ஆனந்த் கிரி: யார் இவர்? மறைந்த துறவி நரேந்திர கிரியுடன் இவரது உறவு எப்படி இருந்தது?

  • அனந்த் பிரகாஷ்
  • பிபிசி செய்தியாளர்
காவலர்கள் படை சூழ வரும் ஆனந்த் கிரி

பட மூலாதாரம், FACEBOOK/ANANDGIRIYOGA

படக்குறிப்பு,

காவலர்கள் படை சூழ வரும் ஆனந்த் கிரி

அகில பாரத அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரியின் தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரது சீடர் ஆனந்த் கிரி மீது உத்தரபிரதேச போலீசார் செவ்வாய்க்கிழமை அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

அதில், கடந்த சில காலமாக நரேந்திர கிரி, அவரது சீடர் ஆனந்த் கிரியால் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்ததாகவும் அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும், பாகம்பரி மடத்தின் நிர்வாகி அமர் கிரி, ஆனந்த் கிரி மீது குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் ஆனந்த் கிரி உட்பட பலரைக் காவலில் எடுத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். நரேந்திர கிரியின் உடலருகில் கிடைத்ததாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பில் ஆனந்த் கிரியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நிரஞ்சன் அகாடாவைச் சேர்ந்த துறவியும் பாகம்பரி மடத்தின் மஹந்த்துமான நரேந்திர கிரிக்கும் அவரது சீடர் ஆனந்த் கிரிக்கும் இடையே நீண்ட காலமாக சர்ச்சைகள் இருந்து வருகின்றன.

இந்து மதத்தில் தற்போது 13 அகாடாக்கள் உள்ளன. இவற்றில், ஆவாஹன் அகாடா, அடல் அகாடா, மஹாநிர்வாணி அகாடா, ஆனந்த் அகாடா, நிர்மோஹி அகாடா தஷ்நாமி, நிரஞ்சனி மற்றும் ஜூனா அகாடாக்கள் ஆகியவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

இந்த அகாடாக்கள் அந்தந்த மரபுப்படி சீடர்களுக்குப் பட்டங்களை வழங்குகின்றன. நரேந்திர கிரியும் ஆனந்த் கிரியும் நிரஞ்சனி அகாடாவைச் சேர்ந்தவர்கள். தவிர, கடந்த பல ஆண்டுகளாக, பாகம்பரி மடத்தின் பொறுப்புகளைக் கையாண்டு வந்தார்கள்.

யார் இந்த ஆனந்த் கிரி?

பட மூலாதாரம், FACEBOOK/ANANDGIRIYOGA

படக்குறிப்பு,

ஆனந்த் கிரியை வணங்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஆனந்த் கிரி, நல்ல உயரம், நீண்ட சிகை, மற்றும் ஃப்ரெஞ்சு தாடி கொண்டவர். இவர், ராஜஸ்தானில் 21 ஆகஸ்ட் 1980 இல் பிறந்தார். தனது பத்தாவது வயதில் நரேந்திர கிரியுடன் அறிமுகமாகி அவரால் ஹரித்வாருக்கு அழைத்து வரப்பட்டார்.

ஆனந்த் கிரி, தனது பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பல ஆண்டுகள் உத்தராகண்டில் வாழ்ந்து பின்னர் பிரயாக்ராஜுக்கு (அலகாபாத்) வந்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனந்த் கிரி தனது பாஸ்போர்ட்டில் கூட, தாயின் பெயருக்குப் பதிலாக, இந்து சமயப் பெண் தெய்வமான பார்வதி தேவியின் பெயரையும் தந்தை பெயருக்குப் பதிலாகத் தனது குருவின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். தான், பிரிட்டன் மற்றும் கனடா உட்பட உலகின் பல நாடாளுமன்றங்களில் உரையாற்றியுள்ளதாகக் கூறுகிறார்.

யோக குருவாக தனக்கென ஒரு முத்திரை பதித்த ஆனந்த் கிரி, பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். ஆனால் பொது வாழ்க்கையில், சமூகத்தில் அவருக்குக் கிடைத்த இந்த அந்தஸ்து மற்றும் கௌரவத்தில் பெரும் பங்கு பிரயாக்ராஜுக்கு உண்டு.

பிரயாக்ராஜுடனான ஆனந்த் கிரியின் தொடர்பு

பட மூலாதாரம், FACEBOOK/ANANDGIRIYOGA

படக்குறிப்பு,

ஆனந்த் கிரி

பிரயாக்ராஜ் (அலகாபாத் நகரம்) பகுதியில், ஆனந்த் கிரி ஒரு ராக்ஸ்டார் துறவி என்கிற அந்தஸ்து பெற்றிருப்பதாக அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுகிறார்கள். மக்கள் அவரைச் சிற்றரசர் என்றும் அழைக்கிறார்கள்.

கைப்பிடியைப் பிடிக்காமல் மோட்டர் சைக்கிள் ஓட்டுவது போன்ற சாகசச் செயல்கள் மூலம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பும் பெற்றுள்ளார். இதனால், அவர் இளைஞர்களின் ஐகான், ஸ்டைல் ​​ஐகான் மற்றும் ஒரு சக்தி வாய்ந்த குருவாக அங்கீகரிக்கப்பட்டார்.

இருப்பினும், பிரயாக்ராஜ் மற்றும் பாகம்பரி மடம் குறித்து அறிந்த மூத்த பத்திரிகையாளர் ரதிபான் திரிபாதி, ஆனந்த் கிரியின் உண்மையான அடையாளம் அவர் நரேந்திர கிரியின் சீடர் என்பதுதான் என்று கூறுகிறார்.

"வசீகரமான ஆளுமை கொண்ட ஆனந்த் கிரி இளமைப் பருவத்திலிருந்தே நரேந்திர கிரியுடன் இருந்தார். நரேந்திர கிரி அவர்கள் அதிகம் பேசாத இயல்பு கொண்டவராதலால், அவர் தனது சீடர் ஆனந்த் கிரிக்கு பல சந்தர்ப்பங்களில் பேசுவதற்கு வாய்ப்பளித்தார்.

"நரேந்திர கிரியின் நெருங்கிய சீடர்களில் ஒருவராக ஆனந்த் கிரி கருதப்பட்டார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், ஆனந்த் தனது குருவை பாதுகாப்பதைப் பார்க்க முடிந்தது.

பேச்சு சாதுர்யம் உடைய ஆனந்த் கிரி படிப்படியாக தன்னை ஒரு யோக குருவாக நிலைநிறுத்திக் கொண்டார்," என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், FACEBOOK/ANANDGIRIYOGA

படக்குறிப்பு,

ஆனந்த் கிரி

பிரயாக்ராஜ் நகரில் ஆனந்த் கிரியின் செல்வாக்கின் அளவு அவரது ஃபேஸ்புக் கணக்கில் உள்ள படங்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

பல படங்களில், மூத்த காவல் துறை அதிகாரிகள் முதல் மத்திய அமைச்சர் வரையிலான தலைவர்கள் அவருக்கு முன்னால் கைகளைக் கூப்பியபடி காணப்படுகிறார்கள்.

மேலும் அவர் அளித்த பேட்டிகளில், மாநிலத் துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவை கேஷவ் என்று அழைப்பது போல் காணப்படுகிறது.

ரதிபான் திரிபாதி, இந்தச் செல்வாக்கிற்கான காரணத்தை விளக்குகிறார். "ஆனந்த் கிரி பிரயாக்ராஜ் பெரிய ஆஞ்சநேயர் கோயிலில் முக்கிய பங்கு வகிக்கிறார். அந்தப் பெரிய ஆஞ்சநேயர் பிரயாக்ராஜில் நகர தெய்வமாகப் போற்றப்படுகிறார். வெளிநாடுகளிலிருந்து கூட பிரபலங்கள் அங்கு வருகை தருகிறார்கள்.

கோயிலுக்கு வரும் பெரிய பிரமுகர்களுக்கு தரிசனம் செய்விப்பது முதல் ஆரத்தி வரையில் பல பணிகளில், அவர் தனது குரு நரேந்திர கிரியுடன் காணப்பட்டார். இதன் மூலம், அவருக்குப் பெரிய இடத்துத் தொடர்புகள் பெருகின."

ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், FACEBOOK/ANANDGIRIYOGA

படக்குறிப்பு,

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உடன் ஆனந்த் கிரி

வெளிநாடுகளில் யோகா கற்றுத் தரும் ஆனந்த் கிரி, வெளிநாட்டுப் பயணத்தின் போது பாலியல் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ளார்.

"அவர் மக்களுக்கு யோகா கற்பிக்க வெளிநாடு செல்வார். சுமார் இரண்டு - மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆஸ்திரேலியா சென்றார், அங்கு ஒரு பெண், தன்னை இவர் தவறான நோக்கத்துடன் சீண்டியதாகக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவர், சிறையிலும் இருந்துள்ளார். கும்பமேளாவின் போது குருவின் சீடராக மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டார்.

குருவுடன் மோதல்

ஆனந்த் கிரியை நெருக்கமாக அறிந்தவர்கள், அவருக்கும் நரேந்திர கிரிக்கும் இடையே மிகவும் நெருக்கமான உறவு இருந்ததாகக் கூறுகிறார்கள்.

ஆனால் பாகம்பரி மடத்தின் நிலம் தொடர்பான சர்ச்சைக்குப் பிறகு, குருவும் சீடரும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

நரேந்திர கிரி, மடத்தின் நிலங்களை தனிப்பட்ட முறையில் விற்றதாக ஆனந்த் கிரி குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில், அவர் பிரதமர், ஜனாதிபதி மற்றும் உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி விசாரணை கோரியிருந்தார்.

ஆனால் இந்த விஷயத்தில் நிரஞ்சன் அகாடா உட்பட மற்ற அனைத்துத் துறவிகளும் நரேந்திர கிரியை ஆதரித்தனர். இதன் பிறகு அவர் பாகம்பரி மடத்தில் இருந்தும் நிரஞ்சன் அகாடாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டார் என்று கூறப்படுகிறது.

குருவிடம் மன்னிப்பு கோரினார்

பட மூலாதாரம், FACEBOOK/ANANDGIRIYOGA

படக்குறிப்பு,

ஆனந்த் கிரி

ஆனால் சிறிது காலத்தில், ஆனந்த் கிரி நரேந்திர கிரியிடம் மன்னிப்பு கேட்டார். அதன் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இதற்குப் பிறகும் ஆனந்த் கிரியை பாகம்பரி மடத்திற்கும் பெரிய ஆஞ்சநேயர் கோயிலுக்கும் நரேந்திர கிரி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அகாடா பரிஷத் குறித்து நெருக்கமான புரிதலைக் கொண்ட மூத்த பத்திரிகையாளர் ரவி உபாத்யாய், ஆனந்த் கிரியின் இந்த நிலைக்கு அவரது லட்சியமே காரணம் என்று கூறுகிறார்.

"ஆனந்த் கிரி மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் லட்சியம் மிக்க நபர் என்பதில் சந்தேகமில்லை. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தேர்ச்சி பெற்ற ஆனந்த் கிரி அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தார். கோயிலில் ஆரத்தி முதல் தரிசனம் வரை என்ன தேவை இருந்தாலும், பெரிய தலைவர்கள் கூட இவரை நேரடியாகத் தொடர்பு கொள்வதுண்டு. இது அவர்களுடனான இவரது நல்லுறவுக்கு வழி வகுத்தது.

அது மட்டுமல்லாமல், அவர் தன்னை ஒரு யோக குருவாக நிலைநிறுத்திக்கொள்ளவும் முயன்றார். கங்கா சேனாவை உருவாக்கியதன் மூலமும் மக மேளா மூலமும் தனது செல்வாக்கைப் பரவலாக்கினார். நரேந்திர கிரியின் மற்ற சீடர்களுக்கு இந்த விஷயம் பிடிக்கவில்லை என்று நம்பப்படுகிறது. அவர்கள் நரேந்திர கிரியின் காதுகளில் இவர் குறித்த புகார்களைத் தெரிவிக்க, சீடருக்கும் குருவுக்கும் இடையிலான தூரம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது." என்று அவர் விளக்குகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :