சுகிர்தராணி, பாமா: தமிழ் தலித்திய எழுத்தாளர்கள் படைப்புகள் டெல்லி பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் - மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம்

  • அ.தா. பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்
சுகிர்தராணி

பட மூலாதாரம், Sukirtharani/FB

படக்குறிப்பு,

சுகிர்தராணி

ஒடுக்கப்பட்டோர் வாழ்க்கையை எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் சுகிர்தராணி, பாமா மற்றும் மறைந்த வங்க எழுத்தாளர் மகா ஸ்வேதாதேவி ஆகியோர் படைப்புகளை பி.ஏ. ஆங்கிலம் (ஹானர்ஸ்) படிப்புக்கான பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும் முடிவினை டெல்லி பல்கலைக்கழகம் எடுத்திருப்பது பரவலாக கண்டிக்கப்பட்டிருக்கிறது.

சுகிர்தராணியின் கைம்மாறு, என் உடல் ஆகிய தமிழ் கவிதைகள் லஷ்மி ஆம்ஸ்ட்ராங் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை. பாமாவின் சங்கதி என்ற படைப்பும் நீக்கப்பட்டிருக்கிறது.

மகா ஸ்வேதாதேவி எழுதிய 'திரௌபதி' என்ற படைப்பும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான முடிவை பல்கலைக்கழகத்தின் மேற்பார்வைக் குழு (ஓவர்சைட் கமிட்டி) எடுத்திருக்கிறது. பல்கலைக்கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விக் குழு உறுப்பினர்கள் 15 பேர் இந்த மாற்றத்துக்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தபோதும் அதையும் மீறி இந்த படைப்புகள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று ஆட்சேபனை தெரிவித்த கல்விக் குழு உறுப்பினர் மித்துராஜ் தூசியா என்பவர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படுவது, தொடர்ந்து ஜனநாயகபூர்வமாக பல மட்டங்களில் நடைபெறுகிறது. ஓராண்டுக்கு முன்பு சர்ச்சைக்கிடமான பாடத்திட்ட மாற்றங்களைப் பற்றி பரிசீலனை செய்வதற்காக இந்த மேற்பார்வைக் குழு கல்விக் குழுவினால் அமைக்கப்பட்டது. இந்த மேற்பார்வைக் குழுவுக்கு தாமாக எதனையும் மாற்றியமைக்கும் உரிமை இல்லை. 15 தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விக் குழு உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி ஆங்கிலப் பாடத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது" என்று மித்துராஜ் தூசியா கூறியிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஐந்தாவது செமஸ்டருக்கான பெண் எழுத்துகள் என்ற தாளுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாமா, சுகிர்தராணி ஆகிய தலித்திய எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஆதிக்க சாதி எழுத்தாளர் ரமாபாய் என்பவரின் படைப்புகள் சேர்க்கப்பட்டன. பிறகு, மகாஸ்வேதாதேவியின் புகழ் பெற்ற கதையான 'திரௌபதி'யை நீக்க பரிந்துரைக்கப்பட்டது" என்று ஒரு கல்விக் குழு உறுப்பினரின் ஆட்சேபனைக் குறிப்பு தெரிவிப்பதாக கூறியிருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.

இந்துத்துவ அரசியல் கண்ணோட்டத்தில் நீக்கம் - சுகிர்தராணி

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கவிஞர் சுகிர்தராணி, தமது கைம்மாறு கவிதை மலம் அள்ளும் தொழிலாளிகளின் வாழ்க்கையைப் பற்றியது என்றும் இத்தகைய படைப்புகளை நீக்குவது இந்துத்துவத்தின் அரசியல் கண்ணோட்டத்தில் இருந்தே செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

பெண் என்பவள் வீட்டுக்குள்ளே இருக்கவேண்டும், கணவனே கண்கண்ட தெய்வம் என்று போற்றவேண்டும் என்ற இந்துத்துவத்தின் பெண் குறித்த பார்வையும் இதற்குப் பின்னால் இருக்கிறது என்று கூறிய சுகிர்தராணி ஒருவேளை இதனை ஒடுக்கப்பட்டோர் அல்லாதவர்கள் எழுதியிருந்தால் அதை அனுமதித்திருப்பார்களோ என்றும் கேள்வி எழுப்பினார். ஒடுக்கப்பட்டவர்களே அவர்கள் வாழ்க்கை குறித்து எழுதுவது உறுத்தலாக இருந்திருக்கும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

பல்கலைக்கழகம் விளக்கம்

பி.ஏ. ஆங்கிலம், ஹானர்ஸ் படிப்புக்கான 5-வது செமஸ்டர் பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து ஊடகத்தில் வெளியான விமர்சனங்கள் "பிழையானது, அடிப்படையற்றது" என்று டெல்லி பல்கலைக்கழம் வெளியிட்ட ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

பாமா

தொடர்புடையவர்கள் ஈடுபட்டு, ஜனநாயக நடைமுறையின் ஊடாகவும், உரிய தளங்களில் தேவையான விவாதங்கள் நடத்தப்பட்டும்தான் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

பல்கலைக்கழக செயலான்மை குழுவால் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழு ஆங்கிலத் துறைத் தலைவருடன் விவாதித்தே குறிப்பிட்ட பாடத்திட்டத்தை இறுதி செய்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய, சர்வதேச அறிஞர்களின் படைப்புகளை அவர்களின் சாதி, மதப் பிரிவுகள் குறித்த அளவுகோல்கள் இல்லாமல் பன்முகத் தன்மையோடு, மாறுபட்ட படைப்புகளை உள்ளடக்கும் தன்மையோடு இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடும் அறிக்கை, மொழிப்படிப்பு ஒன்றில் சேர்க்கப்படும் இலக்கியப் பாடம் தனிப்பட்ட எவருடைய உணர்வையும் புண்படுத்தாத வகையில் கடந்த கால, நிகழ்கால சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளடக்கிய தன்மையோடு இருக்கவேண்டும் என்பதே பல்கலைக்கழகத்தின் கருத்து என்றும் தெரிவிக்கிறது.

மீண்டும் சேர்க்கவேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்த படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "பெண்ணுரிமை - ஒடுக்கப்பட்டோர் விடுதலை பேசும் பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நீக்கப்பட்டிருக்கின்றன. எழுத்துகளை அரசியல் - மதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் இந்த பாடத்திட்ட நீக்கத்தை கண்டித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் விடுத்த அறிக்கையில், "இந்துத்துவாவினர் பாரதிய ஜனதா கட்சியிடமுள்ள ஒன்றிய அரசதிகாரத்தைப் பயன்படுத்தி தமது கருத்தியலுக்கு இணங்காத வரலாறு அறிவியல் சமூகவியல், கலை இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவருகின்றனர்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

"இந்துத்துவாவினரது அரசதிகார அழுத்தத்திற்குப் பணிந்து எழுத்தாளர்கள் மஹாஸ்வேதாதேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதென்னும் டில்லி பல்கலைக்கழகத்தின் முடிவை ஏற்க முடியாது. நீக்கப்படுவதாய் அறிவிக்கப்பட்டுள்ள அப்பாடங்கள் பாடத்திட்டத்தில் தொடரவேண்டும் என்கிற முழக்கம் வலுப்பெற ஜனநாயத்தில் நம்பிக்கையுள்ள யாவரும் குரலெழுப்ப வேண்டுமென தமுஎகச கேட்டுக்கொள்கிறது" என்றும் அவர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

நீக்கப்பட்ட பாடங்கள் மீண்டும் சேர்க்கப்படவேண்டும் என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசனும் வலியுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :