காந்தி 100 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் மேலாடையை துறந்தது ஏன்?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
காந்தியடிகள்

பட மூலாதாரம், KEYSTONE-FRANCE/GAMMA-KEYSTONE VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

காந்தியடிகள்

(காந்தியின் அடையாளமாகிப் போன அரையாடை அவர் மதுரை வந்திருந்தபோது மேற்கொண்டது. காந்தியின் பிறந்த நாளான இன்று அது தொடர்பான வரலாற்றைக் கூறும் இந்தக் கட்டுரையை மறு வெளியீடு செய்கிறோம்.)

காந்தி தனது மேலாடையைக் கைவிட்டு, அரையாடை மட்டும் உடுத்தியது அவரது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான ஒரு தருணம். அவர் அரையாடை பூண்டு இன்றோடு நூறாண்டுகளாகியிருக்கும் நிலையில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்கிறது இந்தக் கட்டுரை.

மகாத்மா காந்தி இனிமேல் மேலாடை அணிவதில்லை என்றும் அரையாடை மட்டுமே அணியப்போவதாகவும் முடிவுசெய்து, அதன்படி அரையாடையுடன் தோன்றிய நகரம் மதுரை. அவர் அந்த ஆடைக்கு மாறிய வீடு, முதன் முதலில் அரையாடையுடன் தோன்றிய இடம் போன்றவை இன்னமும் அந்நகர மக்களால் நினைவுகூரப்படுகின்றன.

மகாத்மா காந்தி 1896லிருந்து 1946வரை 20 முறை தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதில் எட்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்தது 1921 செப்டம்பரில். அப்போதுதான் இந்த நிகழ்வு நடந்தது.

காந்தி தமிழ்நாட்டில் மேற்கொண்ட பயணங்களின்போது நடந்த சம்பவங்கள், அவர் சந்தித்த மனிதர்கள் ஆகியவற்றை மிக விரிவான முறையில் காந்திய அறிஞரான அ. ராமசாமி தொகுத்து, ‘தமிழ்நாட்டில் காந்தி‘ என்கிற பெயரில் வெளியிட்டிருக்கிறார். 1969ல் இந்த நூல் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தில் காந்தி அரையாடைக்கு மாறிய தகவல்கள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

காந்தியின் மதுரை பயணம்

படக்குறிப்பு,

காந்தி முழு ஆடையை விட்டுவிட்டு, அரையாடைக்கு மாறிய ராம்ஜி கல்யாண்ஜியின் இல்லம் இருந்த கட்டடம். தற்போது அங்கு காதி கிராஃப்ட் இயங்கி வருகிறது.

1921 செப்டம்பர் 15ஆம் தேதியன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திறங்கிய காந்தி, அதற்குப் பிறகு பரங்கிப்பேட்டை, கடலூர், கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரையைச் சென்றடைந்தார்.

காந்தி வரப்போகிறார் என்பதால், சில நாட்களாக மதுரையே உற்சாகமாக இருந்தது. இது குறித்து அ. ராமசாமியின் நூல் பின்வருமாறு விவரிக்கிறது: "கதரைக் கட்டிக்கொண்டு அவரக் காண வேண்டும் என்று மக்களுக்குக் கட்டுக்கடங்காத ஆவல். தையல் கடைக்காரர்களுக்கு குல்லாய்களும் சட்டைகளும் தைப்பதில் நல்ல வேலை கிடைத்தது. கதர் வேட்டிகளும் நிறைய விற்பனையாயின. அநேகர் கதரிலேயே ரவிக்கை தைத்துக்கொண்டார்கள். திராவிட சங்கம் சும்மாயிருக்குமா? காந்திஜியின் வரவேற்பில் திராவிட மக்கள் பங்குகொள்ள வேண்டாமென்று ஒரு சுற்றறிக்கையை வழங்கியது".

காந்தி மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது ரயில் நிலையத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருந்தார்கள். காந்தியைக் காரில் அமரவைத்து மதுரைக் கல்லூரி மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். வழியெல்லாம் கூட்டம் இருந்தது. பொதுக் கூட்டத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேல் மக்கள் கூடியிருந்தார்கள். கூட்டத்தினர் போட்ட சத்தத்தில் காந்தி பேசியது கேட்கவேயில்லை. இந்தக் கூட்டத்தில்தான் காமராஜர் முதன் முதலாகக் காந்தியைப் பார்த்திருக்கிறார்.

கூட்டத்தினர் போட்ட சத்தம் காந்தியை மிகவும் புண்படுத்தியிருக்க வேண்டும். பேச்சை மிகச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். அந்தச் சுருக்கமான பேச்சும் கூட்டத்தினர் போட்ட சத்தம் பற்றித்தான். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு மதுரை மேலமாசி வீதியில் உள்ள ராம்ஜி கல்யாண்ஜி என்பவரது வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்

இதற்கு அடுத்த நாள், அதாவது 1921 செப்டம்பர் 22ஆம் தேதிதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நடவடிக்கையை காந்தி மேற்கொண்டார். சட்டையில்லாமல் அரையாடை புனைந்து அவர் பொது நடவடிக்கைகளுக்கு வந்தது இன்றுதான். சட்டையில்லாது இடுப்பில் ஒரு துணி மட்டும் அணிந்துகொண்டுதான் பின்னால் அவர், வைசிராய்களையும் பேரரரசர்களையும் சர்வாதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்.

செப்டம்பர் 22ஆம் தேதி காலையில் எழுந்து புறப்படும்போது, தன் அருகில் இருந்த விருதுநகர் பழனிக்குமாரு பிள்ளை என்ற தேசியத் தொண்டரை வேட்டியைப் பிடிக்கச் சொல்லி மடித்துக் கட்டினார். சட்டை அணியாமல் அந்த வேட்டியுடன் மட்டும் காந்தி பொட்டலில் நடந்த கூட்டத்திற்குச் சென்றார்.

காந்தி தனது ஆடையைக் குறைத்துக்கொண்டவுடன் பொதுமக்கள் வியப்புடன் மகாத்மாவை உற்று நோக்கினார்கள். ராஜாஜி, டாக்டர் ராஜன் போன்று காந்தியுடன் சென்ற தலைவர்கள், பொதுமக்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று உன்னிப்பாக கவனித்தார்கள்.

முதல் நாள் காந்தியை தலைப்பாகை, அங்கவஸ்திரத்துடன் பார்த்தவர்கள், மறுநாள் வெறும் இடுப்பு வேட்டியுடன் பார்த்தபோது மிகவும் வியப்படைந்தனர். இந்தக் கூட்டங்களுக்கு டி.ஆர். பத்மநாப ஐயர், கிருஷ்ண குந்து ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அங்கு கூடியிருந்த நெசவுத் தொழில் செய்யும் மக்களிடம் (சௌராஷ்டிர மக்கள்) குடிப்பழக்கம் இருப்பதை அறிந்த காந்தி, அவற்றை விட்டுவிட வேண்டுமென அறிவுரை கூறினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு மேலூர், திருப்பத்தூருக்குப் சென்றார்.

காந்தியின் இந்தச் செயலை அந்தக் காலத்தில் பத்திரிகைகள் ஒரு செய்தியாகக்கூட வெளியிடவில்லை. இந்துவும் சுதேசமித்திரனும் இது குறித்து காந்தி விடுத்த அறிக்கையை வெளியிட்டிருந்தன. இது குறித்து "என்னுடைய முழத் துண்டு" என்ற தலைப்பில் காந்தியே நவஜீவன் இதழில் விரிவாக எழுதினார்.

முதலில் இவ்வாறு சட்டையில்லாமல் வேட்டி மட்டும் கட்டிக்கொள்வதை ஒரு தற்காலிக நடவடிக்கையாகத்தான் அவர் மேற்கொண்டிருந்தார். ஆனால், பின்னர் அதுவே நிலைத்துவிட்டது. அவர் அதனைத் திட்டமிட்டுச் செய்யவில்லை.

அரையாடை மட்டும் உடுத்தும் எண்ணத்தின் பின்னணி என்ன?

படக்குறிப்பு,

காந்தி அரையாடைக்கு மாறியது குறித்த கல்வெட்டு

சட்டையில்லாமல் முழத் துண்டு மட்டும் அணியலாம் என்ற எண்ணம் முதன் முதலில் காந்திக்குத் தோன்றியது அசாமில் உள்ள பாரிசால் என்ற நகரில்தான். குல்னா என்ற இடத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை சிலர் குறிப்பிட்டு "அங்கு உணவும் உடையும் இல்லாமல் பலர் மடியும்போது காந்திஜி வெளிநாட்டுத் துணிகளைச் சொக்கப்பனை கொளுத்துவது நியாயமாகுமா?" என்று கேட்டார்கள். அந்தச் சமயத்தில் வெறும் இடுப்புத் துணியை மட்டும் அணிந்துகொண்டு தொப்பியையும் சட்டையையும் குல்னாவிற்கு அனுப்பி வைக்கலாமா என்று காந்தி எண்ணியதுண்டு.

இதற்கு அடுத்ததாக, வால்வீடரில் முகமது அலி கைதானபோது காந்தி அங்கே பேசச் சென்றார். அப்போதும் சட்டையையும் குல்லாவையும் அவர் கழற்றிவிடலாம் என்று நினைத்தார். ஆனால், செய்யவில்லை.

ஆனால், மதுரையில் ஏன் செய்தேன் என்பதை காந்தியே விளக்குகிறார்: "என்னுடைய தமிழக சுற்றுப்பயணத்தின்போது மூன்றாவது சந்தர்ப்பம் வந்தது. கதர் உடுத்திக்கொள்ளலாம் என்றால் போதுமான கதர் கிடைப்பதில்லை. அப்படியே கதர் கிடைத்தாலும் அதை வாங்கிக்கொள்ள போதுமான பணம் இல்லை" என்று மக்கள் என்னிடம் சொல்லத் தொடங்கினார்கள். "தொழிலாளர்கள் தங்களிடமுள்ள வெளிநாட்டுத் துணிகளை அகற்றிவிட்டால் தங்களுக்கு வேண்டிய கதரை எங்கு வாங்குவது?" என்று கேட்டார்கள்.

இந்தக் கேள்வி என் மனதில் நன்கு பதிந்தது. இந்த வாதத்தில் உண்மை இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன். மௌலானா ஆசாத் சுபானி, ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன் ஆகியோரிடம் மனத்துயரை வெளியிட்டு இனிமேல் இடுப்புத் துணியுடன் இருக்கப்போவதாகக் கூறினேன். மௌலானா என்னுடைய யோசனையை அப்படியே ஏற்றார். மற்ற சக ஊழியர்கள் அமைதியிழந்தார்கள்.

பட மூலாதாரம், KEYSTONE-FRANCE/GAMMA-KEYSTONE VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

காந்தியடிகள்

இவ்வாறு நான் செய்வது மக்களை மனக் குழப்பமடையச் செய்துவிடும் என்றும் சிலர் அதைப் புரிந்துகொள்ள மாட்டார்களென்றும் சிலர் என்னை ஒரு பைத்தியக்காரன் என்று கருதி விடுவார்கள் என்றும் சொன்னார்கள்.

நான்கு நாட்கள் இதைப் பற்றி நான் சிந்தனை செய்தேன். இந்த வாக்குவாதங்களை அசைபோட்டுப் பார்த்தேன். "உங்களுக்குக் கதர் கிடைக்காவிட்டால் இடுப்புத் துணியுடன் மனநிறைவடையுங்கள். ஆனால், வெளிநாட்டுத் துணிகளைத் தூக்கி எறியுங்கள்" என்று நான் சொன்னபோதெல்லாம் மனத் தயக்கத்துடனேயே சொன்னேன் என்பதை நான் அறிவேன்.

நான் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தவரை அந்தச் சொற்களுக்குப் போதுமான சக்தி இல்லை. மராஸ் மாகாணத்தில் சுதேசித் துணிகள் பற்றாக்குறையாக இருந்ததும் என்னைக் கவலையடையச் செய்தது. மறுபடியும் என் உத்தேசத்தைப் பற்றி நண்பர்களுடன் விவாதித்தேன். அவர்கள் புதிதாக எந்த வாதமும் கூறவில்லை. செப்டம்பர் மாதம் முடியும் தருவாய்க்கு வந்துவிட்டது. அது முடிவதற்குள் வெளிநாட்டுத் துணி விலக்கு நிறைவடைய நான் என்ன செய்ய வேண்டும். என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த கேள்வி இதுதான்.

இந்த நிலையில் நாங்கள் 22ஆம் தேதி இரவு (ஞாபக மறதியாக 22ஆம் தேதி இரவு என காந்தி எழுதியிருக்கிறார். அது 21ஆம் தேதி இரவு) மதுரைக்குப் போய்ச் சேர்ந்தோம். அக்டோபர் 31ஆம் தேதி வரையாவது இடுப்பு வேட்டியுடன் மன நிறைவடைவது என்று நான் முடிவுசெய்தேன். அடுத்த நாள் காலை மதுரை நெசவாளர்கள் கூட்டத்தில் இடுப்பு வேட்டியுடன் பேசினேன்" என்று இந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் காந்தி.

செப்டம்பர் 22ஆம் தேதி காந்தி இது குறித்து ஒரு அறிக்கை விடுத்தார். அதில், "வெளிநாட்டுத் துணி விலக்கிற்காக அனைத்து இந்தியக் காங்கிரஸ் குழு கூறிய ஓராண்டு கால வாய்தாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனாலும் வெளிநாட்டுத் துணியைவிட முடியாது என்று பலர் கருதுவார்களேயானால், அவர்கள் இடுப்பு வேட்டியுடன் - அவசியமான இடங்களில் மேல் துண்டுடன் மனநிறைவடைய வேண்டும்.

படக்குறிப்பு,

காந்தி முதன் முதலில் அரையாடையுடன் தோன்றி பேசிய இடம் காந்தி பொட்டல் என அழைக்கப்படுகிறது. அங்கே காந்தியின் சிலை ஒன்றும் உள்ளது.

அதற்கு ஒரு முன்னுதாரணமாக நானே சட்டையையும் தொப்பியையும் அகற்றிவிட்டு இடுப்பு வேட்டியை மட்டும் குறைந்தது அக்டோபர் 31ஆம் தேதிவரையாவது அணிந்துவர வேண்டுமென்று எண்ணியுள்ளேன்" என்று கூறியிருந்தார்.

ஆனால், அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பிறகும் காந்தி அரையாடையுடனேயே தன் வாழ்வைத் தொடர்ந்தார். மரணமடையும்வரை அப்படியே வாழ்ந்தார்.

காந்தி தன் ஆடையை மாற்றிய ராம்ஜியின் இல்லம் இருந்த அந்தக் கட்டடம் அப்படியே இருக்கிறது. அதன் முகவரி, "261 - ஏ, மேலமாசி வீதி, மதுரை - 1". அங்கே தற்போது ஒரு காதி கிராஃப்ட் கடை இயங்கிவருகிறது. அந்தக் கட்டடத்தில் வாயிலில் காந்தி அங்கே தங்கியிருந்தது குறித்த கல்வெட்டும் இருக்கிறது.

காந்தி முதன்முதலில் அரையாடையுடன் தோன்றி பொதுமக்களிடம் பேசிய இடம் காந்தி பொட்டல் என்று அழைக்கப்படுகிறது. அங்கே ஒரு சிறிய காந்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :