பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் - அதிர்ச்சி தரும் ஆய்வு

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
தலித் படுகொலைகள்

பட மூலாதாரம், @gavastk

படக்குறிப்பு,

அரக்கோணம் சோகனூரில் தலித் இளைஞர்களை படுகொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரின் போராட்டம்.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக 'எவிடென்ஸ்' என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,' என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர்.

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2020 வரையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுதொடர்பான தகவல் பெறப்பட்டிருக்கிறது. கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்தத் தகவல்களை எவிடென்ஸ் அமைப்பு திரட்டி வந்துள்ளது.

`` தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களிலிருந்து எஸ்.சி, எஸ்.டி கொலைகள் குறித்த தகவல் பெறப்பட்டிருக்கிறது. தகவல் பெறப்பட்ட 33 மாவட்டங்களில் 300 எஸ்.சி, எஸ்.டி மக்கள் சாதிரீதியாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் அளிக்காத 5 மாவட்டங்களையும் கணக்கிட்டு பார்த்தால் இந்த படுகொலை 340 முதல் 350 வரையில் நடந்திருக்கும் எனக் கணிக்க முடிகிறது," என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

தொடர்ந்து பேசுகையில், `` மாதம் ஒன்றுக்கு சராசரியாக 5 முதல் 6 சாதி படுகொலைகளால் தலித் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் 29 படுகொலைகள் தூத்துக்குடி மாவட்டத்திலும் 28 கொலைகள் மதுரை மாவட்டத்திலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 கொலைகளும் நாகப்பட்டினத்தில் 19 கொலைகளும் கோயம்புத்தூரில் 17 கொலைகளும் நடந்துள்ளன.

இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் மார்ச் 2021 வரையில் தகவல்கள் கொடுத்துள்ளனர். அண்மையில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிந்திருக்கிறது. அப்படி பார்க்கும்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி என்று கணக்கிட்டுப் பார்த்தால் 34 சாதிய படுகொலைகள் நடந்திருக்கின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தனியாக பிரிக்க முடியாத நிலையில் வைத்து பார்த்தால் விழுப்புரம் மாவட்டம்தான் கடந்த ஆண்டு வரை முதலிடத்தில் இருந்திருக்கிறது," என்கிறார்.

மேலும், ``இந்த 300 படுகொலைகளில் 13 கொலைகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளன. 30 கொலை சம்பவங்களில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிற 257 சம்பவங்களில் 28 சம்பவங்கள் காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ளன. மற்ற 229 சம்பவங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் தீர்ப்பு கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் 2016 முதல் 2020 வரை கணக்கிட்டுப் பார்த்தால் 86 சதவிகித வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் இருக்கின்றன. சட்டத்தின் அடிப்படையில் அனைத்து வழக்குகளுக்குமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2019 டிசம்பர் வரையிலான வழக்குகளிலாவது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவை வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது," என்கிறார்.

`` படுகொலை வழக்குகளில் நீதிமன்ற விசாரணை விரைந்து முடிக்க வேண்டும். இந்த வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க கூடாது, அதிலும் தரமான விசாரணையாக இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையில்தான் தனி நீதிபதிகளுடன் தனி அரசு குற்ற வழக்கறிஞருடன் தனி கட்டடத்துடன் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குகளில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் நீதிமன்றம் அமைக்கப்படவில்லை. ஐம்பது சதவிகித நீதிமன்றங்களே அமைக்கப்பட்டுள்ளன. எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடந்த பின்பும் குறைவான நீதிமன்றங்களே இருப்பதால்தான் நீதியினை வழங்க முடியவில்லை," என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

பட மூலாதாரம், Kathir

படக்குறிப்பு,

கதிர்

தொடர்ந்து தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசும் கதிர், ``கடந்த 2021 ஜுலை மாதம் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதி 19ன் படி மாநில அளவிலான உயர்மட்டக் கண்காணிப்பு விழிப்புணர்வு குழுவினை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி அமைத்தார். இந்தியாவில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு 63 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வருடத்துக்கு 2 முறை கூட்டப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 2020 வரையிலான 30 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே கூட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்த குழுவை வலுவான குழுவாக மாற்றுவோம் என்று முதல்வர் கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது," என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், ``இந்த குழுவில் சட்ட விதிகளை அமலாக்கம் செய்வது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் செயலாக்கத்தை ஆய்வு செய்வது, பாதிக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் நீதி கிடைக்க செய்வது, பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுகளின் நிலை, இச்சட்டத்தை செயல்படுத்தும் பல்வேறு அலுவலர்களின், நிறுவனங்களின், குழுக்களின் செயல்பாடுகள் என்று பல நிலைகளில் ஆய்வு நடத்தப்படும். வன்கொடுமை வழக்குகளில் தண்டனை சதவிகிதம் குறைவாக கிடைக்கின்றன என்பது ஒரு பக்கம் இருந்தாலும் சாதிய வன்கொடுமை கொலைச் சம்பவங்களுக்குகூட தண்டனை சதவிகிதம் குறைவாக இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரத்தில் சட்ட தலையீட்டினை விரிவாக ஆய்வு செய்து நீதி கிடைப்பதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை, ஓய்வூதியம், வேளாண் நிலம் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டுமென்று சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெரும்பாலும் கிடைக்கிறதே தவிர அரசு வேலையும் வேளான் நிலமும் முறையாக கொடுக்கப்படுவதில்லை. இதுபோன்று படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலையும் வேளான் நிலமும் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2020 டிசம்பர் வரை நடந்த சாதிய படுகொலைகளின் வழக்கினை அடுத்த 6 மாதத்திற்குள் தீர்ப்பு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :