பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்துக்கு பெட்ரோல் பாண்டுகள் தான் காரணமா? ஆனந்த் ஸ்ரீநிவாசன் விளக்கம்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
பெட்ரோல் டீசல் விலை

பட மூலாதாரம், PACIFIC PRESS

(பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிபிசி தமிழுக்கு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் அளித்த பேட்டியின் எழுத்து வடிவம் இது. இதில் இடம்பெற்றிருப்பவை அவரது சொந்தக் கருத்துகள்.)

உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கச்சா எண்ணையின் விலை கடந்த மார்ச் மாதத்திலிருந்து மிகவும் குறைய ஆரம்பித்தது. கச்சா எண்ணையின் விலை வெகுவாகக் குறைந்தபோதும் மத்திய அரசு விலையைக் குறைக்கவில்லை.

பதிலாக வரிகளை அதிகரித்தது. Futures சந்தையில் ஒரு கட்டத்தில் கச்சா எண்ணையின் விலை பூஜ்யம் என்ற நிலையைத் தொட்டது. Spot சந்தையில் 18 டாலர் வரை குறைந்தது.

அப்போதிருந்த வரிவிகிதத்தின்படி வரிகளை நீடித்திருந்தால், பெட்ரோலின் விலை இப்போது 40 ரூபாய் என்ற அளவில்தான் இருந்திருக்கும். ஆனால், மத்திய அரசின் வரி வருவாய் மிகக் குறைவாக இருந்ததால் பெட்ரோலுக்கு 32 ரூபாய் வரி விதித்தார்கள்.

இப்படி வரிகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது. அதாவது, அந்தக் கட்டத்தில் கார்ப்பரேட் வரி விகிதம் 40 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. கார்ப்பரேட் வரி 15 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டதால், வேறு எங்காவது வரிகளை உயர்த்தியாக வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.

அதற்கு பெட்ரோலியப் பொருட்கள்தான் எளிதான இலக்காக இருந்தன. இதில் வரியை வசூலிப்பதும் மிக எளிது. உலக அளவில் கச்சா எண்ணையின் விலை அவ்வளவு சீக்கிரம் உயராது என்று மத்திய அரசு நினைத்தது. ஆனால், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் பெட்ரோலியத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்தது.

பட மூலாதாரம், Reuters

விரைவிலேயே பெட்ரோலியத்தின் விலை, மார்ச்சுக்கு முந்தைய விலையையும் தாண்டி 75 டாலரைத் தொட்டது. விலை குறைந்தபோது வரியை உயர்த்தியவர்கள், விலை உயர்ந்தபோது வரியைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. அப்படிச் செய்தால், மறுபடியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியை உயர்த்தவேண்டும். இந்தக் காரணத்தால்தான் பொதுமக்கள் இவ்வளவு வரி செலுத்த வேண்டியிருக்கிறது.

இந்த மத்திய அரசைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள்தான் முக்கியமானதாக இருக்கிறது. ஒன்று, மதவெறியைத் தூண்டுவதன் மூலம் கிடைக்கும் வாக்குகள். இரண்டாவது தேர்தல் நிதிக்கான பாண்டுகள். இந்த பாண்டுகளில் 95 சதவீதம் ஒரு கட்சிக்குச் சென்றிருக்கிறது. இந்த பாண்டுகளை வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவிசெய்ய வேண்டும்.

ஆகவே அவர்களுக்கான வரியைக் குறைத்துவிட்டு, பெட்ரோலுக்கான வரியை உயர்த்தியிருக்கிறார்கள். ஆகவே வாக்களித்தவர்களுக்கு மதவெறி என்ற ஓபியமும் தேர்தலுக்கு நிதியளிப்பவர்களுக்கு வரிவிலக்கும்தான் இந்த ஆட்சியின் இரண்டு தூண்கள்.

பெட்ரோலிய பாண்ட்களை திரும்பிச் செலுத்துவதால் வரி உயர்கிறதா?

பட மூலாதாரம், ANAND SRINIVASAN FACEBOOK

பெட்ரோலிய பாண்டுகளை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு வாங்கியிருப்பதால், அவற்றை இந்த அரசு திரும்பச் செலுத்திவருகிறது. அதனால்தான் இவ்வளவு வரி வசூலிக்க வேண்டியிருக்கிறது என்று பா.ஜ.கவினர் சொல்வதில் உண்மையில்லை.

2018 ஆகஸ்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோலிய பாண்டுகளின் மதிப்பு எவ்வளவு என்பதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். மொத்த பெட்ரோல் பாண்டுகளின் மதிப்பு ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடிகள்தான். இந்த ஆண்டுதான் அவற்றைத் திரும்பச் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் மதிப்பு சுமார் ஐயாயிரம் கோடி.

2023, 2024, 2026ல் மீதமுள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடியைச் செலுத்த வேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு லட்சத்து என்பத்தாறாயிரம் கோடி பெட்ரோலில் இருந்து வரியாகக் கிடைத்திருக்கிறது.

2023, 2024, 2026ல் திரும்பச் செலுத்த வேண்டிய பாண்டுகளுக்காக ஏன் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடிக்கு மேல் முன்கூட்டியே வரி வசூல் செய்கிறீர்கள்...? இந்த வருடம் வசூல் செய்யும் பெட்ரோலிய வரி யாருக்குப் போகிறது? ஒட்டுமொத்தமாகவே ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள பாண்டுகளைத் திரும்பச் செலுத்த வருடாவருடம் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி வசூலிப்பது ஏன்? ஐந்து வருடத்தில் இப்படி வசூலிக்கப்படும் தொகை பத்து லட்சம் கோடி ரூபாய். எதற்காக இவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது?

பெட்ரோலின் விலையைக் குறைப்பதில் அக்கறை இருந்தால் மாநில அரசுகள் வரியைக் குறைக்க வேண்டியதுதானே எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், மாநில அரசுகள் எப்போதும் அதனுடைய வாட் வரி விகிதத்தை அதிகரிக்கவில்லை. மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி வரிப் பங்கீட்டை ஒழுங்காக ஏன் தரவில்லை? அதைத் தராமல், Act of God என்று சொன்னது யார்?

மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்துத் தர வேண்டிய ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி பணத்தை இதுவரை கொடுக்கவில்லை. இழப்பீட்டிற்கென வசூலிக்கப்பட்ட வரியை, ஒட்டுமொத்த நிதியில் சேர்த்தது குறித்து சிஏஜி கேள்வி எழுப்பியிருக்கிறது. அந்தப் பணத்தையெல்லாம் மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டு, பிறகு மாநிலங்களிடம் கேள்வி கேட்கலாம்.

பட மூலாதாரம், EPA

மாநிலங்கள் தங்கள் வரி விதிக்கும் உரிமையையே விட்டுக்கொடுத்திருக்கின்றன. விற்பனை வரி விதிக்கும் உரிமையை மாநிலங்கள் விட்டுக்கொடுத்தால் இழப்பீடு தருவதாகச் சொன்னார்கள். அதை இப்போது தர முடியவில்லை. இதைக் கேட்டால் கடன் வாங்கச் சொல்கிறீர்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு, இல்லாத பெட்ரோல் பாண்டிற்காக வரி வசூல் செய்வதாகச் சொல்வது பொய்.

எண்ணெய் நிறுவனங்களே தினமும் பெட்ரோலின் விலையை நிர்ணயிக்கும் முறை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது; அந்த முறை வந்ததால்தான் தினமும் பெட்ரோல் விலை உயர்கிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. அது சரியானதல்ல. அதிக வரி வசூல்தான் முக்கியப் பிரச்சனை. ஆப்பிரிக்க நாடுகளில்கூட இல்லாத அளவுக்கு இங்கு பெட்ரோலிலும் டீசலிலும் வரிவிதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் தினமும் 300 ரூபாய் சம்பாதித்தால் அதில் 100 ரூபாய் பெட்ரோல், டீசலுக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. இது எந்த ஊர் நியாயம்?

இன்று ஒரு ஆட்டோக்காரர் நூறு ரூபாய் செலுத்தி பெட்ரோல் போட்டால், அதில் வரி மட்டும் 60 ரூபாய். அவர் ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் பெட்ரோல் போட்டால் 300 ரூபாய் வரியாகச் செலுத்துகிறார். மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வரி செலுத்துகிறார். அதாவது தனது மாத சம்பாத்தியத்திறஅகு இணையாக அவர் வரி செலுத்துகிறார். ஆனால், 55 ஆயிரம் கோடி சம்பாதிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெறும் 3 சதவீதம் மட்டுமே வரி செலுத்துகின்றன.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கச்சா எண்ணையின் விலை 145 டாலருக்கு விற்பனையானது. இன்று 75 டாலருக்கு விற்பனையாகிறது. இருந்தும் பெட்ரோல் மீது பெரிய அளவில் வரி விதிக்கப்பட்டு, இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு பெட்ரோல் மீது விதிக்கும் வாட் வரியானது, மத்திய அரசு பெட்ரோல் மீது விதிக்கும் வரியையும் உள்ளடக்கிய விலைக்கே விதிக்கப்படுகிறது. ஆகவே மத்திய அரசு தனது வரியைக் குறைத்தால் மாநில அரசின் வரி தானே குறையும். பெட்ரோலின் விலையும் குறையும். அதுதான் தீர்வு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :