'இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்பட எந்த மதத்தின் மக்கள்தொகை விகிதமும் 70 ஆண்டுகளாக மாறவில்லை' -பியூ ஆய்வு

  • செளதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி இந்தியா செய்தியாளர்
இந்தியாவில் இருக்கும் 120 கோடி பேரில் சுமார் 80% பேர் இந்துக்கள்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

இந்தியாவில் இருக்கும் 120 கோடி பேரில் சுமார் 80% பேர் இந்துக்கள்

இந்தியாவில் இருக்கும் அனைத்து மதக் குழுக்களின் பிறப்பு விகிதமும் சரிந்துள்ளன என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு கண்டறிந்துள்ளது.

இதன் விளைவாக 1951ஆம் ஆண்டு முதல் மக்களின் மத அடிப்படையிலான விகிதத்தில் மிதமான மாற்றங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 120 கோடி பேரில், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் என இரு பெரிய குழுக்கள் மட்டும் 94 சதவீதம் உள்ளனர்.

மீதமுள்ள 6 சதவீத மக்கள் தொகையில் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் உள்ளனர்.

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) ஆகியவற்றில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், பியூ, நாட்டின் மத அமைப்பு எவ்வாறு மாறியுள்ளது மற்றும் மாற்றங்களின் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களை ஆராய்கிறது.

1947 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவின் மக்கள் தொகை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 1951ஆம் ஆண்டு 361 மில்லியனாக இருந்த மக்கள் தொகை, 2011ஆம் ஆண்டில் 1.2 பில்லியனைக் கடந்துவிட்டது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று

இந்த காலகட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதை ஆய்வு கண்டறிந்துள்ளது.

304 மில்லியனாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 966 மில்லியனாக அதிகரித்துள்ளது, 35 மில்லியனாக இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 172 மில்லியனாக வளர்ந்துள்ளது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 8 மில்லியனிலிருந்து 28 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இதில் முஸ்லிம்கள் அதிக பிறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளனர் (2015 கணக்குப்படி ஒரு பெண் 2.6 குழந்தைகள் பெற்றுள்ளார்), அதைத் தொடர்ந்து இந்துக்கள் (2.1), சமணர்கள் 1.2 என குறைந்த பிறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளனர்.

1992ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் பிறப்பு விகிதம் 4.4 ஆகவும், அதைத் தொடர்ந்து இந்துக்களின் பிறப்பு விகிதம் 3.3 ஆகவும் இருந்ததைப் போலவே, இப்போதும் இருப்பதாக பியூவின் இந்த ஆய்வு கூறுகிறது.

கடந்த தசாப்தங்களில் மக்கள் தொகை வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, இந்துக்களை விட மைனாரிட்டி குழுக்கள் மத்தியில் அதிகமாக இருந்திருக்கிறது.

மத விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற மூத்த பியூ ஆராய்ச்சியாளரான ஸ்டீபனி கிராமரின் கூற்றுப்படி, 25 ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய சமூக பெண்களுக்கு மத்தியில், இரண்டு குழந்தைகள் பிறப்பை ஒரு தலைமுறை காலத்துக்குள் குறைத்தது தான் மிகவும் அதிர்ச்சிகரமானது என்கிறார்.

1990 களின் முற்பகுதியில் இந்தியாவில் ஒரு பெண் சராசரியாக 3.4 குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். கடந்த 2015ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2.2 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால், முஸ்லிம்கள் மத்தியில் இந்த பிறப்பு விகிதம் 4.4-ல் இருந்து 2.6ஆக சரிந்திருக்கிறது.

60 ஆண்டு காலத்தில், இந்திய மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் பங்கு 4 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே சமயம் இந்துக்களின் பங்கு 4 சதவீதமளவுக்கு குறைந்துள்ளது. மற்ற மதக் குழுக்களின் பங்கு சீராக இருக்கின்றன.

படக்குறிப்பு,

மத ரீதியாக மக்கள் தொகை வளர்ச்சி வரைபடம்

"மற்ற இந்திய பெண்களை விட, இஸ்லாமிய பெண்கள் குறைந்தபட்சம் சமீப காலம் வரை அதிக குழந்தைகளைப் பெற்றிருக்கின்றனர். ஆகையால் தான் மக்கள் தொகை விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது" என கிராமர் பிபிசியிடம் கூறினார்.

குடும்ப அளவுகள் பல காரணிகளால் மாறுபடுகின்றன, "எனவே மத ரீதியிலான விஷயங்கள் மட்டும் பிறப்பு விகிதத்தை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை சரியாகக் குறிப்பிட இயலாது" என ஆய்வு கூறுகிறது. மற்ற பல நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் மக்கள்தொகை மாற்றத்தில் இடம்பெயர்தல், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறுவது அல்லது மத மாற்றத்தின் தாக்கம் எல்லாம் மிகவும் "சொற்பமானது".

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்துக்களின் சராசரி வயது 29 ஆகவும், முஸ்லிம்களுக்கு 24 வயதாகவும், கிறிஸ்தவர்களுக்கு 31வயதாகவும் இருக்கிறது.

பெண்களின் கல்வி நிலை, இந்திய மக்கள் தொகை வளர்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக இருக்கிறது. அதிகம் படித்த பெண்கள், குறைவாக படித்த பெண்களை விட தாமதமாக திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெறுகிறார்கள். அதே போல பணக்காரர்களை விட, ஏழை பெண்கள் அதிக குழந்தை பெறுகிறார்கள்.

இந்த கண்டுபிடிப்புகள் ஆச்சரியமாக இல்லை, காரணம் கடந்த சில தசாப்தங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த பிறப்பு விகிதமும் கடுமையாக குறைந்து வருகிறது. ஒரு சராசரி இந்திய பெண் தனது வாழ்நாளில் 2.2 குழந்தைகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குறிப்பு,

மத ரீதியாக பிறப்பு விகித வளர்ச்சி வரைபடம்

இந்த பிறப்பு விகிதம் அமெரிக்காவை (1.6) விட அதிகமாக இருக்கலாம், ஆனால் இந்தியாவின் 1992ஆம் ஆண்டில் இருந்ததை (3.4) விட அல்லது 1950களில் இருந்த பிறப்பு விகிதத்தை (5.9) விட குறைவு.

ஆய்வின் ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு என்னவென்றால், ஒரு சில இந்தியர்கள் மட்டுமே எந்த மதக் குழுவையும் சேராதவர் என்று கூறியுள்ளனர். உலகளவில், "எந்த மதக் குழுவையும் சாராதவர்" என்கிற குழு தான் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதத்துக்குப் பிறகு மூன்றாவது பொதுவான பெரிய எண்ணிக்கையாக் இருக்கிறது.

"எனவே இவ்வளவு பெரிய நாட்டில் எந்த மதத்தையும் சாராதவர்கள் குறைந்த அளவில் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது" என கிராமர் கூறுகிறார்.

மேலும், பல மதக் குழுக்கள் இந்தியாவில் மிகவும் அசாதாரணமான எண்ணிக்கையில் குவிந்துள்ளனர். உலக அளவில் வாழும் அனைத்து இந்துக்களில் 94 சதவீதத்தினர் இந்தியாவில் வாழ்கின்றனர், அத்துடன் பெரும்பாலான சமணர்கள் மற்றும் 90% க்கும் அதிகமான சீக்கியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர். உலகின் பெரும்பாலான சீக்கியர்கள், பஞ்சாப் என்கிற ஒரே ஒரு இந்திய மாநிலத்தில் வாழ்கின்றனர்.

"உலகில் இந்தியாவைப் போன்ற மத நிலப்பரப்பு கொண்ட எந்த நாடும் இல்லை" என்கிறார் கிராமர்.

அட்டவணைப் படங்கள்: விஜ்தன் முகமது கவூசா, பிபிசி கண்காணிப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :