ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கின் அடுத்தகட்டம் என்ன? எடப்பாடி பழனிசாமிக்கு என்ன சிக்கல்?

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
கொடநாடு எஸ்டேட்

பட மூலாதாரம், Kodanad Estate

படக்குறிப்பு,

கோடநாடு எஸ்டேட், முகப்பு வாயில்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடைபெற்று வரும் மேலதிக விசாரணைகளால் அ.தி.மு.க நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ` இந்த வழக்கில் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களைத் திரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது' என்கின்றனர்.

தி.மு.க வட்டாரத்தில். என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் நடந்தது. இதில் ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார்.

இதுதொடர்பாக சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரும் 2019ஆம் ஆண்டு பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு அளித்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சயான் என்ன பேசினார்?

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி இந்தச் சம்பவம் நடந்ததாக இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து, மேத்யூ சாமுவேல் உள்பட மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கும் ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பட மூலாதாரம், Mathew samuel facebook

இந்நிலையில், தி.மு.க ஆட்சிக்கு வந்த நாள் முதலாக கொடநாடு விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத், டி.எஸ்.பி சுரேஷ் ஆகியோர் 3 மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், `சயான் என்ன பேசினார்?' என்பது தொடர்பான விவரங்கள் வெளிவரவில்லை.

தொடர்ந்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்த கனகராஜின் அண்ணன் தனபாலும் போலீஸ் விசாரணையில் ஆஜரானார். தொடக்கத்தில் இருந்தே, `என் சகோதரர் கனகராஜ் விபத்தில் மரணமடையவில்லை' என்பதை தனபால் வலியுறுத்தி வந்தார்.

இதன் நீட்சியாக, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நேற்று விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தபோது என்ன நடந்தது என்பது தொடர்பாக விரிவான தகவல்களை நடராஜன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு தெரிந்த உண்மைகள்

அதேநேரம், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அ.தி.மு.க நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தீபு, சதீஷன், சந்தோஷ் ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதில் நடராஜனை தவிர மற்றவர்களை விசாரிப்பதற்கு நீலகிரி நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Sasikala natarajan

அந்த மனுவில், `எஸ்டேட்டில் காணாமல் போன பொருள்கள் என்ன என்பது சசிகலாவுக்கும் இளவரசிக்கும்தான் தெரியும். இதில் வெளிப்படையான விசாரணையை புலனாய்வு அதிகாரிகள் மேற்கொள்ளாமல் விட்டுவிட்டனர்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், சசிகலா மற்றும் எடப்பாடியை விசாரிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்து மனுவில் தெளிவாகக் குறிப்பிடவில்லை எனச் சுட்டிக் காட்டிவிட்டு நீலகிரி நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வழக்கு வர உள்ளதால், `இந்த மனு தொடர்பாக காவல்துறை மூன்று வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்' எனக் கூறிவிட்டு வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தி.மு.கவின் நோக்கம் என்ன?

நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைகள் ஒருபுறம், காவல்துறையின் புலனாய்வு மறுபுறம் என கொடநாடு வழக்கு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஊட்டியில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மேற்கொள்ளப்பட்ட இரண்டரை மணிநேர விசாரணை, அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளை பதற்றத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க வழக்கறிஞர் ஒருவர், `` நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. இந்தநேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேலைகளில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கிலும் அ.தி.மு.கவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வேலைகளில் தி.மு.க ஈடுபட்டது. அந்த ஒரு சம்பவத்தை தி.மு.க தொடர்ந்து பேசுபொருளாக்கியது.

ஆனால், சட்டமன்றத் தேர்தலில் அங்கே அ.தி.மு.க வெற்றி பெற்றது. அதேபோல், கொடநாடு வழக்கிலும் எடப்பாடியின் பெயரைக் கெடுக்கும் வேலைகள் நடக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்த வழக்கை இழுத்தடிக்கும் வேலைகளை செய்ய உள்ளனர். சயான், தனபால், நடராஜன் என அடுத்தடுத்த விசாரணைகள் நடப்பதும் இதன் ஓர் அங்கம்தான். தன் மீதான புகாரை எடப்பாடி பழனிசாமி சட்டப்படி எதிர்கொள்வார்" என்கிறார்.

எஸ்டேட் மேலாளர் மீது என்ன சந்தேகம்?

``கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் மேலாளர் நடராஜனின் செயல்பாடுகளில் சில சந்தேகங்களும் உள்ளன. அப்படியொரு பிரமாண்ட பங்களாவில் அன்று இரவு காவலாளிகளைத் தவிர ஒருவர்கூட இல்லாமல் இருந்துள்ளனர். பங்களா பராமரிப்பு பணிகளுக்காக மட்டும் 15 பேர் தேவைப்படுவார்கள். கொள்ளைச் சம்பவம் நடந்த பிறகு சமையல்காரர்கள், வேலையாள்கள் என யாரையும் போலீசார் விசாரிக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு சம்பவம் நடந்த காலகட்டத்தில் நேரடியாக நடராஜன் வெளியில் வந்து விளக்கம் கொடுக்கவில்லை.

கொலைச் சம்பவம் நடந்தபோது எஸ்டேட்டுக்குள் வரும் மின்சார ட்ரான்ஸ்பார்மரில் இணைப்பு துண்டிப்பட்டிருக்கலாம். இதற்காக மின்வாரிய அதிகாரிகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. எஸ்டேட்டுக்குள் இருந்த நபர்கள் யாராவது மின்சார இணைப்பைத் துண்டித்திருக்க வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` கொடநாடு விவகாரத்தை முன்வைத்து எடப்பாடியை அச்சத்தில் வைத்திருப்பது மட்டும் தி.மு.கவின் நோக்கம் அல்ல. காரணம், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் நேரடித் தொடர்பு என்ன என்பதற்கு நமக்குத் தெரிந்து போதுமான ஆதாரங்கள் இல்லை. எஸ்டேட்டுக்குள் நுழைவதற்கு 10 நுழைவாயில்கள் உள்ளன. அங்கு செல்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளன. சோதனைச் சாவடிகளைத் தாண்டி நேரடியாக உள்ளே செல்ல முடியாது.

யாரோ ஒருவர் போன் செய்து, குற்றவாளிகள் வந்த வாகனங்களை விடுமாறு கூறியுள்ளனர்.

அந்த நபர் யார் என்பதில்தான் சந்தேகம் எழுகிறது. காவல்துறை முதல்வர் கையில் கையில் இருப்பதால் எடப்பாடி மீது சந்தேகம் வலுக்கிறது. இந்த விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம், `ஒன்றும் கவலை வேண்டாம். முதல்வர் நம்பக்கம் இருக்கிறார்' என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதை வைத்தும் எடப்பாடி பழனிசாமியின் பெயர் அடிபடுவதாகவும் பார்க்கலாம். யாரோ ஒருவர் சொல்வதை மட்டும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. அதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்க வேண்டும்" என்கிறார்.

கைது நடவடிக்கை சாத்தியமா?

மேலும், `` கொடநாடு விவகாரத்தில் எத்தனை சந்தேகங்கள் வந்தாலும் அனைத்துக்கும் முறையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.

எடப்பாடி பழனிசாமிக்கு என்ன சிக்கல்?

கொடநாடு வழக்கின் அடுத்தகட்டம் என்ன? இதில் எடுத்தவுடன் கைது நடவடிக்கையை நோக்கிச் செல்வதற்கு வாய்ப்பில்லை. பொதுவாக, கிரிமினல் வழக்கின் விசாரணையின்போது யார் மீது சந்தேகம் வந்தாலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணையை நடத்துவது வழக்கம். இந்த வழக்கில் அவ்வாறு செய்வதற்கு வாய்ப்பில்லை.

படக்குறிப்பு,

எடப்பாடி பழனிசாமி

காரணம், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த பிறகு மறு விசாரணை நடக்கவில்லை. தற்போது மேலதிக விசாரணைதான் நடைபெற்று வருகிறது. அதனால் பழைய எஃப்.ஐ.ஆர் அடிப்படையில்தான் மேலதிக விசாரணை நடைபெறுகிறது. எனவே, கைது நடவடிக்கையை நோக்கி உடனடியாக நகர்வதற்கும் வாய்ப்பில்லை" என்கிறார் ஷ்யாம்.

``பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போல இந்த வழக்கும் நீண்டு கொண்டே போகும் என அ.தி.மு.க வழக்கறிஞர்கள் தெரிவிக்கிறார்களே?" என்றோம். `` அப்படிப் பார்க்க முடியாது. 2017 ஆம் ஆண்டில் இருந்தே நாங்கள் இந்த வழக்கில் எழும் சந்தேகங்களை பேசி வருகிறோம். ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையில் உள்ள உடைசல்களை அடைக்கவில்லையென்றால் அதன் பலன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கிடைக்கும். சந்தேகத்துக்கு இடமில்லாமல் குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கடமை அரசுத் தரப்புக்கு உள்ளது. சிறு சந்தேகம் எழுந்தாலும் அது குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சாதகமாக மாறும். இதில் நிறைய சந்தேகங்கள் இருப்பதால் மேலதிக விசாரணை தேவைப்படுகிறது. இதை எப்படி இழுத்தடிப்பதாக கூற முடியும்?" என்கிறார்.

மேலும், `` ஒரு வழக்கில் சாதாரண மக்களுக்கும் நீதியை உணரவைப்பதுதான் முக்கியமானது. இதற்கு மேலதிக விசாரணை தேவைப்படுகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில், காவலாளி ஓம்பகதூர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாகக் கூறுகிறது. ஆனால், காவல்துறை அறிக்கையில் காயங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்தான் சந்தேகங்கள் எழுகின்றன. ஆகவே, முதல்கட்ட விசாரணை என்பது நீதிக் கோட்பாட்டுக்கு பொருத்தமானதாக இல்லை. அந்த அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது" என்கிறது.

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து, ``கொடநாடு வழக்கின் தொடர் விசாரணைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என அ.தி.மு.க மாநில செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. அரசின் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது" என்கிறார்.

இது அ.தி.மு.க தொண்டர்களின் குரல்

``காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் கொடநாடு வழக்கின் விசாரணை விரிவுபடுத்தப்படுகிறதா?" என தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` கொடநாடு வழக்கில் உண்மையான நீதி கிடைக்க வேண்டும், இறந்து போனவர்களின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். அக்கட்சியின் தொண்டர்கள் தலைவியாக மதித்த ஒருவரின் வீட்டில் நடந்த கொள்ளைக்கு முறையான விசாரணை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதனை மைத்ரேயனும் கே.சி.பழனிசாமிசாமியும் முன்வைத்துள்ளனர். இது அ.தி.மு.க தொண்டர்களின் குரல் என அவர்கள் சொல்கிறார்கள்" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது என்பது தவறான வாதம். உண்மையான குற்றவாளிகள் வெளியில் வந்துவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.கவினர் தெளிவாக உள்ளனர். அதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் சென்றனர். எங்களின் நோக்கம் என்பது உண்மை வெளியில் வர வேண்டும் என்பதில்தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கோரிக்கை வைக்க மாட்டார்கள். கொடநாடு வழக்கின் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது" என்றார் கண்ணதாசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :