'பிராமணர்களை அனுமதிக்காதீர்கள்" - தந்தை மீதே வழக்கு போடச் சொன்ன சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்

(இன்று 06.09.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.)

பிராமணர்கள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதற்கு ''சட்டம் அனைவருக்கும் மேலானது'' என்று முதல்வர் பூபேஷ் பாகெல் கூறியதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக பூபேஷ் பாகெல் பதவி வகிக்கிறார். இவரது தந்தை 86 வயதான நந்தகுமார் பாகெல், சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் சென்றிருந்தார்.

அங்கு நடந்த கிராம மக்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, ''இந்தியாவில் உள்ள அனைத்து கிராம மக்களிடமும் நான் ஒன்றை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். பிராமணர்களை உங்கள் கிராமத்துக்குள் அனுமதிக்காதீர்கள். மற்ற சமூகத்தினரிடமும் இதுகுறித்து பேசுவேன். எனவே, நாம் அனைவரும் பிராமணர்களை புறக்கணிக்க வேண்டும். அவர்களை மீண்டும் வோல்கா நதி பகுதிக்கே திருப்பி அனுப்ப வேண்டியது அவசியம்'' என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நந்த்குமார் மீது, 'சர்வ பிராமணர்கள் சமாஜ்' என்ற அமைப்பு டிடி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தது. அதன் அடிப்படையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்த்குமார் மீது காவலர்கள் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அவர் மீது 153ஏ (பல்வேறு சமூகத்தினருக்குள் பகைமையை உருவாக்குதல்), 505(1) (பி) (உள்நோக்கத்துடன் பயத்தை ஏற்படுத்துதல்) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நந்தகுமார் மகனும் சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பாகெல் "சட்டம் அனைவருக்கும் மேலானது. சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. அவர் 86 வயதான என் தந்தையாக இருந்தாலும், சட்டம் தான் பெரியது. சத்தீஸ்கர் அரசு அனைத்து மதம், பிரிவு, இன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது. ஆனால், குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு எதிராக எனது தந்தை பேசியது, மத நல்லிணக்கத்தை குலைப்பதாக உள்ளது. அவரது பேச்சால் நானும் வருத்தம் அடைந்தேன்" என கூறியுள்ளார்.

எங்கள்அரசியல் பார்வைகள் மற்றும் நம்பிக்கைகள் வேவ்வேறானவை. ஒரு மகன் என்ற முறையில் நான் எனது தந்தைக்கு மரியாதை அளிக்கிறேன். ஆனால், சத்தீஸ்கர் மாநில முதல்வராக, அவரது தவறை மன்னிக்க இயலாது எனவும் அவர் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தாலிபன் ஆட்சி அமைந்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது - பா.ஜ.க எம்.எல்.ஏ

பட மூலாதாரம், @BelladArvind, Twitter

படக்குறிப்பு,

அரவிந்த் பெல்லாட், கராநக பாஜக எம்.எ.ஏ

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

அதற்கு இந்திய அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு குறித்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தார்வார் மேற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் பெல்லத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு "ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி அமைந்து உள்ளது. இதன் காரணமாக தான் நமது நாட்டில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளது. எனவே, எரிபொருட்களின் விலை உயர்வு விஷயத்தில் இந்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தேவையற்றது"என கூறியுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

கிராமங்களில் மருத்துவா்களின் சேவையை கட்டாயமாக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவா்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியகுடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்வுக்கு முன்பு அவா்கள் கிராமப் பகுதிகளில் சேவை செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11-ஆவது மருத்துவ ஆசிரியா்கள் தின விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு பேசினார்.

அதில் "நாட்டில் உள்ள 60 சதவீத மக்கள் கிராமங்களில் வசிப்பதால், இளம் மருத்துவா்கள் ஊரகப் பகுதிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் சேவை செய்வது அவசியம். மருத்துவத் தொழில் உன்னதமான தொழில். மருத்துவா்கள் நாட்டுக்கு ஆா்வத்துடன் சேவையாற்ற வேண்டும்; தங்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் மனித குலத்துக்கான இரக்கத்தின் முக்கிய மதிப்பை நினைவில் கொள்ள வேண்டும்.

ஊரகப் பகுதிகளில் அதிநவீன சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பானது சிறந்த சுகாதாரக் கட்டமைப்பின் தேவையை உணா்த்தியுள்ளது. இதன் மீது மாநில அரசுகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டில் மருத்துவா் - நோயாளி விகிதத்தில் உள்ள இடைவெளியைப் போக்க மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும். மருத்துவா் - நோயாளி விகிதம் 1: 1,456 என்ற அளவில் உள்ளது. ஆனால் 1: 1000 அளவில் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கும் அரசின் திட்டம் பாராட்டுக்குரியது. மருத்துவப் படிப்பும் சிகிச்சையும் சாதாரண மக்களுக்கு கிடைக்கும் வகையில் மலிவாக இருக்க வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்" என பேசினார்.

முன்னதாக, பிரபல இதய நோய் நிபுணா் மற்றும் பொது சுகாதார அமைப்பின் தலைவா் மருத்துவா் கே.ஸ்ரீநாத் ரெட்டி, மருத்துவா் தேவி ஷெட்டி உள்பட பலருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதுகளை வெங்கையா நாயுடு வழங்கினாா் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :