அசாம் பாஜக முதல்வர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு - மிசோரம் காவல்துறை

ஹிமந்தா பிஸ்வா சர்மா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அந்த மாநிலத்தின் மூத்த காவல் அதிகாரிகள் 4 பேருக்கு எதிராக மிசோரம் காவல்துறை குற்றவியல் வழக்குகள் பதிவு செய்துள்ளது என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

மாநில எல்லை பிரச்னை தொடர்பாக கடந்த திங்களன்று அசாம் மற்றும் மிசோரம் காவல்துறையினர் இடையே நடந்த துப்பாக்கி மோதலில் அசாம் காவல்துறையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசாமில் பாரதிய ஜனதா கட்சியும், மிசோரமில் அதன் கூட்டணிக் கட்சியான மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியில் உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையிலும் மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொள்ளத் தயாராக உள்ளேன். ஆனால், ஒரு நடுநிலையான அமைப்பு ஏன் விசாரணை நடத்தக்கூடாது என்று இந்த முதல் தகவல் அறிக்கை தொடர்பாக ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

நிகழ்விடம் அசாம் மாநிலத்தின் அரசமைப்பு சட்ட ரீதியிலான இடத்தில் நிகழ்ந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதை மிசோரம் முதல்வர் சொரம்தங்காவிடமும் கூறி விட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில எல்லையில் நடந்த மோதல்

மிசோரம் மாநிலத்தின் எல்லையோர மாவட்டமான கோலாசிப் மாவட்டத்தில் உள்ள வைரெங்தே எனும் நகரின் அருகே, இரு மாநில காவல்துறை இடையே சமீபத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மிசோரம் காவல்துறை வெள்ளியன்று தெரிவித்துள்ளது.

கொலை முயற்சி சதித் திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மிசோராம் காவல்துறை தலைமையகத்தில் ஐ.ஜி ஜான் நெய்லையா பிடிஐ முகமையிடம் தெரிவித்துள்ளார்.

வைரெங்தே நகருக்கு அருகில் மிசோரம் மற்றும் அசாம் காவல்துறையினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடந்த போது மிசோரம் காவல்துறையுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் அறிவுறுத்தல் காரணமாக அசாம் காவல்துறை மறுத்துவிட்டது என்று முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதி அசாம் எல்லைக்குள் வருவதாக கோலாசிப் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர்கள் வலுக்கட்டாயமாக தகவல் தெரிவித்தனர் என்றும் அசாம் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அங்கு முகாம் அமைக்க முயற்சி செய்தனர் என்றும் மிசோராம் காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஜி அனுராக் அகர்வால், காசார் மண்டல டி.ஐ.ஜி தேவஜோதி முகர்ஜி, காசார் காவல்துறை கண்காணிப்பாளர் சந்திர குமார் நிம்பல்கர், தோலாய் காவல் நிலைய பொறுப்பு அலுவலர் சகாபுதீன் உள்ளிட்டோருக்கு எதிராக மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காசார் கூடுதல் ஆணையர் கீர்த்தி ஜல்லி மற்றும் மண்டல வன அதிகாரி சந்நிதியோ சவுத்ரி ஆகியோருக்கு எதிராகவும் அதே பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாமல் அடையாளம் அறியப்படாத அசாம் காவல் துறையைச் சேர்ந்த 200 பேருக்கு எதிராகவும் மிசோராம் காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லைத் தகராறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிரிட்டிஷ் ஆட்சியின்போது லூஷாய் ஹில்ஸ் என்று அழைக்கப்பட்ட மிசோரம் அசாமின் ஒரு பகுதியாக இருந்தது.

மிசோரம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பல்லாண்டு காலமாக எல்லைத் தகராறு உள்ளது.இரு மாநிலங்களுக்கும் இடையே 164 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லை உள்ளது.

1994இல் மிசோரம் தனி மாநிலம் ஆனது. 1994 முதல் இரு மாநிலங்களும் எல்லை தொடர்பாக எதிரெதிர் நிலையில் உள்ளன.

அசாமின் காசார் மாவட்டத்திலுள்ள லைலாப்பூர் மற்றும் மிசோராமின் கோலாசிப் மாவட்டத்தில் உள்ள வைரெங்தே ஆகிய பகுதிகளுக்கு இடையிலான எல்லையில் சுமார் 198 சதுர மைல் பரப்புள்ள நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று இரண்டு மாநிலங்களும் உரிமை கொண்டாடுகின்றன.

இந்த இடத்தில் மிசோராம் கட்டுமானம் ஒன்றை அமைக்க முயற்சி செய்வது சமீபத்திய மோதல்களுக்கு வழிவகுத்தது.

தற்போது அசாம் மற்றும் மிசோரம் மாநில காவல்துறையினர் இடையே மேலதிக மோதல் நிகழாமல் இருப்பதற்காக மத்திய ரிசர்வ் காவல் படையில் துருப்புகளை இந்திய அரசு அங்கு அனுப்பியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :