பூத் ஜோலோகியா: உணவாக சமைத்து சாப்பிட்டால் 'பேய் பிடித்ததை போல' உணர வைக்கும் இந்திய மிளகாய்

  • சரோஜ் சிங்
  • பிபிசி இந்தி செய்தியாளர்
மிளகாய் சாபிடுவது போன்ற மாதிரிப் படம்

பட மூலாதாரம், Getty Images

இந்த சம்பவம் 2016 அக்டோபர் மாதம், அதாவது சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது.

அமெரிக்காவில் 47 வயதான ஒருவர் பர்கர் சாப்பிட்டார். பர்கரின் சிறப்பு என்னவென்றால், அதில் 'பூத் ஜோலோகியா' என்கிற மிளகாயின் அரவை பூசப்பட்டிருந்தது.

அவர் பர்கரை சாப்பிட்டவுடன், வயிறு மற்றும் மார்பில் ஏற்பட்ட வலியால் தரையில் உருள ஆரம்பித்தார். அவருக்கு வாந்தியும் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உணவுக் குழாயில் ஓர் அங்குலம் அளவுக்கு துளை இருப்பதை மருத்துவர்கள் கண்டனர்.

இந்த சம்பவம் 'தி ஜர்னல் ஆஃப் எமஜென்சி மெடிசின்' என்ற அவசர சிகிச்சை தொடர்பான மருத்துவ சஞ்சிகையிலும், மற்ற ஊடகங்களிலும் வெளியானது.

'பூத் ஜோலோகியா' என்பது ஒரு வகையான மிளகாய். இது வடகிழக்கு இந்தியாவில் விளைகிறது.

இது கிங் மிர்ச்சா (மிளகாய்), ராஜா மிர்ச்சா, நாகா மிர்ச்சா, கோஸ்ட் பெப்பர் (Ghost Pepper) என பல பெயர்களால் அறியப்படுகிறது.

காரத்தில் இதற்கு நிகர் வேறு எதுவுமே இல்லை என்பதால், இது கிங் மிர்ச்சா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதுதான் மிளகாயின் ராஜா.

இப்போது நாகாலாந்தில் இது அதிக அளவில் பயிரிடப்படுவதால் நாகா மிர்ச்சா என்றும் அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், TWITTER/PIYUSH GOYAL

கோஸ்ட் பெப்பர் அல்லது பூத் ஜோலோகியா என்கிற பெயர் எதற்காக அளிக்கப்பட்டுள்ளது என்றால், அதை சாப்பிட்ட பிறகு, உங்கள் உடலில் பேய் நுழைந்தது போல் கிறுகிறுத்துப்போகுமாம். ஆகையால்தான் இந்த பெயராம்.

இந்த மிளகாயின் பெயர்கள் தொடர்பாக உள்ளூர் மக்கள் சொன்ன விவரங்கள் இவை.

ஆனால் 47 வயதான அமெரிக்கருக்கு என்ன நேர்ந்தது என்பதிலிருந்து , இந்த மிளகாயின் காரத்தன்மைக்கு நிகரில்லை என்று நீங்கள் யூகித்திருக்க முடியும்.

உலகின் மிகவும் காரமான ஐந்து மிளகாய்களில் பூத் ஜோலோகியாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவத்தை இப்போது ஏன் குறிப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.

முதன்முறையாக, நாகாலாந்தில் இருந்து (பறிக்கப்பட்ட நிலையில்) இந்த மிளகாய் இப்போது லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் முதல் தொகுப்பு புதன்கிழமை இந்திய அரசால் அனுப்பப்பட்டது. வெளிநாடுகளுக்கு இது தூள் வடிவில் மட்டுமே முன்பு அனுப்பப்பட்டது.

இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோதியே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், 'பூத் ஜோலோகியா'வை ருசித்தவர்களுக்கு மட்டுமே அதன் காரம் பற்றித்தெரியும்.'என்று குறிப்பிட்டுள்ளார்.

பூத் ஜோலோகியாவின் வரலாறு

பட மூலாதாரம், TWITTER/PIYUSH GOYAL

போர்ச்சுகீசியர்கள் தென் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மிளகாய் கொண்டு வந்ததாக பொதுவாக நம்பப்படுகிறது.

ஆனால் அவர்கள் வருகைக்கு முன்பிருந்தே நாகாலாந்தில் இந்த மிளகாய் இருப்பதால், அது கட்டுக்கதை என நிரூபணமாகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் புஷ்பேஷ் பந்த், உணவு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

"போர்ச்சுகீசியர்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1498இல் இந்தியாவில் கேரளாவை அடைந்து பின்னர் கோவாவில் குடியேறினர்.

பின்னர் இந்தியாவில் அவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அந்தப் பகுதிகளுக்கெல்லாம் மிளகாய் பரவியது. ஆனால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை சென்றடைவது அந்த நேரத்தில் மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தது. ஆகவே அவர்கள் இந்த மிளகாயுடன் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்லை."

"போர்ச்சுகீசியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் காட்டுமிளகாய் அதாவது ராஜா மிர்ச்சா வளர்ந்திருக்கும் என தாவரவியல் வல்லுநர்கள் இன்று ஒருமனதாக தெரிவிக்கின்றனர்," என பிபிசியுடனான உரையாடலில் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், 'பூத் ஜோலோகியா' அதாவது 'கிங் மிர்ச்சா' இந்தியாவின் பழமையான மிளகாய் இனமாகும். ஆனால் இது குறித்து பழைய வரலாற்று புத்தகங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை விளக்கும் புஷ்பேஷ் பந்த், "வடகிழக்கு மாநிலங்களுடனான இந்தியாவின் தொடர்பு முன்பு மிகவும் குறைவாக இருந்தது.

நாகாலாந்து அல்லது வேறு எந்த வடகிழக்கு மாநிலங்களின் நாட்டுப்புற பாடல்களிலும் இது குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் அது அங்குள்ள மக்களின் வாழ்வில் மிகவும் பொதுவான ஒன்றாக இருந்தது," என சுட்டிக்காட்டினார்.

மிளகாயின் புவியியல்

பட மூலாதாரம், Getty Images

மிளகாயை ஆங்கிலத்தில் 'சில்லி' என்று அழைக்கிறார்கள், இது ஒரு மெக்சிக மொழிச் சொல், அதாவது இதன் பொருள் 'பெரிய கேப்சிகம்.'

மிளகாயின் தாவரப்பெயர் 'கேப்சிகம் ஏனம்' (capsicum annuum). பச்சை மிளகாயில், வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை போதுமான அளவில் காணப்படுகின்றன.

இது தவிர, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் இதில் ஏராளமாக உள்ளன. மிளகாயின் வீரியத்திற்கு, அதில் காணப்படும் அல்கலாய்டு ரசாயனமான 'கேப்சைசின்' (ஒலியோரெசின்) தான் காரணம். மிளகாய் பழுக்கும்போது 'கேப்சாண்டின்' காரணமாக சிவப்பு நிறம் ஏற்படுகிறது.

இந்தியா உலகின் மிகப்பெரிய மிளகாய் உற்பத்தியாளர் மட்டுமல்ல, மிகப்பெரிய நுகர்வோர் நாடுகளில் ஒன்றாகும்.

இந்தியாவில் மிளகாய் பல மாநிலங்களில் ஆண்டு முழுவதும் வளர்க்கப்படுகிறது. இதற்காக, 20 முதல் 30 டிகிரி வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வகை மிளகாய்கள் மிகவும் பிரபலமானவை.

இப்போது இந்தப்பட்டியலில் நாகாலாந்து மற்றும் அசாமின் பெயரும் இணைந்துள்ளன.

'ராஜா மிர்ச்சா' நான்கு முதல் ஐந்து அங்குல நீளம் கொண்டது. பச்சை தவிர, சிவப்பு மற்றும் சாக்லேட் நிறத்திலும் உள்ளன. அவை உணவில் மசாலாவாகவும், ஊறுகாய்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மிளகாய் போட்டு சமைக்கப்படும் அசைவ உணவு, மிகவும் சுவையானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது வடகிழக்கு பிராந்தியங்களில் 'சாஸ்கள் ' தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய சந்தையில் அதன் விலை கிலோவுக்கு சுமார் 300 ரூபாய் ஆகும். ஆனால் லண்டன் சந்தையில் இது கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்படும்.

இது தற்போது நாகாலாந்து மற்றும் அசாமில் சிறிய அளவில் வளர்க்கப்படுகிறது, ஆனால் ஏற்றுமதி தொடங்கியதும் உள்ளூர் மக்கள் அதை அதிக அளவில் வளர்ப்பார்கள் என வேளாண் அமைச்சக அதிகாரிகள் கருதுகின்றனர். இதன் காரணமாக, இந்திய அரசு அதன் ஏற்றுமதியில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த மிளகாய் எவ்வளவு காரமானது?

பட மூலாதாரம், Getty Images

மிளகாயின் காரத்தன்மையை அளக்க ஒரு அளவுகோல் உள்ளது. இந்த அளவு, ஸ்கோவில் ஹீட் யூனிட் (SHU) என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவீடு, அமெரிக்க மருந்தாளர் வில்பர் ஸ்கோவிலின் பெயரால் அறியப்படுகிறது.

மிளகாயில் உள்ள 'கேப்சைசின்' அடிப்படையில், மிளகாய் எவ்வளவு காரமாக இருக்கிறது என்று முடிவு செய்யப்படுகிறது.

இந்த யூனிட் அளவீட்டில் ராஜா மிர்ச்சா 1 மில்லியன் SHU யூனிட் ஆகும். உலகின் மிக அதிக காரமான மிளகாயின் SHU யூனிட் 2 மில்லியனுக்கும் அதிகம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகெங்கிலும் உள்ள மிகவும் காரமான ஐந்து மிளகாய்களில் 'ராஜா மிர்ச்சா' ஐந்தாவது இடத்தில் உள்ளது.

மிளகாயின் காரத்தில் முதல் இடத்தில் ப்யூர் கேப்சைசின் உள்ளது. இரண்டாவது இடத்தில் - ஸ்டாண்டர்ட் பெப்பர் ஸ்ப்ரே, மூன்றாவது இடத்தில் கரோலினா ரீப்பர் மற்றும் நான்காவது இடத்தில் டிரினிடாட் மோருகா ஸ்கார்பியனும் உள்ளன என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் பிபிசிக்கு அளித்த தகவல் தெரிவிக்கிறது.

இந்திய வீடுகளில் பொதுவாக எத்தனை சிவப்பு மிளகாய் பயன்படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்கு ராஜா மிர்ச்சா அல்லது மேலே குறிப்பிட்டுள்ள வேறு எந்த மிளகாயையும் பயன்படுத்த முடியாது. இந்த மிளகாயின் ஒரு சிறிய துண்டே உணவில் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக உணவின் சுவை மற்றும் நறுமணம் அதிகரிக்கும் என்று. புஷ்பேஷ் பந்த் குறிப்பிட்டார்.

மிளகாய் மீது உலக மக்களின் பிரியம்

இதுவரை நீங்கள் ராஜா மிளகாயின் கதையை தெரிந்துகொண்டீர்கள். பார்க்கப்போனால், உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் மிளகாயை விரும்புகிறார்கள். இந்திய உணவில் மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகிய இரண்டுமே பெரும்பாலான காய்கறிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் ஒரு நபர் ஆண்டில் சராசரியாக எத்தனை மிளகாய் சாப்பிடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

ஒரு மதிப்பீட்டின்படி, 2018 ஆம் ஆண்டில், ஒவ்வொரு நபரும் சராசரியாக ஐந்து கிலோ மிளகாய் சாப்பிடுகிறார்கள். இந்த புள்ளிவிவரங்கள் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான இன்டெக்ஸ் பாக்ஸிலிருந்து வந்தவை.

சில நாடுகளில் மிளகாய் மேலும் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. துருக்கியில், ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 86.5 கிராம் மிளகாய் உட்கொள்கிறார் அதாவது உலகிலேயே அதிக அளவு மிளகாய் இங்கு உண்ணப்படுகிறது.

மெக்சிகோ அதன் காரமான உணவுக்கு பிரபலமானது என்றாலும், மெக்சிகோவை விட துருக்கியில் அதிக மிளகாய் சாப்பிடப்படுகிறது.

மெக்சிகோவில் ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 50.95 கிராம் மிளகாய் சாப்பிடுகிறார்.

இவை தவிர, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் மிளகாயைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ளன.

மறுபுறம், ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் மிளகாயின் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :