கொரோனா போலி தடுப்பூசிகள் இந்தியா, ஆப்பிரிக்காவில் உள்ளன: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

  • ஜோயா மடீன்
  • பிபிசி நியூஸ், டெல்லி
கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்துவதற்காகத் தயார்படுத்தும் சுகாதாரப் பணியாளர் ஒருவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி.

இந்தியா, ஆப்பிரிக்காவில் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போன்ற போலி தடுப்பூசிகள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த போலி தடுப்பூசி டோஸ்களை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அத்துடன், பறிமுதல் செய்யப்பட்டவை போலி தடுப்பூசி மருந்துகள்தான் என்று, கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய போலி தடுப்பூசிகள் "உலக பொது சுகாதாரத்துக்கு தீவிரமான இடர்பாட்டை" ஏற்படுத்தக்கூடியவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தகைய போலிகளை கண்டறிந்து அவற்றை அகற்றவேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

இந்திய அரசு இது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்திய சுகாதார அமைச்சகம் இது குறித்து விசாரணை செய்துகொண்டிருப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

"இது போல நடக்காமல் தடுப்பதற்கு எங்களிடம் வலுவான அமைப்பு உள்ளது. ஆனால், இது போல இப்போது நடந்துள்ள நிலையில், ஒரு இந்தியர்கூட போலித் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம்" என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு சுகாதாரத் துறை அலுவலர் மின்ட் செய்தித் தளத்திடம் கூறியுள்ளார்

ஆக்ஸ்ஃபோர்டு/அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிகமாக போடப்பட்டுள்ளது. 48.6 கோடி டோஸ் கோவிஷீல்டு டோஸ்கள் இதுவரை இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளன.

ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுக்கு கோடிக்கணக்கான கோவிஷீல்டு டோஸ்களை உற்பத்தி செய்து அனுப்பியுள்ளது சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா. நாடுகளோடு நேரடியாகப் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட உலகளாவிய திட்டமான கோவேக்ஸ் ஆகியவற்றின் கீழ் இந்த தடுப்பூசி டோஸ்கள் பல நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தடுப்பூசி - போலிகளால் புதிய சவால்.

இந்தியா தனது அண்டை நாடுகள் சிலவற்றுக்கு ராஜீய உறவை மேம்படுத்தும் நோக்கத்தோடு கோவிஷீல்டு தடுப்பூசியை அனுப்பியுள்ளது.

ஆனால், ஏப்ரல், மே மாதங்களில் மோசமாகத் தாக்கிய கொரோனா வைரசின் இரண்டாவது அலையைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்த விரும்பிய அரசாங்கம், தடுப்பூசி ஏற்றுமதிகளைத் தடை செய்தது.

அதையடுத்து இந்தியாவின் தேவைதான் தங்கள் முன்னுரிமை என்று கூறியது சீரம் நிறுவனம். இந்த ஆண்டு இறுதிவரை அவர்கள் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய வாய்ப்பில்லை.

உலகிலேயே கொரோனா வைரசால் இரண்டாவது மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. தனது குடிமக்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திவிடவேண்டும் என்று இலக்கு வைத்துள்ளது இந்தியா.

இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் இதுவரை இந்தியாவில் 13 சதவீதம் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: