கொடநாடு வழக்கு: எடப்பாடி பழனிசாமி அஞ்சுகிறாரா? மறு விசாரணையால் என்ன நடக்கும்?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

எடப்பாடி பழனிசாமி: அஞ்சுகிறாரா?

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அ.தி.மு.க தரப்பில் அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர். `இந்த வழக்கில் தனது குடும்ப உறுப்பினரை சேர்த்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார்' என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுகிறார்.

என்ன நடக்கிறது கொடநாடு வழக்கில்?

கொடநாட்டில் கொலை, கொள்ளை

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாக கொடநாடு காட்சி முனை உள்ளது.

கடந்த 1991-96 ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டதுதான் கொடநாடு எஸ்டேட். ஜெயலலிதாவின் மனதுக்கு நெருக்கமான பகுதியாகவும் கொடநாடு மாறிப் போனது. அ.தி.மு.க வரலாற்றில் கொடநாடு எஸ்டேட்டுக்கு பெரிய பங்கு உண்டு. முதல்வராக இருந்த காலகட்டத்திலும் எதிர்கட்சியாக இருந்தபோதும் பல முக்கிய முடிவுகளை இங்கிருந்தபடியே ஜெயலலிதா எடுத்திருக்கிறார். கொடநாடு எஸ்டேட்டின் சொத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ளனர்.

அப்படிப்பட்ட கொடநாட்டில், ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கூலிப்படை ஒன்று நுழைந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலா (2017 பிப்ரவரி 15) சிறை சென்ற நிலையில், இந்தச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தின்போது எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் கொல்லப்பட்டார்.

அங்கிருந்த கிருஷ்ணா பகதூர் என்ற மற்றொரு காவலாளியின் கை, கால்களை கட்டிப் போட்டு கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றினர். இந்த வழக்கில் 11 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அ.தி.மு.க தொண்டர்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்ட கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவம், அக்கட்சியினர் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுவும் எடப்பாடி ஆட்சியில் இது நடந்ததுதான் பல்வேறு கேள்விகளை எழ வைத்தது.

அடுத்தடுத்த மரணங்கள்!

இதன்பின்னர் நடந்த சம்பவங்கள், பரபரப்பான கிரைம் சினிமாவை பார்ப்பது போலவே இருந்தன. இந்த சம்பவத்தில் முக்கிய நபராகச் செயல்பட்டதாகக் கூறப்பட்ட கனகராஜ் என்பவர், ஜெயலலிதாவின் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர். அவர் சேலம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு நபரான சயான் என்பவர் சென்ற காரும் கேரளாவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சயானின் மனைவியும் மகளும் இறந்தனர். சயான் மட்டும் காயத்துடன் உயிர் தப்பினார். தொடர்ந்து, கொடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வந்த நடுஹட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

பட மூலாதாரம், mathew samuel/ facebook

படக்குறிப்பு,

சயான் (இடது) மற்றும் மனோஜ்

இந்த வழக்கின் முக்கிய சாட்சியான கிருஷ்ணா பகதூர் இருக்கும் இடமும் தற்போது வரையில் தெரியவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு தெகல்ஹா முன்னாள் ஆசிரியரான மேத்யூ சாமுவேல் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பேட்டியில், சயானும் அவரது நண்பருமான வாளையார் மனோஜும் பேசியிருந்தனர். அதில், கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாகக் கூறியிருந்தனர். இதற்காக, சயான், மனோஜ், மேத்யூ சாமுவேல் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்தன.

3 மணிநேர விசாரணை

இந்நிலையில், கொடநாடு வழக்கில் மீண்டும் மறு விசாரணையை தி.மு.க அரசு தொடங்கியுள்ளது.

கடந்த 13ஆம் தேதி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, `இந்த வழக்கை முதலில் இருந்தே விசாரிக்க வேண்டும்' என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு உதகை நீதிமன்றம் அனுமதியளித்ததால் மறு விசாரணையை நடத்துவதற்காக சயானுக்கு கோத்தகிரி போலீசார் அழைப்பாணையை அனுப்பினர்.

கடந்த 17ஆம் தேதி உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணைக்கு சயான் வந்திருந்தார். அவரிடம் மாவட்ட எஸ்.பி ஆசிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் உள்ளிட்டோர் விசாரணையை மேற்கொண்டனர். மாலை 6.30 மணி வரையில் சுமார் 3 மணிநேரம் நடந்த விசாரணையின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பாக பேசிய எஸ்.பி. ஆசிஷ் ராவத்தும், `அவர் கூறியதை பதிவு செய்து கொண்டோம்' என்று மட்டும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Kodanad Estate

படக்குறிப்பு,

கொடநாடு எஸ்டேட், முகப்பு வாயில்

அதேநேரம், கொடநாடு எஸ்டேட் வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுவதை விரும்பாத அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், இன்று சட்டசபையில் வெளிநடப்பு செய்தனர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.கவினரின் நடவடிக்கைகள் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல உள்ளன' என்றார்.

சந்திக்க மறுத்த சசிகலா!

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி கொடுத்திருக்கும் கொடநாடு வழக்கு விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஒருபுறம் இருந்தாலும், சசிகலா பிறந்தநாளை இன்று அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். `அ.தி.மு.கவின் மூன்றாம் தலைமுறையே' என அவரை அழைத்து சில பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பிறந்தநாளையொட்டி அவரைச் சந்திக்க சிலர் அனுமதி கேட்டபோது, `என்னைச் சந்திக்க யாரும் வர வேண்டாம்' என சசிகலா கூறியுள்ளார். அவரிடம் பூங்கொத்து கொடுப்பதற்காக வந்தவர்களிடமும், ` இவையெல்லாம் தேவையில்லை. எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள். அதுவே போதும்' எனக் கூறி அனுப்பியுள்ளதாகவும் அ.ம.மு.கவினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தில் செயல்படும் காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கி, சசிகலா பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு,

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல்

``கொடநாடு விவகாரத்தில் மறு விசாரணை நடப்பதால் என்ன நடக்கும்?" என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

``இந்த வழக்கில் மறு விசாரணை செய்வதற்கு நீதிபதி அனுமதி கொடுக்கலாம். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. இதனை குற்றவாளி கேட்டால், நீதிபதி கொடுப்பதற்கு வழியில்லை. மேலும் புலனாய்வு அதிகாரி கேட்டாலும் அனுமதி கொடுக்கலாம். இந்த விவகாரத்தில் சட்டப்படிதான் அனைத்தும் நடக்கின்றன. 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்ததில் இருந்தே இந்த விவகாரத்தில் மர்மம் உள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது.

எடப்பாடி அச்சப்படுவது ஏன்?

2019 ஆம் ஆண்டு தெகல்ஹாவில் பணிபுரிந்த மேத்யூ சாமுவேல் என்பவர் மேலும் சில விவரங்களை வெளிக்கொண்டு வந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நடந்து வந்தது. இன்னொரு ஆட்சி பதவிக்கு வரும்போதுதான் கிரிமினல் தொடர்புகள் வெளியில் வரும். அந்த வகையில், மறு விசாரணை நடப்பதாலேயே எடப்பாடியின் பெயர் சேர்க்கப்படும் என நான் நினைக்கவில்லை" என்கிறார்.

பட மூலாதாரம், @EPSTamilNadu Twitter page

படக்குறிப்பு,

ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுக்கு எடப்பாடி பழனிசாமி.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய ஷ்யாம், ``கொடநாடு வழக்கில் மறு விசாரணைக்கு எடப்பாடி ஏன் பயப்படுகிறார் என்றால் இந்த வழக்கில் சஜீவன் என்ற மர வியாபாரியின் பெயர் வந்து விடுமோ என்பதுதான் காரணம். சஜீவன் என்பவர் மீது மரக்கடத்தல் வழக்கு இருக்கிறது. அவருக்கு அ.தி.மு.கவில் மாநில வர்த்தக அணியில் பதவி கொடுத்துள்ளனர். கொடநாடு வழக்கில் அவர் பெயரும் அடிபடுகிறது.

இதே நபர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கும் மர வேலைகளைச் செய்து கொடுத்துள்ளார். எடப்பாடியின் சகோதரரோடு அவருக்கு நெருக்கம் உள்ளது. எனவே, இந்த வழக்கில் எடப்பாடியின் சகோதரர் சேர்க்கப்பட்டுவிடுவாரோ என எடப்பாடி தரப்பினர் அச்சப்படுகின்றனர். `புலன் விசாரணையில் சஜீவன் எதாவது பேசிவிடுவாரா?' என்ற அச்சத்தில் அ.தி.மு.கவினர் இதனை அரசியலாக மாற்றுகின்றனர். வரப் போகின்ற ஆபத்துகளுக்கு இப்போதே காரணம் தேடுவதாகத்தான் பார்க்கிறேன்" என்கிறார்.

சசிகலாவுக்கு லாபமா?

``இதன் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்?" என்றோம். `` இந்த வழக்கில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அழைப்பாணையை அனுப்பி அதனைப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டால்தான் சாட்சிகளைப் பதிவு செய்ய முடியும். குற்றப் பத்திரிகை என்பது இறுதியானது. அதற்கு முன்னதாக புலனாய்வு அதிகாரி திருப்தியடைவதைவிட, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிபதி திருப்தியடைய வேண்டும்.

பத்திரிகையாளர் மேத்யூ வெளியிட்ட வீடியோக்களுக்குப் பிறகு சயானையும் வாளையார் மனோஜையும் எடப்பாடி பழனிசாமி அரசு கைது செய்தது. அப்போது எழும்பூர் நீதிமன்றத்தில் அவர்களை ரிமாண்ட் செய்வதற்கு நீதிபதி மறுத்துவிட்டார். அவர்கள் மீது, கூட்டத்தைக் கூட்டி கலவரம் விளைவிக்க முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அப்படியானால், `என்ன கூட்டம்.. என்ன கலவரம்?' என நீதிபதி கேட்டார். ஏற்கெனவே, பிணையில் உள்ள ஒரு நபர் சில தகவல்களைக் கூறுகிறார்; பிணை நிபந்தனைகளை மீறுகிறார் என்பது வேறு விஷயம், அப்படியானால் பிணை கொடுத்த நீதிமன்றத்தில்தான் இவர்கள் முறையிட்டிருக்க வேண்டும். ஆனால், வேறொரு நீதிமன்றத்துக்கு சயானையும் மனோஜையும் கூட்டி வந்தனர். அங்கே ரிமாண்ட் கேட்பதில் அர்த்தம் இல்லை. மறுபடியும் எஃப்.ஐ.ஆரை திருத்திவிட்டு நீதிபதியின் வீட்டுக்கே போனபோதும் அவர் மறுத்துவிட்டார். அவர்கள் இருவரையும் சொந்த ஜாமீனில் செல்வதற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதுபோல் எந்தக் காலத்திலும் நடந்ததில்லை.

பட மூலாதாரம், Getty Images

தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் குளறுபடிகள் நடந்தன. சசிகலாவுக்கு இதனால் லாபம்தான். எடப்பாடி பழனிசாமி பலவீனப்பட்டால், அரசியல்ரீதியாக அவருக்கு லாபம். கொடநாடு வழக்கில் சசிகலாவை சேர்க்க முடியாது. அந்தநேரத்தில் அவர் சிறையில் இருந்தார். இதை வைத்து சசிகலா அரசியல் செய்ய முற்படலாம்" என்கிறார்.

கேள்வி கேட்டதற்கான பரிசா இது?

``தேர்தல் வாக்குறுதியாகக் கூறப்பட்டதைத்தானே நிறைவேற்றுகிறோம் என்கிறதே தி.மு.க?" என அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பு மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

``இது என்ன தேர்தல் வாக்குறுதியா? குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கட்டும், அதனை தேர்தல் வாக்குறுதியாக எடுத்துக் கொள்கிறோம். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு, 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி போன்றவற்றைச் சாத்தியப்படுத்தப்பட்டும். தேர்தல் வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என நாங்கள் கேட்டதற்கான பரிசா இது?" என்கிறார்.

மேலும், ``அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான் இவ்வாறு செய்கின்றனர். ஓர் எதிர்க்கட்சித் தலைவருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. `முன்னாள் முதலமைச்சரை வழக்கில் சேர்க்கப் போகிறோம்' என்று சொல்கிறார்கள் என்றால், யாரையும் இவர்கள் வழக்கில் சேர்ப்பார்கள் என்பதுதானே நிலைமையாக உள்ளது. யார் மீதும் பொய் வழக்கு போடலாம் என்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது," என்றார்.

``இந்த வழக்கில் சஜீவன் என்பவரோடு எடப்பாடி குடும்பத்துக்கு நெருக்கம் உள்ளதாகவும், அதன்பேரில் இ.பி.எஸ் குடும்பத்தினர் இந்த வழக்கில் சேர்க்கப்படலாம் என்றும் கூறுகிறார்களே?" என்றோம். ``அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை" என்றார் வைகைச்செலவன்.

சட்டம் கடமையை செய்யுமா?

``கொடநாடு வழக்கில் காழ்ப்புணர்ச்சியோடு தி.மு.க அரசு செயல்படுவதாக அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறதே?" என தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``கொடநாட்டில் மர்மமாக மரணம் நடந்தபோதும் சயான் குடும்பம் விபத்தில் இறந்தபோதும் ஊடகங்களில் வெளியான செய்திகள்தான் இவையெல்லாம். ஏதோ புதிதாக இந்த வழக்கை தி.மு.க அரசு கையில் எடுக்கவில்லை.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டி கொடுத்தனர். அப்போது அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. அவர்களைக் கைது செய்து அச்சுறுத்தப் பார்த்தனர். இப்போது சுதந்திரமாக கருத்துகளைச் சொல்வதற்கான சூழல் அமைந்துள்ளது. கொடநாடு வழக்கின் விசாரணையில் அவர்கள் சொல்லும் நபர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவார்கள்," என்கிறார்.

மேலும், ``யாராலும் நுழைய முடியாத ஜெயலலிதாவின் கொடநாடு கோட்டைக்குள் நுழைந்து கொள்ளையடித்துவிட்டுக் கொலை செய்துவிட்டுச் செல்கிறார்கள் என்றால் அப்போது ஆட்சியில் இருந்தது யார்? அப்போது என்ன நடந்தது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தைப் போலவே, கொடநாடு விவகாரத்தில் நடந்த உண்மைகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இதில் பழிவாங்கும் நடவடிக்கை எங்கே வந்தது? இந்த வழக்கை நீதிமன்றத்தில் அவர்கள் சட்டரீதியாகவே சந்திக்கட்டும்" என்கிறார்.

``கொடநாடு விவகாரத்தில் தி.மு.க அரசின் நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கும்போது அதுகுறித்து தகவல் தெரிவிப்பது சரியானதாக இருக்காது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: