நாகாலாந்து: ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

  • அஷ்ஃபாக் அஹ்மத்
  • பிபிசி தமிழ்
நாகாலாந்து துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு

நாகாலாந்து மாநிலத்தின் ஓடிங் பகுதியில் போராளிக்குழு என நினைத்து தொழிலாளர்கள் மீது ஆயுதப்படையினர் தவறாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவிகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடே நாகாலாந்தை உற்று கவனித்து வரும் இந்தச் சூழலில், அப்பாவிகளின் உயிரை பறிக்க ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்தான் காரணம் என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இச்சட்டத்தின் அவசியம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என நாடெங்கிலும் கோரிக்கை வலுத்துள்ளது. சட்டத்தை திரும்பப்பெற அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

"இந்த சட்டம் இந்தியாவின் பிம்பத்தின் மீது விழுந்திருக்கும் கரும்புள்ளி. இந்த சட்டம் ராணுவத்திற்கு அதிகப்படியான அதிகாரங்களை வழங்குகிறது. அத்துமீறும் ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை" என குற்றம்சாட்டியுள்ளார் நாகாலாந்து முதலமைச்சர் நெபியூ ரியோ.

சிறப்பு அதிகாரச் சட்டம் உருவானது எப்படி?

அசாம் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த நாகாலாந்து 1950களில் தனி நாடு கோரிக்கையை வலுவாக முன் வைத்தது. இதனை இந்திய அரசு ஏற்றுக்கொள்ளாததால் போராளிக்குழுக்கள் அதிகளவில் உருவெடுத்தன. அசாம், மணிப்பூர் மாநிலங்களில் நிலவிய பதற்றமான சூழலை கட்டுப்படுத்தவும் போராளிக் குழுகளை சமாளிக்கவும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு 1958ல் ஒப்புதல் வழங்கினார் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்.

வன்முறை என்பது வடகிழக்கு இந்தியாவின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது என்றும் அங்கு நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டதே ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் என்றும் கூறுகிறது மத்திய அரசின் இணையக் குறிப்பு.

1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு (Quit India Movement) போராட்டம் வலுப்பெற்றபோது அப்போதைய கவர்னர் ஜெனரல் லின்லித்கோவால் (Viceroy Linlithgow) கொண்டு வரப்பட்ட அடக்குமுறை சட்டத்தின் சாரம்சம்தான் இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்.

சிறப்பு அதிகாரச் சட்டம் என்ன சொல்கிறது?

  • மாநிலங்கள் அல்லது ஏதேனும் குறிப்பிட்ட பகுதிகளில் கிளர்ச்சி, மோதல், தொடர் வன்முறைகள் நிகழும் பட்சத்தில் அதனை கையாள மாநில அரசு திணறினால், மத்திய அரசு தலையிட்டு சம்மந்தப்பட்ட பகுதியை தொந்தரவுக்குரிய பகுதியாக அறிவித்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்தும்.
  • அப்படி அறிவிக்கப்பட்ட மாநிலம் அல்லது பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்
  • சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது உரிய எச்சரிக்கைக்குப் பிறகு ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தலாம், படைகளை பயன்படுத்தலாம். அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சரியே.
  • மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி பாதுகாப்பு படையினர் சோதனையிடவும், வாரன்ட் ஏதுமின்றி எவரையும் கைது செய்யவும் முடியும்.
  • கைது நடவடிக்கைக்கு ஆளானவர்களை காலக்கெடுவின்றி அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்கலாம்.
  • இந்த சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.

சட்டத்தை எதிர்கொண்ட மாநிலங்கள்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் முதன்முதலில் அமல்படுத்தப்பட்டது அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில்தான். அதனை தொடர்ந்து படிப்படியாக வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம், திரிபுராவுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நாகாலாந்து துப்பாக்கிச் சூடு

காலிஸ்தான் பிரிவினைவாதப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தபோது இதே சட்டம் 1985 - 1994 வரை பஞ்சாபின் சில பகுதிகளில் அமலில் இருந்தது. இதேபோல 1990ம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீரிலும் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.

சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் மீண்டும் அமைதி திரும்பும் பட்சத்தில் ராணுவம் திருப்பி அழைக்கப்படும். 2015ல் திரிபுராவிலும், 2018ல் மேகலாயாவிலும் இந்த சட்டம் திரும்பப்பெறப்பட்ட்து.

ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களிலும், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களின் ஒருசில பகுதிகளிலும் இந்த சட்டம் இன்று வரை அமலில் உள்ளது.

குறிப்பிட்ட கால அளவில் இந்த சட்டத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்கும்.

வலுக்கும் எதிர்ப்பு

நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் கொல்லப்படுவது புதிதல்ல. 2000ம் ஆண்டில் மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகே மாலோமில் ஆயுதப்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்.

மாலோம் படுகொலை என இந்திய வரலாற்றில் அறியப்படும் இந்த நிகழ்வுதான் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிர போராட்டத்திற்கான பின்னணி. இந்த சம்பவத்திற்கு காரணமான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற சாகும் வரை போராட்டம் அறிவித்த இரோம் ஷர்மிளா, 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2016ல்தான் நிறைவு செய்தார்.

2004ல் அசாமில் தங்ஜம் மனோராமா என்ற பெண் வீட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு வயல்வெளியில் வீசப்பட்டார்.

பட மூலாதாரம், HAHONGNAO KONYAK

படக்குறிப்பு,

தலைநகர் கோஹிமாவில் நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலம்

இதற்கு அசாம் ஆயுதப்படையே காரணம் என குற்றம்சாட்டி பெண்கள் வீதிகளில் இறங்கி போராடினர். 'இந்திய ராணுவமே எங்களை வன்கொடுமை செய்' (Indian Army Rape us) என்ற பதாகை ஏந்தி பெண்கள் சிலர் நிர்வாணப் போராட்டம் நடத்தியது நாட்டையே உலுக்கியது.

சாமானியர்களின் எதிர்ப்புக் குரல் மேலோங்கியதால் இந்த சட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நிகழ்ந்துள்ளதாகவும் இச்சட்டம் ராணுவத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணையம் கூறியது. இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் ஜீவன் ரெட்டி ஆணையம் வலியுறுத்தியது.

உச்சநீதிமன்றம் தலையீடு

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இணைந்து சட்ட ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க மணிப்பூரில் EEVFAM எனும் அமைப்பு தொடங்கப்பட்டது.

ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் போர்வையில் 1970களில் இருந்து 1,528 போலி என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் வீடு திரும்பவில்லை என்றும் குற்றம்சாட்டி EEVFAM அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விஸ்வரூபம் எடுக்கவே, போலி என்கவுண்டர்கள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

சந்தோஷ் ஹெக்டே ஆணையம் பல அதிர்ச்சித் தகவல்களை வெளிக்கொண்டு வந்தது. ஆயுதப்படையால் நடத்தப்பட்ட 6ல் 5 என்கவுண்டர்கள் உண்மையானவை அல்ல என அம்பலப்படுத்தியது. இந்த சட்டம் ராணுவத்திற்கு அதிக அளவில் அதிகாரம் வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியது.

பட மூலாதாரம், BEN ANDERSON

படக்குறிப்பு,

மெழுகுவர்த்தி ஊர்வலம்

நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகளை வழங்குகிறது அரசமைப்புச்சட்டம். தொல்லையான பகுதிகளில் நிகழ்ந்த என்கவுண்டர் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு கடந்த 2017ல் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

2017ல் தொடரப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் 49.5% காஷ்மீரிலும் 31% அசாமிலும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக பதிவாகியிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

"மக்கள் விரோத சட்டம்"

பிபிசி தமிழிடம் பேசிய தேசிய மனித உரிமை ஆணைய கூட்டமைப்பின் (NCHRO) தலைவரும் பேராசிரியருமான அ.மார்க்ஸ், "சட்டங்களுக்கெல்லாம் தாயான அரசியல் சட்டத்திற்கே விரோதமாக பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஒரு சட்டத்தை இயற்றும்போது அதற்கான தேவை இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. ஆனால் அந்த கேள்வியை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. அசாதாரணச் சட்டங்களை இயற்ற அரசுக்கு அதிகாரம் வழங்கியது யார்?" என கேள்வி எழுப்பினார்.

கொலை, சித்திரவதை, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றை மக்கள் மீது மேற்கொள்ள ராணுவத்தினரை ஏவும் கொடும் சட்டம்தான் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். இந்த சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் வரம்பு மீறிய ராணுவ வீரர்கள் யாருமே தண்டிக்கப்படுவதில்லை. காஷ்மீரிலும் மணிப்பூரிலும் பெண்கள் பல வகைகளில் துன்புறுத்தப்பட்டதற்கு இந்த சட்டம் பெரிதும் துணை புரிந்துள்ளதாகவும் அ.மார்க்ஸ் குற்றம்சாட்டினார்.

"காஷ்மீரில் இந்த சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 50 அத்துமீறல்களை பட்டியலிட்டு மத்திய அரசுக்கு காஷ்மீர் அரசு சுட்டிக்காட்டியது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இக்கொடூரமான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டாலும், தொடர்ந்து நடத்தப்படும் என்பது வேதனை.

ராணுவத்தின் கையில் இவ்வளவு அதிகாரங்களை அளிப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது. ராணுவத்தின் அத்துமீறல்களால் போலி என்கவுண்டர்கள், கூட்டு பாலியல் வல்லுறவு உள்ளிட்ட எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. இப்பேற்பட்ட அட்டூழியங்களை நிகழ்த்துவோர் பெரிய அளவில் தண்டனையின்றி நடமாட முடியும் என்றால் இந்த நாட்டில் வாழ்வதற்கு என்ன அர்த்தம் உள்ளது?" என்கிறார் பேராசிரியர் மார்க்ஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :