மைசூரு கூட்டுப்பாலியல் வல்லுறவு: காட்டுப்பகுதியில் மாணவியிடம் வெறிச்செயல் - என்ன நடந்தது?

பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவில் சமீபத்திய ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான கூட்டுப்பாலியல் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், கர்நாடக மாநிலம், மைசூருவில் 23 வயது இந்திய மாணவி கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட அந்த மாணவி, பலத்த காயங்களுடன் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் கவலைக்கிடமாக இருந்த அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மைசூரு நகர காவல் ஆணையர் சந்திரகுப்தா பிபிசியிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவரது ஆண் நண்பரும் காயம் அடைந்துள்ளார். அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஐந்து பேரை தேடி வருவதாக காவல் ஆணையர் கூறினார்.

மைசூரு நகரில் உள்ள சாமுண்டி ஹில்ஸ் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த இடம் அதிக ஆள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதி. இயற்கை வனம் சூழ்ந்த இந்த பகுதிக்கு பெரும்பாலும் காதல் ஜோடிகள், தம்பதிகள், நண்பர்கள் வர ஆர்வம் காட்டுவர்.

மது போதையில் வெறிச்செயல்

இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூருவில் பிபிசி ஹிந்திக்காக செய்தி வழங்கும் இம்ரான் குரேஷி கூறும்போது, பாதிக்கப்பட்ட நபர் உள்ளூர் மேலாண்மை நிறுவனத்தில் படித்து வந்தவர் என்றும் லலித்புரா என்ற இடத்தில் இருந்து திரும்பி வந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் சிலர் தாக்கியதாகவும் தனக்கு தெரிய வந்துள்ளதாக கூறினார்.

இதற்கிடையே, கூட்டுப்பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், மாணவி மற்றும் ஆண் நண்பர் மீது மது பாட்டில்களால் அடித்த பிறகு அந்த பெண்ணை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகவும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் இந்த கும்பலின் நோக்கம் அவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாகவே இருந்தது என்றும் அதில் ஒருவர் பெண்ணின் ஆண் நண்பரை அடித்த பிறகு திடீரென அவர்கள் மனம் மாறி அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2018ஆம் ஆண்டில் பதிவான தரவுகளின்படி இந்தியாவில் 33,977 பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியிருக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேக நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சந்திரகுப்தா கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொண்டு விவரங்களை தெரிவிக்க இயலாது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

டெல்லி கூட்டுப்பாலியல் செயலை நினைவூட்டும் சம்பவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தரவுகளில் இடம்பெறும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் புகார்கள் அடிப்படையில் பதிவாகின்றன. நடைமுறையில் பல பாலியல் வல்லுறவு சம்பவங்கள் புகாராக பதிவாகாமலேயே போகின்றன என செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவப் படிப்பு மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது. வார்த்தைகளில் விவரிக்க முடியாத கொடுமைகளை அனுபவித்த அந்த பெண், படுகாயங்களுடன் மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

அந்த பெண்ணுக்கு அக்கொடுமை இழைக்கப்பட்டபோது, அவருடன் பேருந்தில் பயணம் செய்த ஆண் நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். அவரே அந்த பெண் கொலை வழக்கிலும் முக்கிய சாட்சியமாக இருந்தார். அந்த வழக்கில் சம்பவம் நடந்த நாளில் ஒருவர் பதினெட்டு வயதுக்கு கீழ் இருந்ததால், இந்திய சிறார் சட்டப்படி அவர் சிறார் கூர்நோக்கு பள்ளியில் நான்கு ஆண்டுகள் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஒருவர் நீதிமன்ற காவலில் இருந்த காலத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். மீதமுள்ள நான்கு பேரும் கடந்த ஆண்டு தூக்கிலிடப்பட்டு அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அந்த சம்பவத்துக்குப் பிறகு பாலியல் வன்கொடுமையை தடுக்க இந்திய நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு கொடுமைகளைத் தடுக்க 'நிர்பயா நிதியம்' என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது. ஆனால், அந்த நிதியை பல மாநில அரசுகள் சரிவர பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டது.

2018ஆம் ஆண்டில் பதிவான தரவுகளின்படி இந்தியாவில் 33,977 பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியிருக்கின்றன. இது சராசரியாக ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் சம்பவம் நாட்டில் நடப்பதை காட்டுவதாக உள்ளது என பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்காக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்த எண்ணிக்கை ஆவணங்களில் பதிவானவை மட்டுமே என்றும் நடைமுறையில் பல பாலியல் வல்லுறவு சம்பவங்கள் புகாராக பதிவாகாமலேயே போகின்றன என்றும் அந்த செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :