாஸிடம் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்குக் கவிதை மீது ஆர்வம் வந்தது. கவிதை உலகிற்குள் நுழைந்த பிறகு அவர் பீரோ ப்ரேமன் என்று அழைக்கப்பட்டார்

"பீரோ என்பது அவரது நிஜப்பெயர் அல்ல. அவரது இயற்பெயர் ஆயிஷா. குலாப் தாஸை சந்தித்த பிறகு அவரது ஆன்மீக ஆசிரமத்தில் வசிக்கத் தொடங்கினார். அங்கு அவரது அறிவாற்றலும் பண்புகளும் கவனித்துப் போற்றப்பட்டன. அங்கு அவர் "சாது" என்ற பெயரில் பீர் என்று அழைக்கப்பட்டார், பெண் என்பதால் அது பீரோ என்று மாறியது. பக்தியுடன் இருந்ததால் அவர் ப்ரேமன் என்றும் அழைக்கப்பட்டார். குலாப் தாஸிடமும் இறைவனிடமும் அவர் பக்தியுடன் இருந்தார். அதே பீரோ புரட்சிகரமான கவிதைகளையும் எழுதினார்" என்கிறார் வரலாற்றாசிரியர்ம ற்றும் பேராசிரியர் ராஜ் குமார் ஹான்ஸ்.

19ம் நூற்றண்டின் போது பஞ்சாப்பில் ஒரு பெரிய அரசியல் எழுச்சி நடந்தது. மகாராஜா ரஞ்சித் சிங் இறந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பஞ்சாப் மாநிலம் பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழ் வந்தது. அப்போது பீரோவின் கவிதைகள் புரட்சிகரமாகவும் அந்த அரசியல் சூழலின் சமூக அமைப்புகளைக் கேள்வி கேட்பவையாகவும் இருந்தன. ஒரு சமூகத்தை மேல்/கீழ் என்று அடுக்குகளாகப் பிரிப்பது இயற்கைக்கு எதிரானது என்று பீரோ கருதினார்.

"தன் கவிதைகளின் மூலம், குடுமி வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் பிராமணனாகவும், சுன்னத் செய்வதால் மட்டுமே ஒருவர் இஸ்லாமியராகவும் எப்படி மாறமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். சீக்கிய மதத்தின்மீதும் இப்படி ஒரு கேள்வியை வைத்தார். தங்கள் மதத்தின்மீது உள்ள பிணைப்பை வெளிப்படுத்த பெண்களுக்கு எந்த வழியும் இல்லை என்று அவர் கூறினார்.

சின்னங்கள் அடையாளங்கள் மூலம் மதங்கள் பேசும் ஆச்சாரங்களைக் குறித்து அவர் கேள்வி கேட்டார். அது மதம் இல்லை என வாதிட்டார். மதம் என்பது இதற்கு அப்பாற்பட்டது என்றார். வைசியா அல்லது பாலியல் தொழிலாளி என்ற பதம் பக்தி மார்க்கத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டத்தைப் பயன்படுத்தினார். தான் ஒரு பாலியல் தொழிலாளி என கூறுவதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை" என்கிறார் பஞ்சாப் பல்கலைக்கழகப் பேராசியர் ஜஸ்பீர் சிங்.

அவர் 160 கவிதைகள் எழுதியதாகத் தெரிகிறது. அவரது அனுபவங்களிலிருந்து அவரது கவிதைகள் பிறந்தன. தான் வாழும் காலத்தில் உள்ள சமூகத்தையே கேள்வி கேட்பது அந்தக் காலகட்டத்தைப் பொறுத்தவரை பெரிய ஒரு புரட்சிதான்.

பீரோவின் இலக்கியத்தைப் படிப்பவர்கள் அவரை ஆணாதிக்க சிந்தனை, சாதியம், மத அடிப்படைவாதத்துக்கு எதிரானவராகப் பார்க்கிறார்கள். பல பெண் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களின் மூலம் தங்களை தைரியமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். அதற்கு சரியான சான்றாக பீரோவின் எழுத்துக்கள் விளங்குகின்றன என்பதை மறுக்க முடியாது.

செய்தியாளர் - நவ்தீப் கவுர், சுஷிலா சிங்

ஒளிப்பதிவு - ரவீந்தர் சிங் ராபின், மங்கள்ஜீத் சிங்

படத்தொகுப்பு - தீபக் ஜஸ்ரோடியா, டேனியல்

தயாரிப்பு - சுஷிலா சிங்

(வரலாற்றில் பெண்கள் பாகம் 2 தயாரிப்பாளர் சுஷிலா சிங், பிபிசி இந்தி)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :