பாதாள சாக்கடை சுத்தம் செய்த யாரும் இறக்கவில்லை என இந்திய அரசு சொல்வது உண்மையா?

  • கீர்த்தி துபே
  • பிபிசி செய்தியாளர்
துப்பறவு பணியாளர்

பட மூலாதாரம், AFP

கடந்த ஐந்து ஆண்டுகளில், கையால் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் எந்த ஒரு துப்புரவு பணியாளரும் இறக்கவில்லை என்று இந்திய அரசு கூறுகிறது.

ஜூலை 28 அன்று, மாநிலங்களவையில், சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை இணையமைச்சர் ராமதாஸ் அட்வாலே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எல் ஹனுமந்தய்யா இணைந்து கேட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, "கடந்த ஐந்து ஆண்டுகளில் கைகளால் சாக்கடைகளை சுத்தம் செய்யும்போது யாரும் இறந்ததாக தெரியவரவில்லை," என்று கூறினார்.

ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, மக்களவையில், சமூக நீதி அமைச்சர் ராமதாஸ் அட்வாலே எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் செப்டிக் டேங்குகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது 340 பேர் இறந்ததாக தெரிவித்தார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த தரவு 2020 டிசம்பர் 31 வரையிலானது.

2010 முதல் 2020 மார்ச் வரை, அதாவது 10 வருடங்களில் செப்டிக் டேங்குகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது 631 பேர் இறந்துள்ளனர் என்று அரசு அமைப்பான தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிக்கை 2020ஆம் ஆண்டு வெளியானது.

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு துப்புரவுப்பணியாளர்கூட இறக்கவில்லை என்று இப்போது அரசு கூறுகிறது.

மனிதக்கழிவுகளை கைகளால் சுத்தம் செய்யும் வேலையில் பணியமர்த்த தடை மற்றும் துப்புரவுப்பணியாளர் மறுவாழ்வு சட்டம், 2013ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இதில் அரசு 'கைகளால் துப்புரவுப்பணியை செய்பவர்' யார் என்ற வரையறையை நிர்ணயித்துள்ளது.

இந்த வரையறையின்படி, "உள்ளூர் அதிகாரிகள் கைகளால் அசுத்தங்களை சுத்தம் செய்யுமாறு சொல்கின்ற, சுத்தம் செய்ய வைக்கின்ற அல்லது மனிதக் கழிவுகள் சேரும் வடிகால்கள் அல்லது குழிகள் போன்றவற்றை கைகளால் சுத்தம் செய்யும் நபர், 'கைகள்கொண்டு சுத்தம் செய்யும் துப்புரவாளர்' என்று அழைக்கப்படுவார்."

இந்த சட்டம் அமல்செய்யப்பட்டபிறகு, எந்த ஓர் உள்ளூர் அதிகாரியோ வேறு எந்த நபரோ, செப்டிக் டேங்க் அல்லது சாக்கடையில் 'அபாயகரமான சுத்தம் செய்யும் பணிக்காக' எந்த நபரையும் நியமிக்கக் கூடாது என்று இந்தச் சட்டத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் ஏழாவது புள்ளி தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், GETTY IMAGES/SUDHARAK OLWE

இந்தச் சட்டம் செப்டிக் டேங்குகள் மற்றும் பாதாள சாக்கடைகள் தொடர்பான 'அபாயகரமான சுத்தம் செய்தல்' என்ன என்பதையும் வரையறுக்கிறது.

இதன் பொருள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான நவீன உத்திகளை கையாள வேண்டும் என்பதாகும். செப்டிக் டேங்க் மற்றும் சாக்கடையை சுத்தம் செய்ய, பாதுகாப்பு அங்கிகள் வழங்காமல் எந்த ஒப்பந்ததாரர் அல்லது அதிகாரி கழிவுகளை சுத்தம் செய்ய வைப்பது கட்டாயமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால், பெரும்பாலான துப்புரவுப் பணியாளர்கள் சாக்கடை மற்றும் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் போது சாக்கடைக்குள் இறங்க வேண்டியுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 26 பேர் மரணம்

அரசின் இந்த அறிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய, துப்புரவுப் பணியாளர்கள் இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பெஸ்வாடா வில்சன், "இந்த ஐந்து ஆண்டுகளில், 472 துப்புரவு தொழிலாளர்கள் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது இறந்துள்ளனர்," என்றார்.

முன்னதாக, 340 பேரின் மரணத்தை அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் அதில் 132 பேர் கணக்கில் வரவில்லை. இந்த ஆண்டு இதுவரை சாக்கடையை சுத்தம் செய்யும் போது 26 பேர் இறந்துள்ளனர். எனவே இப்போது வரை மொத்தம் 498 பேர் இறந்துள்ளனர். அதை அரசு முழுமையாக நிராகரிக்கிறது.

"முன்னதாக அரசு கைமுறையாக துப்புரவு செய்வது நாட்டில் முடிந்துவிட்டது என்று கூறியது. ஆனால் இது தொடர்ந்து நடக்கிறது என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சொன்னபிறகுதான் அரசு இந்த சட்டத்தை 2013 இல் கொண்டு வந்தது,"என்று வில்சன் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு,

துப்புரவு பணியாளர்களின் கால்களை பிடித்து ‘மசாஜ்’ செய்யும் பாஸ்கர்

"இப்போது நீதிமன்றம் அதில் தலையிடுவதை நிறுத்திய பிறகு நாட்டில் இதுபோன்ற துப்புரவு இல்லவே இல்லை என்றும் இதன் காரணமாக யாரும் இறக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். சிந்தியுங்கள், மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மரணம் ஏதும் சம்பவிக்கவில்லை என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுகிறார்," என்று அவர் குறிப்பிட்டார்.

வரையறை குறித்த கேள்வி

துப்புரவுப் பணிகளின்போது 340 பேர் தொழிலாளர்கள் இறந்தனர் என்ற எண்ணிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு முன்வைத்தபோது, 'மானுவெல் ஸ்காவென்ஜர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, 'சாக்கடை மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும்போது' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

அதாவது, 2013 சட்டத்துக்கு புறம்பாக, சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களை, 'மனிதக்கழிவுகளை கைகளால் சுத்தம் செய்யும் துப்புரவாளர்களாக' அரசு கருதவில்லை.

இது பற்றிக் கருத்து தெரிவித்த வில்சன், "கையேடு துப்புரவு என்பது கைகளால் செய்யப்படும் துப்புரவு என்றும் இந்த வகை சுத்தம் செய்தல் இப்போது நடப்பதில்லை என்றும் இவர்கள் சாக்குபோக்கு சொல்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. சாக்கடைக்குள் இறங்கும் இவர்கள் தங்கள் கைகளால் அசுத்தத்தை தொடாமல் இருக்கமுடியுமா? அவர்கள் அசுத்தத்தில் மூழ்கி வேலை செய்கிறார்கள்.,"என்றார்.

"மனித கழிவுகள், கழிவுநீர், செப்டிக் டேங்க் போன்ற எந்தவொன்றும் கையால் சுத்தம் செய்யப்பட்டால், அது தடை செய்யப்படும் என்று சட்டம் கூறுகிறது. எனவே வரையறைப்படியும் இது பொய். எனவே உயிர்களுடன் விளையாட முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், CHANDAN KHANNA/AFP via Getty Images

"ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் யாருமே இறக்கவில்லை என்றும் அரசு கூறுகிறது. ஆனால் நாம் பார்ப்பது அல்லது பார்த்ததை அரசு அறிக்கைகளால் உறுதிப்படுத்தப்படுத்த வேண்டுமா என்ன? தரவு இல்லை என்று சொல்வது, கேள்விகள் மற்றும் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு எளிதான வழி. ஏனென்றால் நீங்கள் தரவைக் கொடுத்தால் உங்களிடம் மேலும் கேள்விகள் கேட்கப்படும். தரவு சரியாக இல்லை என்றால் மக்கள் கேள்விகளை எழுப்புவார்கள். இது நடக்கவில்லை மற்றும் தரவு இல்லை என்று சொல்வது சுலபம். பொறுப்பைத் தட்டிக்கழிக்க இதைவிட எளிதான வழி என்ன இருக்கமுடியும்?,"என்று வினவுகிறார் பெஸ்வாடா வில்சன் .

அரசு ஏற்காத இறப்புகள்

2019 ஜனவரியில், பிபிசி கிஷன் லாலின் மனைவி இந்து தேவியை சந்தித்தது. அவர் தனது மூன்று குழந்தைகளுடன் திமர்பூரில் உள்ள குடிசைப்பகுதியில் அமர்ந்திருந்தார். இந்த குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்த கிஷன்லால், சாக்கடை சுத்தம் செய்யும் போது இறந்துபோனார். சுத்தம் செய்யும் போது அவருக்கு ஒரு மூங்கில் குச்சி கூட கொடுக்கப்படவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

  • 2019 நவம்பர் 23 ஆம் தேதி விஷ வாயுவால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அசோக் என்ற துப்புரவாளர் இறந்தார் என்று ஓர் அரசு அறிக்கை கூறுகிறது. அசோக் டெல்லி ஷகூர்பூரில் ஒரு சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
  • 2019 ஜூன் 26 அன்று, ஹரியானாவின் ரோஹ்தக்கில் கழிவுநீரை சுத்தம் செய்யும் போது நான்கு துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • 2019 ஆகஸ்ட் 28 அன்று, உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் சாக்கடையை சுத்தம் செய்யும் போது நான்கு துப்புரவு தொழிலாளர்கள் இறந்தனர்.
  • 2020 பிப்ரவரியில் 24 வயதான ரவி , 15 அடி ஆழமுள்ள சாக்கடையை சுத்தம் செய்யும் போது இறந்தார். ரவி மற்றும் 35 வயதான சஞ்சய் ,டெல்லியின் ஷாஹதாரா பகுதியில் சாக்கடையை சுத்தம் செய்யும் வேலையைப் பெற்றனர், ஆனால் இந்த வேலையின்போது ரவி விஷ வாயு தாக்கி மூச்சுத் திணறி இறந்தார். சரியான நேரத்தில் சஞ்சய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் அவரது உயிர் எப்படியோ காப்பாற்றப்பட்டது.
  • மார்ச் 2021 மார்ச் மாதம் டெல்லி காஜிபூரில் உள்ள எம்பெரர் விருந்து மண்டபத்தின் சாக்கடையை சுத்தம் செய்யும் பணி லோகேஷ் மற்றும் பிரேம் சந்திற்கு வழங்கப்பட்டது . அவர்களுக்கு இந்த வேலைக்காக 1500 ரூபாய் கூலியும் பேசப்பட்டது. ஆனால் இருவரும் சாக்கடையில் மூச்சுத்திணறி இறந்தனர்.
  • 2021 மே 28 அன்று, 21 வயதான துப்புரவு தொழிலாளி ஒருவர் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் ஒப்பந்தக்காரரால் சாக்கடைக்குள் இறக்கப்பட்டதால் உயிரிழந்தார்.

சாக்கடை சுத்தம் செய்யும்போது இறந்துபோன சிலரின் பெயர்கள் இவை. இவ்வாறு இறந்தவர்களின் பட்டியல் நீளமானது. ஆனால் அரசு ஆவணங்களில் இவர்களுக்கு இடமில்லை.

அவர்களின் பெயர்கள் மட்டுமல்ல, அவர்களின் எண்களைக் கூட அரசு கணக்கில் கொள்வதில்லை. மத்திய அரசின்படி, அவர்களில் யாருமே கைகளால் மனிதக்கழிவுகளை அள்ளும்போதோ, பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும்போதோ இறக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :