கொரோனா: விளக்கேற்றி, பூ தூவி நன்றி தெரிவித்த நரேந்திர மோதி அரசு; இந்திய சுகாதார ஊழியர்களின் அவலம் - பிபிசி புலனாய்வு

  • ஜுகல் புரோஹித்
  • பிபிசி
மருத்துவர்கள்

பட மூலாதாரம், ANI

கோவிட்-19 சிகிச்சையின்போது தொழில்முறை சுகாதார பணியாளர்களாக பணியாற்றிய தங்கள் அன்புக்குரியவர்களை இழந்ததைத் தவிர 22 வயதாகும் மால்தி காங்வர் மற்றும் 56 வயதாகும் சுஜாதா பாவே ஆகியோருக்கு இடையே எந்த ஒற்றுமையும் கிடையாது.

வேண்டுமானால் அவர்களுக்கு இடையே இன்னொரு ஒற்றுமையைக் கூறலாம். முன்களப் பணியாளர்களான சுகாதார ஊழியர்களுடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம் என்று கூறிய அரசு அவர்களது இறப்புக்குப்பின் அவர்களின் குடும்பங்களை நடத்திய விதத்தால் இவர்கள் இருவருமே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே அந்த ஒற்றுமை.

இந்தியாவில் கொரோனா பெற்றுந்தொற்று தொடங்கிய காலத்தில் சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோதியால் தனிப்பட்ட வகையிலேயே உந்துதல் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக சாதாரண குடிமக்கள் தங்கள் வீட்டில் உள்ள பாத்திரங்களை வைத்து ஒலி எழுப்பவும், வீடுகளில் விளக்கேற்றவும் செய்தனர். சுகாதார ஊழியர்கள் மீது இந்திய ராணுவம் ஹெலிகாப்டரில் இருந்து மலர்களையும் தூவியது.

அத்தகைய சுகாதார ஊழியர்களின் குடும்பத்தினர் தற்போது எந்த நிலையில் உள்ளனர் என்பதை அறிந்துகொள்வதற்காக மருத்துவர்கள், மருத்துவ சங்கங்கள், ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கடைநிலை சுகாதார ஊழியர்களின் குடும்பங்கள் ஆகியோரை பல மாத காலம் நடந்த பிவிசி புலனாய்வுக்காகத் தொடர்பு கொள்ளப்பட்டது.

இந்தப் புலனாய்வுக்காக இந்திய அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன் அரசின் ஆவணங்களும் ஆராயப்பட்டன.

இழப்பை ஈடுசெய்ய முடியாமல் தவிப்பு

நாங்கள் முதலில் சென்றது டெல்லியிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு. உத்தர பிரதேச மாநிலம் பரேலி அருகே இருக்கிறது இந்த கிராமம்.

இங்குதான் நான் மால்தியை சந்தித்தேன். தன் வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டு தனது தாயார் இறப்புக்குப் பிந்தைய நாட்களில் நாட்களை அவர் நினைவு கூர்கிறார்.

"சுகாதாரத் துறையில் இருப்பவர்கள் உள்பட பலரும் எங்களை அழைத்தனர். என் தாயின் வேலையை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிற சுகாதார ஊழியர்கள் அறிவுறுத்தினர்; காப்பீட்டு தொகை குறித்து அவர்கள் கூறினார்கள்; அனைவருமே எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பு வழங்குவது போல தோன்றியது; என் அம்மாவின் வேலையை ஏற்றுக் கொள்வதற்காக என்னை ஒரு விண்ணப்பத்தையும் நிரப்பத் சொன்னார்கள். ஆனால் அதற்குப் பின்னர் என்ன ஆனது என்பது தெரியவில்லை."

பட மூலாதாரம், Malti Gangwar

படக்குறிப்பு,

மால்தி

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆஷா (Accredited Social Health Activist ) ஊழியராக இருந்த மால்தியின் தாய் சாந்தி தேவி இறந்து சுமார் 4 மாத காலம் ஆகிவிட்டது.

ஒன்றுக்கும் மேற்பட்ட முறை உதவி கேட்டு அரசை நாடியுள்ளதாக மால்தி கூறினார். ஆனால் இதுவரை இழப்பீடும் கிடைக்கவில்லை வேலையும் கிடைக்கவில்லை.

இந்தியாவின் பொது சுகாதார திட்டத்தின் கடைநிலையில், கிராம மட்டத்திலான ஆஷா ஊழியராக தமது 50 வயதுகளில் தொடக்கத்தில் இருந்த சாந்தி பணியாற்றினார்.

மிகவும் குறைந்த ஊதியத்தில் 25 ஆண்டு காலத்துக்கு மேல் அவர் அந்த பணியில் இருந்தார் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Shanti_Gangwar

படக்குறிப்பு,

மால்தியின் தாய் சாந்தி தேவி இறந்து சுமார் 4 மாத காலம் ஆகிவிட்டது

எங்களது குடும்பத்தின் பொருளாதார நிலைமை மிகவும் நன்றாக இல்லை. எங்களுக்கு இப்பொழுது எது கிடைத்தாலும் பரவாயில்லைதான் என்று சாந்தியின் சகோதரர் தெரிவித்தார்.

மும்பையில் உள்ள சுஜாதா பாவே தமது துயர் மிகுந்த நினைவுகளை அசை போடுகிறார். இவரது கணவர் மருத்துவர் சித்ரஞ்சன் பாவே காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணராக பணியாற்றிவந்தார். 2020ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் அவர் உயிரிழந்தார்.

அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியபோது பாதுகாப்பு அங்கியோ சிகிச்சைக்கான பயிற்சியோ அதிகாரிகளால் வழங்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Dr Chittaranjan Bhave

படக்குறிப்பு,

மருத்துவர் சித்ரஞ்சன் பாவே காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணராக பணியாற்றிவந்தார்

"முதலில் ஆன்லைன் வழியாகத்தான் அவரது நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்தார். ஆனால் காது-மூக்கு-தொண்டை சிகிச்சையை வீடியோ கால் மூலம் வழங்க இயலவில்லை என்பதால் அவர் நேரடியாக சென்று சிகிச்சை வழங்க தொடங்கினார். முதலில் தாம் கண்டிப்பாக நேரில் சென்று சிகிச்சை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தவர், பின்பு அவ்வாறே சிகிச்சை அளிக்க சென்றார்," என்று சுஜாதா கூறுகிறார்.

நேரில் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படத் தொடங்கின. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழலும் உண்டானது.

ஆனால் அதற்கு பின்பு அவரது குடும்பத்தினர் மருத்துவர் சித்ரஞ்சனை பார்க்கவே இல்லை. அவரது மரணத்துக்காக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கேட்டனர் ஆனால் அது மறுக்கப்பட்டது.

கொரோனா சிகிச்சை வார்டு என்று அரசு குறிப்பிட்டுள்ள வார்டில் அவர் பணியாற்றவில்லை என்பதாலும் அவரது தனியார் மருத்துவமனையில்தான் அவர் சிகிச்சை அளித்தார் என்பதாலும் அவருக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

"ஒரு நோயாளி எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை யார் முடிவு செய்யும் யாரால் முடிவு செய்ய முடியும்? பெரும்பாலான நேரங்களில் தாங்கள் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வரும் பொழுது அவர்களுக்கு கொரோனா இருப்பதே அந்த நோயாளிகளுக்கு தெரியாது. அரசு மருத்துவர்கள் மட்டும்தான் கொரோனாவை எதிர்கொண்டார்கள், தனியார் மருத்துவர்கள் அதை எதிர் கொள்ளவில்லை என்று நிச்சயமாகக் கூற முடியாது. இது நியாயமற்றது. இது ஒரு பாரபட்சம். நாங்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தோம்," என்று அவர் தொலைபேசி வாயிலாக என்னிடம் தெரிவித்தார்.

மால்தி மற்றும் சுஜாதா போல இன்னும் பல குடும்பங்கள் பிபிசியிடம் பேசின. ஆனால் மிகச் சிலரே பேட்டி அளிப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.

வெளிப்படையாக பேசுவது தங்களுக்கு இழப்பீடு வழங்குவதை பாதிக்கக்கூடும் என்று அவர்கள் அச்சப்பட்டனர்.

இந்த குடும்பங்கள் ஏன் போராடுகின்றன?

மார்ச் 26, 2020 அன்று மோதி அரசு ஒரு சுகாதார காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது. அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த சுகாதார பணியாளர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு நிறுவனத்தால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்பது இந்திய அரசின் திட்டம்.

இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது சுகாதார ஊழியர்களை, "வெள்ளை நிறச் சீருடையில் இருக்கும் கடவுள்கள்" என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விவரித்தார்.

இதேவேளை, இந்த ஆண்டு ஜூலை மாதம் கோவிட்-19 உடனான போராட்டத்தின்போது உயிரிழந்த சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை பற்றிய தரவுகளை தெரிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் கேட்டனர். அதற்கு அரசு அளித்த பதில் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது.

அந்த பதில் என்ன தெரியுமா?

"அத்தகைய தரவுகள் எதையும் அரசு சேகரிக்கவில்லை," என்பதுதான்.

ஆனால் மேற்கூறியுள்ள காப்பீட்டு திட்டத்தின்படி அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.

2020ஆம் ஆண்டு, மார்ச் முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 16 வரை 921 சுகாதார பணியாளர்களின் உயிரிழந்த சுகாதார குடும்பங்களின் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக அரசுக்கு 1342 இழப்பீட்டு கோரிக்கை விண்ணப்பங்கள் வந்துள்ளன. மீதமுள்ள 421 விண்ணப்பங்கள் தற்போது நடவடிக்கையின் கீழ் உள்ளன அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய நடைமுறைகளில் தாமதம் இருப்பதை ஒப்புக்கொண்ட அரசு, கடந்த மே 3ஆம் தேதி இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகளை சீராக்கியது.

இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையாக 2020ஆம் ஆண்டு மே 29 முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை 8 வரை 663 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை இந்திய அரசு வழங்கியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பல்வேறு தரவுகள் காட்டுகின்றன.

பட மூலாதாரம், Ani

படக்குறிப்பு,

சுகாதார ஊழியர்களுக்காக வானில் இருந்து பூக்களைத் தூவும் ஹெலிகாப்டர்

இந்தத் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் கடந்த மே 3க்கு பிறகு வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் இல்லாதபோது எவ்வாறு அவர்கள் உயிரிழந்த சுகாதார ஊழியர்களின் குடும்பங்களை அணுகி அவர்களில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது என்பது குறித்த கேள்விகளுக்கு இந்திய அரசு பதில் எதையும் வழங்கவில்லை.

இந்த காப்பீட்டு திட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது? பெரும்பாலானவர்களை சென்றடையும் வகையில் காப்பீட்டு நிறுவனங்களிடம் ஏலம் கோரப்பட்ட இல்லையா? போன்ற தகவல்கள் ஆர்டிஐ விண்ணப்பத்தின் கீழ் கேட்கப்பட்டபோது அரசாங்கம் அது குறித்து தெளிவான தகவல் எதையும் வழங்கவில்லை.

அரசு தனியார் வேறுபாடுகள் ஏன்?

அரசு வழங்கியுள்ள இழப்பீடு தொள்ளாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களை சென்றடைந்துள்ளது. ஆனால் மிகவும் சாதாரணமான ஒரு கணக்கீடு சுகாதார பணியாளர்கள் 1800க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதைக் காட்டுகிறது.

உயிரிழந்த பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் இழப்பீடு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் இடையே வேறுபாடுகள் இருப்பது ஏன்? இதற்குக் காரணம் அரசின் காப்பீட்டு திட்டம், பணியின் போது உயிரிழந்த அரசு சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்குகிறது அல்லது அரசுக்காக பணியாற்றிய தனியார் ஊழியர்களுக்கு இந்த காப்பீடு வழங்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கியவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

அதாவது அரசின் அங்கீகாரம் இல்லாவிட்டால் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக பணியாற்றி இருந்தாலும், உயிரிழந்த சுகாதார ஊழியரின் குடும்பத்தினரால் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியாது.

அரசு தங்களை இவ்வாறு கையாளக் கூடாது என்று கூறுகிறார் ஆக்ராவிலுள்ள மருத்துவர் டாக்டர் மது ராஜ்பால். இவரது கணவர் டாக்டர் வி.கே. ராஜ்பால் ஒரு தனியார் மருத்துவர். இரண்டாம் அலையின் போது அவர் உயிரிழந்தார்.

பட மூலாதாரம், Madhu_Rajpal

படக்குறிப்பு,

இறந்த கணவர் வி.கே. ராஜ்பாலின் புகைப்படுத்துடன் மது ராஜ்பால்

"எனது கணவருக்கு 67 வயது. ஆனால் அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். எங்களது நோயாளிகளை எங்களால் கவனிக்காமல் இருக்க முடியாது. எங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். எங்கள் குடும்பத்திற்கு பணம் ஈட்டி வந்த ஒரு நபரை நாங்கள் இழந்துள்ளோம். இதனால் பல பிரச்னைகள் உண்டாகும். அரசு மருத்துவர்களுக்கு இழப்பீடு வழங்குவதும் தனியார் மருத்துவக் காப்பீடு வழங்கப்படாமல் இருப்பதும் சரியல்ல. அனைவரையும் அரசு சமமாகப் பார்க்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

தேவையான ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தாலும் அதிகாரிகளிடமிருந்து இன்னும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று மது ராஜ்பால் கூறுகிறார்.

டாக்டர் ராஜ்பால் போல பல தனியார் மருத்துவர்களும் இதுபோலவே நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

மருத்துவ ஆலோசகர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த மருத்துவர் மருத்துவர் நீலிமா வைத்தியா பாமரே.

"தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக நோயாளிகளை அனுமதிக்கவில்லை என்றால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அது ஓர் அச்சுறுத்தல் தானே. நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை அதனால் இழக்க நேரிடும். தங்களது உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்று அரசு உணர்ந்தால் தனியார் மருத்துவமனைகள் உள்நுழைய வேண்டியிருந்தது. இருந்தாலும் கூட அரசின் உதவிகளை இழப்பீடு வழங்குவதையும் எங்களுக்கு தருவதில்லை. இது நியாயமற்றது இல்லையா? அரசு கவனிக்கவே இல்லை என்பதால் நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது," என்கிறார் அவர்.

நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை

நவம்பர் 2020இல் கோவிட் -19 தொற்று மேலாண்மை குறித்த அறிக்கை இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட சிகிச்சைக்கான அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான இடங்கள் காலியாக இருப்பதால், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நம்பியிருக்க வேண்டிய சூழல் உண்டானது என்று இந்திய பொது சுகாதார கட்டமைப்பு குறித்து அந்த அறிக்கை தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images

அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் போதுமான ஊதியம் நிதியுதவிகள் மற்றும் காப்பீடு வழங்கப்பட வேண்டும்; தொற்றுடன் போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவர்கள் தியாகிகளாக அங்கீகரிக்கப்பட்ட அவர்களது குடும்பத்திற்கு போதுமான வகையில் போதுமான அளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.

ஆனால் இதன் பின்னரும் அரசின் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.

இந்த சூழ்நிலையை இந்திய மருத்துவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அறிவதற்காக இந்திய மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெயேஷ் லீலேவை தொடர்புகொண்டது பிபிசி.

பட மூலாதாரம், jayesh_Lele

படக்குறிப்பு,

டாக்டர் ஜெயேஷ் லீலே

"அரசு போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை; தரவுகளை சேகரிப்பதில் நிச்சயமாக குறைபாடு உள்ளது;கிராமப்புற பகுதிகள் உள்பட எங்களுக்கு நாடு முழுவதும் 1,700 கிளைகள் உள்ளன. இவற்றின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை அரசிடம் நாங்கள் சமர்ப்பித்தோம். இதுவரை உயிரிழந்த 1600 மருத்துவர்களில் சுமார் 200 பேரின் குடும்பத்துக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன அல்லது விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது தாமதமாகிறது. தகுதியானவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

"எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. தடுப்பூசிகளுக்கு மிகவும் அதிகமாக நாம் செலவு செய்கிறோம். உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது நம் நாட்டில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் கோடிக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளித்த நமது சுகாதாரப் பணியாளர்கள். ஆனால் அவர்களை புறக்கணிக்கும் வகையில் நடத்துவது மிகவும் வருந்தத்தக்கது. மருத்துவர்களுக்கு இந்திய பிரதமர் அதிகம் மரியாதை கொடுத்தார். ஆனால் அதனால் என்ன விளைவுகள் உண்டானது? அதன் தாக்கங்களை அறிந்து கொள்வதற்கு நான் ஆவலாக உள்ளேன்," என்று அவர் கூறுகிறார்.

இந்திய அரசால்இப்போது என்ன செய்ய முடியும்?

இந்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் மிகவும் 'கட்டுப்பாடுகளை விதிக்கும்' வகையில் உள்ளது என்று இந்தியாவின் முன்னாள் சுகாதார செயலாளர் கே. சுஜாதா ராவ் கூறுகிறார்.

"சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமல்லாமல் ஒப்பந்த ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயானங்களில் பணியாற்றுவோர் என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இந்த காப்பீட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். காப்பீடு பெறுவதற்கான தகுதி அனைவரையும் உள்ளடக்கும் வகையில் இருக்க வேண்டும். வேறு யாரையும் விட அதிகமான முன்னுரிமை கொடுக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டியவர்கள் நமது சுகாதார ஊழியர்கள். அவர்கள் தனியார் துறையில் பணியாற்றினாலும் அரசு துறையில் பணியாற்றினாலும் அவர்களுக்காக பெரிய இதயத்துடன் அரசு செயல்பட வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் அது நடப்பதாக தெரியவில்லை," என்கிறார் அவர்.

கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களை முழுமையாக எண்ணுவதற்கான திட்டம் அல்லது இழப்பீட்டு திட்டத்தை மேலும் விரிவாக வதற்கான கொள்கை எதுவும் வகுக்கப்படுமா என்று தெரிந்து கொள்வதற்காக இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தை பிபிசி தொடர்பு கொண்டது.

அவர்கள் இதுவரை பிபிசிக்கு பதிலளிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :