நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; உறுத்தும் கூட்டுறவு அமைப்புகள் - கூண்டோடு கலைக்கும் திட்டமா?

ஸ்டாலின் & எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி

`கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக பொறுப்புகளில் அ.தி.மு.கவினர் உள்ளதால், அதனை மொத்தமாக கலைக்க வேண்டும்' என்ற குரல், தி.மு.க தரப்பில் எழத் தொடங்கியுள்ளது. `போலி நகைகளை வைத்துக் கடன் பெற்றது என குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். என்ன நடக்கிறது?

சேலம் மாவட்டத்தில் தி.மு.க செயற்குழுக் கூட்டம் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் சிலர், ` நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரவுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்குக்கீழ் மக்கள் வாங்கிய நகைக்கடன்களை முதலமைச்சர் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக பொறுப்புகளில் அ.தி.மு.கவினர் உள்ளதால் அவர்கள் தங்களுக்கு சாதகமாக மக்களிடம் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் நமக்குத்தான் பாதிப்பு ஏற்படும்' எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கூட்டுறவு சங்க நிர்வாக அமைப்புகளை கலைக்க வேண்டும் எனவும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ` கூட்டுறவு சங்கங்களை அவ்வளவு எளிதில் கலைக்க முடியாது. அதற்கான சட்ட திருத்தங்களை ஆராய வேண்டும். மாநிலம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக முதலமைச்சர் உரிய நடவடிக்கையை எடுப்பார். கூட்டுறவு சங்க தேர்தல் குறித்தும் விரைவில் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம்' எனப் பேசியதாகவும் தகவல் வெளியானது.

கொங்கு மண்டலத்தில் அதிக முறைகேடு

இந்தத் தகவல் அ.தி.மு.கவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பயிர்க்கடன், நகைக்கடன் ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடுகளை கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, நகைக்கடனில் நடைபெற்ற மோசடிகளால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பல இடங்களில் பல கோடி ரூபாய்க்கு நகைகளே இல்லாமல் நகைக்கடன் வரவு வைக்கப்பட்டதாகவும், மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் அடிப்படையில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் இருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர்களில் எல்லாம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியிருந்தார்.

இமேலும், ஒரே நபர் 200 கடன், 300 கடன் என வாங்கியுள்ளதையும் கவரிங் நகைகளுக்கெல்லாம் கடன் கொடுக்கப்பட்டதையும் ஆதாரங்களுடன் அமைச்சர் சுட்டிக் காட்டினார். இதில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் 2,500 கோடி ரூபாய் அளவுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதில், விவசாயமே செய்யாத தரிசு நிலங்களுக்குக்கூட 110 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான பணிகளும் நடந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாக அமைப்பைக் கலைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

சங்கங்களை கலைக்க முடியுமா?

படக்குறிப்பு,

கிருஷ்ணமூர்த்தி

கூட்டுறவு சங்க நிர்வாக அமைப்புகளைக் கலைக்க முடியுமா? என தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``கூட்டுறவு சங்கங்களை கலைக்க முடியுமா என்றால், அரசியலமைப்புச் சட்டம் 97வது பிரிவின்படி பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் இல்லை. காரணம், ஐந்தாண்டு பதவிக் காலத்தை முன்கூட்டியே கலைக்க முடியாது. கூட்டுறவு சங்கங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலின்போது ஆளும்கட்சியை சேர்ந்தவர்களை மட்டுமே அந்தந்த சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்தனர். வெளி நபர்களோ வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களோ உறுப்பினர்களாக சேர்க்க வழியில்லாமல் கதவுகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களை மட்டுமே 99 சதவிகித பதவிகளை நிரப்பினார்கள். இரண்டாவது கட்டத் தேர்தலின்போது இதேதான் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் சரியான முறையில் தேர்தல் நடைபெறவில்லை'' என்கிறார்.

தொடர்ந்து, கடன் தள்ளுபடியில் நடைபெற்ற மோசடிகள் குறித்துப் பேசியவர், `` கடன் தள்ளுபடி முறைகேடு காரணமாக, கோவில்பட்டியில் உள்ள ஒரு சங்கத்தின் தலைவரையும் செயலாளரையும் கைது செய்துள்ளனர். நகைக்கடனில் ஏராளமான விதிமீறல்கள் நடந்துள்ளன. போலி நகைகளை வைத்ததாகவும் புகார் வந்தது. இதுதொடர்பாக ஆய்வுகளும் நடந்தன. அப்படிப்பட்ட நிர்வாகக் குழுவைக் கலைப்பதில் எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால், தேர்வு செய்யப்பட்ட ஒரு நிர்வாகக் குழு, பெரும்பான்மை உறுப்பினர்களால் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் மட்டுமே அந்தக் குழுவை கலைக்க முடியும் என சட்டம் சொல்கிறது.

இந்த விவகாரத்தில் சங்கத்தின் தலைவர் அல்லது நிர்வாகிகள் மீது புகார் வந்தால் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றலாம். இதனையும் மீறி கலைப்பது என்றால் அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். 97வது அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதைத் தாண்டி நிர்வாகக் குழுவைக் கலைப்பதற்கு வாய்ப்பில்லை'' என்கிறார்.

`` தி.மு.க அரசின் அழுத்தம் காரணமாக, சங்க நிர்வாகிகளை ராஜினாமா செய்ய வைப்பது சரியாக இருக்க வாய்ப்பில்லை. காரணம், முறைகேட்டுக்கான பணத்தை வசூலிக்கும் வகையில் ஜப்தி உள்பட எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. அவர்கள் தப்பித்துச் செல்வதற்கே வாய்ப்பு அதிகம். அடுத்தமுறை நடக்கவுள்ள கூட்டுறவு தேர்தலில் தகுதியானவர்களை உறுப்பினராகச் சேர்த்து, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்'' என்கிறார்.

நீதிமன்ற அவமதிப்பாக மாறிவிடும்

பட மூலாதாரம், @CMOTAMILNADU

படக்குறிப்பு,

தமிழ்நடு அரசு

இதுதொடர்பாக, அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான பாபு முருகவேலிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கூட்டுறவு அமைப்புகளை அவ்வளவு எளிதில் கலைத்துவிட முடியாது. அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, `சங்கங்களைக் கலைக்க வேண்டும்' என தி.மு.க வழக்கு தொடர்ந்தது. இதற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் கலைக்க முடியும். ஓர் அரசாணையைப் போட்டு கலைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

இதன்பிறகு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது, `நாங்கள் கலைக்க மாட்டோம்' என அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உறுதிமொழி கொடுத்திருக்கிறார். அதேநேரம், முறைகேடுகளில் ஈடுபடக் கூடிய கூட்டுறவு சங்கங்களை நீக்குவோம் என்றார். இதன் தொடர்ச்சியாக, `ஜெராக்ஸ் நகல் இல்லை' என்ற காரணத்துக்காக எல்லாம் சில சங்கங்கள் கலைக்கப்பட்டுள்ளன'' என்கிறார்.

மேலும், `` நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளே அவர்களுக்கு மைனஸாக மாறும். இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை, சிலிண்டர் மானியம் ஆகிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இவர்கள் அறிவித்த நகைக்கடன் தள்ளுபடியால் யாரும் பலன் பெறவில்லை. வெறும் உத்தரவோடு மட்டுமே உள்ளது. இந்தநிலையில், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக அமைப்புகளை மொத்தமாக கலைக்க முற்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்பாக மாறிவிடும்'' என்கிறார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் பேசுவதற்காக பிபிசி தமிழ் சார்பில் தொடர்பு கொண்டோம். `` உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார். இதுதொடர்பாக அவர் பேசுவதற்கு தற்போது வாய்ப்பில்லை'' என அவரது உதவியாளர் தெரிவித்தார்.

அமைச்சரவையே முடிவு செய்யும்

படக்குறிப்பு,

ராஜிவ் காந்தி

இதையடுத்து, தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான ராஜீவ்காந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கூட்டுறவுத் துறையில் கடந்தமுறை நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக, தி.மு.க உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அதை எதையும் கருத்தில் கொள்ளாமல் பிற கட்சிகளின் வேட்புமனுவைக்கூட வாங்கவிடாமல் அன்றைய அ.தி.மு.க அரசு தடுத்தது.

இதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், `மொத்தமாகக் கலைப்பது சரிதானா?' என உயர் நீதிமன்றமும் கேள்வியெழுப்பியது. `முறைகேடுகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது' என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. அதனை மொத்தமாக கலைப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` நகைக்கடனில் சேலம், கோவை உள்பட பல மாவட்டங்களில் குறிப்பிட்ட ஒரு நபரே மீண்டும் மீண்டும் நகைக்கடன் பெற்றது, போலி நகைகளை வைத்துக் கடன் பெற்றது என நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. அந்த வரிசையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும். மொத்தமாகக் கலைக்க வேண்டுமா என்பதை அமைச்சரவைதான் முடிவு செய்யும்'' என்கிறார்.

மேலும், `` முறைகேடுகள் நடைபெற்ற சங்கங்களில் மறு தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் அரசு முடிவு செய்யும். அவ்வாறு ஒரு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டால், அதற்கு ஆறு மாதங்களுக்குள் ஆளுநர் கையொப்பமிட வேண்டும். அவரிடம் இருந்து பதில் வரவில்லையென்றால் மாநில அரசு முடிவெடுக்கலாம். இந்த விவகாரத்தில் அமைச்சரவை முடிவெடுத்தால் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது'' என்கிறார் ராஜீவ்காந்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: