ஆன்டி இண்டியன் பட இயக்குநர் ப்ளூசட்டை மாறன்: "படத் தலைப்பு தந்த எச்.ராஜாவுக்கு நன்றி"

ப்ளூ சட்டை மாறன்
படக்குறிப்பு,

விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியிருக்கும் ப்ளூ சட்டை மாறன்

திரைப்பட விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியிருக்கும் 'ப்ளூசட்டை' மாறனின் முதல் படமான ஆன்டி இண்டியன் தற்போது வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தன்னுடைய பின்னணி, தன் விமர்சனங்கள் கடுமையாக இருப்பதற்கான காரணம், தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதில் தான் சந்தித்த பிரச்சனைகள் ஆகியவை குறித்து பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் மாறன். பேட்டியிலிருந்து.

கே. ஒரு விமர்சகராகத்தான் உங்களை எல்லோருக்கும் தெரியும். உங்களுடைய பின்னணியைப் பற்றிச் சொல்லுங்கள்.

ப. பெரிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. நான் எட்டாவது வரைக்கும்தான் படித்திருக்கிறேன். அதுக்கு மேல இருந்தால் பள்ளிக்கூடத்தைக் கெடுத்துவிடுவான்னு துரத்திவிட்டுட்டாங்க. அதற்குப் பிறகு சினிமா விநியோகத் துறையில் வேலை பார்த்தேன். அதில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்த பிறகு, தனி நபர்கள் அந்த வேலையைச் செய்வது கடினமாகிவிட்டது.

ஆனாலும் தமிழ் சினிமாவை விட்டுப் போக முடியவில்லை. தொடர்ந்து தயாரிப்பு நிர்வாகியாக, கேஷியராக வேலை பார்த்துவந்தேன். அப்போது எனக்கு நெருக்கமாக இருந்த இரண்டு பேர், தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருக்கிறீர்கள். அதிலேயே ஏதாவது புதிதாகச் செய்யலாமா என்று கேட்டார்கள். இதையடுத்து tamiltalkies.net என்ற இணைய தளத்தைத் துவங்கினோம். அந்தத் தம்பிகள் இரண்டு பேரும் அப்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார்கள்.

அவர்கள்தான் யு டியூப் குறித்து அறிமுகம் செய்தார்கள். அதில் சினிமா விமர்சனம், சினிமா பற்றிய செய்திகளை வெளியிடலாம் என்று சொன்னார்கள். சரி, அதுபோலவே செய்யலாம் என துவங்கினோம். அதற்கென அலுவலகம் எல்லாம் துவங்கியாகிவிட்டது. ஆனால், சேனலை துவங்க முடியவில்லை. எனென்றால், இதுபோல சினிமா விமர்சனம் செய்ய எல்லோரும் தயங்கினார்கள்.

இப்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் எனக்கு நல்ல நண்பர். அவரிடம் இந்த கான்செப்டைச் சொன்னேன். இதைக் கேட்ட அவர், "ஊரிலிருந்து இங்கு வந்து கஷ்டப்பட்டு முன்னேறியிருக்கிறேன். திரும்பவும் ஊருக்கே அனுப்பிவிடாதே" என்று சொல்லி மறுத்துவிட்டார். ஆறு மாதங்களாக அலுவலகத்திற்கு வாடகை மட்டும் செலவாகிக்கொண்டேயிருந்தது. சேனலில் ஒன்றும் வரவில்லை. அப்போதுதான், நம்மில் ஒருவரே இதைச் செய்துவிடலாம் என்று நினைத்தோம். என்னுடன் இருந்த இரண்டு பேரும் வேறு நிறுவனங்களில் வேலை பார்த்து வந்ததால் அவர்கள் தயங்கினார்கள்.

மீதமிருந்தது நான்தான். ஆனால், என்னுடைய கருத்த தோற்றத்திற்கு இது ஒத்துவருமா என்ற யோசனை இருந்தது. அப்போது இரா. பாஸ்கர் என்ற என்னுடைய நண்பர், "எப்போதும் நாம் என்ன சொல்கிறோமோ அதுதான் முக்கியம். தோற்றம் முக்கியமில்லை" என்றார். அப்படித்தான் நான் விமர்சனங்களைச் செய்ய ஆரம்பித்தேன்.

கே. எந்தத் தருணத்தில் உங்களுடைய விமர்சனங்கள் கவனிக்கப்பட ஆரம்பித்ததை உணர்ந்தீர்கள்?

ப. அப்போதுதான் ஆன்ட்ராய்ட் போன்கள் பிரபலமாக ஆரம்பித்த தருணம். நான் ரோட்டில் போனால், மடக்கி ஃபோட்டோ எடுக்க ஆரம்பித்தார்கள். எனக்கே வெட்கமாக இருந்தது. ஆனால், அப்போதுதான் நானும் கவனிக்கப்படுகிறேன் என்பது புரிந்தது.

கே. உங்களுடைய திரை விமர்சனங்களில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. எதற்காக இதைச் செய்கிறீர்கள்?

ப. இங்கே எல்லாமே மென்மையான போக்காகத்தான் இருக்கிறது. தவிர, நான் எல்லாப் படத்தையும் அவ்வாறு சொல்வதில்லை. படம் பார்க்கிறவனை முழு முட்டாள் என நினைத்து படம் எடுக்கிறார்கள் அல்லவா, அவர்களைத்தான் சொல்கிறேன். நம்மைப் பைத்தியக்காரன் என நினைத்து படம் எடுக்கும்போது, பதிலுக்கு பைத்தியக்காரன் எப்படி பதில் சொல்வானோ அதுபோலத்தான் பதில் சொல்ல முடியும்.

கே. நீங்கள் திரைத்துறை பின்னணியில் இருந்து வந்தவர். ஒரு திரைப்படம் உருவாவதில் எத்தனை சிரமங்கள் இருக்கின்றன என்பது புரிந்தவர். இருந்தபோதும் இப்படி விமர்சனம் செய்வது ஏன்?

ப. அந்த சிரமங்கள் எல்லாம் தெரியும் என்பதால்தான் அப்படி விமர்சனம் செய்கிறேன். எனக்கு சினிமா விநியோகம் தெரியும், தயாரிப்பு தெரியும். அடிப்படையில் ஒரு நல்ல சினிமா ரசிகனும்கூட. ஒரு நாளைக்கு நான்கு படம் வெளியானால், நான்கையும் ஒரே நாளில் பார்ப்பேன். சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பது எவ்வளவு கடினம் எனத் தெரியும். அந்த வாய்ப்பை இப்படி வீணாக்குகிறார்களே என்பதுதான் என் கோபம். அப்போது மயிலிறகால் வருட முடியாது.

கே. உங்களுடைய கடுமையான விமர்சனத்தைப் பார்த்து தயாரிப்பு தரப்பிலோ, நடிகர் தரப்பிலோ உங்களை அணுகி பேசவோ, எச்சரிக்கவோ செய்திருக்கிறார்களா?

ப. பல முறை நடந்திருக்கிறது. ஒரு முறை விஷால் என்னைச் சந்திக்க விரும்புவதாக அவருடைய மேனேஜர் முருகேஷ் தெரிவித்தார். முருகேஷ் எனக்கு நன்கு அறிமுகமானவர். அவரிடம் என்ன விஷயமென்று கேட்டேன். 'நீ செய்யும் விமர்சனம் குறித்துத்தான் பேச அழைக்கிறார்' என்றார்.

நான் கேட்டேன், "நான் விமர்சனம் செய்வதை நிறுத்துவிடுகிறேன். இன்றைக்கு இருக்கும் காலத்தில், வேறு யாரும் இதுபோல விமர்சனம் செய்ய மாட்டார்கள் என்று உங்களால் வாக்குறுதி கொடுக்க முடியுமா?" என்றேன். அதைக் கேட்டதும் முருகேஷ், "இதையே நான் விஷாலிடம் சொல்லிவிடுகிறேன். நீ கிளம்பு" என்று சொல்லிவிட்டார்.

பிறகு, ஒரு அமைப்பிலிருந்து இன்னொருத்தர் என்னை பேச வேண்டுமென அழைத்தார். நான் செல்ல மறுத்துவிட்டேன். அங்கே சென்று, மறுப்பதற்குப் பதிலாக, இப்போதே மறுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டேன். அப்படினா உன் யு டியூப் சேனலை ப்ளாக் செய்துவிடுவோம் என்றார்கள். முடிந்தால் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

கே. விவேகம் படத்திற்கு நீங்கள் செய்த கடுமையான விமர்சனம் பெரும் எதிர்வினைகளை சமூகவலைதளங்களில் ஏற்படுத்தியது...

ப. அவையெல்லாம் அறியாமையில் செய்வது. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. நான் ஒரு நடிகரின் ரசிகர், அவரை ஏதாவது சொன்னால், நான் உன்னை ஏதாவது செய்வேன் என்பது பெரிய முட்டாள்தனம். அதை ஏற்க முடியாது. நான் அவர்களை சமூக வலைதளங்களில் எதிர்த்துத்தான் பேசுவேன். சில சமயம் அவர்கள் மொழியிலேயே பேசுவேன்.

கே. திரைப்படத்தை இயக்க வேண்டுமென்பது ஆரம்பத்திலேருந்தே ஒரு கனவா அல்லது யதேச்சையாக இந்த வாய்ப்பு வந்ததா?

ப. நான் சினிமா துறையில் பணியாற்றியவன் என்பதால், சினிமாவைத் தயாரிக்கத்தான் ஆசை. எனக்கு சினிமா விநியோகமும் தயாரிப்பும் நன்றாகத் தெரியும். மற்றவர்கள் செய்வதைவிட என்னால் சிறப்பாக செய்ய முடியும். மற்றவர்கள் 100 கோடியில் தயாரிக்கும் படத்தை என்னால் ஐம்பது கோடியில் செய்ய முடியும்.

இப்போது யு டியூபில் போட்டி அதிகமாகிவிட்டது. இதில் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் நாமும் அப்-டேட் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. வெளிநாட்டுப் படங்களோடு ஒப்பிட்டால், நாம் படம் எடுக்கும் விதத்தில் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இந்த நிலையில், நாமும் ஒரு படத்தை இயக்கலாம் என்ற எண்ணம் எனக்கு பின்னால்தான் வந்தது.

இதற்கிடையில், பலரும் வந்து, 'நீ ஒரு படம் எடுடா' என்று சொல்லிக்கிட்டிருந்தார்கள். ஆனால், அதற்காகவெல்லாம் நான் படம் எடுக்க வரவில்லை. 25 வருடத்திற்கு முன்பாக நான் ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதைத்தான் இப்போது படமாக எடுத்திருக்கிறேன். அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம் இப்போதும் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியைத்தான் கொடுக்கும். நான் எழுதிய கதையாக இருந்தால் அது என்னை மட்டும் பாதிக்கும். ஆனால், எங்கேயோ நடந்த ஒரு விஷயம் என்னைப் பாதித்தது அல்லவா, ஆகவே அது எல்லோரையும் பாதிக்கும் என்று நினைத்து இந்தக் கதையைத் தேர்வுசெய்தேன்.

கே. இந்தப் படத்திற்கு ஆன்டி - இண்டியன் என்ற பெயரை வைத்திருக்கிறீர்கள்.. எதிர்ப்புணர்வுடன் படத்தை அணுக மாட்டார்களா? அப்படி அணுக வேண்டுமென்றுதான் அந்தப் பெயரை வைத்தீர்களா?

ப. இந்தக் கதைக்கு அந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்தேன். இந்தக் கதையை எழுதி முடித்துவிட்டு எட்டு மாதங்கள் விவாதித்தோம். ஆனால், இந்தத் தலைப்புக்கு ஒரு நிமிடம்கூட யோசிக்கவில்லை. இந்தத் தலைப்பைக் கொடுத்த அண்ணன் எச். ராஜா அவர்களுக்கு நன்றி.

கே. இந்தப் படத்தை தணிக்கை செய்வதில் என்ன பிரச்சனைகள் ஏற்பட்டன?

ப. சென்சார் முழுவதுமே பிரச்சனைதான். படத்தை ஆரம்பத்திலேயே முழுமையாக நிராகரித்துவிட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் எல்லாம் ரொம்ப காமெடியாக இருந்தது. அதற்குப் பிறகு மறு ஆய்வுக் குழுவுக்குப் போனோம். அங்கு 38 இடங்களை வெட்டச் சொன்னார்கள். அதில் பல இடங்கள் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை. அதற்குப் பிறகு டிரிப்யூனல்தான் ஒரே வாய்ப்பு. ஆனால், நாங்கள் டிரிப்யூனலை அணுவதற்கு முன்பாகவே அது கலைக்கப்பட்டுவிட்டது. ஆகவே, ட்ரிப்யூனல் என்ற வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

மீதமிருந்தது நீதிமன்றம் மட்டும்தான். ஆகவே அங்கு சென்றோம். ஏற்கனவே அளித்த தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்துவிட்டு, புதிதாக ஒரு குழுவை அமைத்து படத்தை மீண்டும் பார்க்க வேண்டும். அவர்களே 'ஏ' சான்றிதழுக்கு ஒப்புக்கொள்கிறார்கள். வயதுவந்தோர் யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாமே என்று நீதிமன்றம் கூறியது. ஒன்று, வெட்டு ஏதும் இல்லாமல் ஏ சான்றிதழ் அளியுங்கள். அல்லது வெட்டுடன் யு/ஏ சான்றிதழ் கொடுங்கள் என்றார்கள்.

அதற்குப் பிறகு மீண்டும் படத்தைப் பார்த்து, ஒரே ஒரு இடத்தில் வசனத்தில் ஒலியில்லாமல் செய்யச் சொன்னார்கள். அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளாமல் இருந்தால், படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருக்கும். ஆனால், ஏ சான்றிதழ் கிடைத்தால், சாட்டிலைட் சேனல்களுக்கு படத்தை விற்பதில் பிரச்சனை ஏற்படும். அதனால், வசனத்தின் ஒலியை நீக்க ஒப்புக்கொண்டோம்.

அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். "மதங்கிறது ஜட்டி மாதிரி. அதை நீ போடலாம், போடாம இருக்கலாம், உன் இஷ்டம். உன் ஜட்டியை இன்னொருத்தனை போட சொல்ற பாத்தியா, அது ரொம்ப ரொம்ப தப்புடா" என்பதுதான் வசனம். அந்த இடத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், அதை நீக்காவிட்டால் ஏ சான்றிதழ்தான் கிடைக்கும். ஆகவே அதை நீக்க வேண்டியதாயிற்று.

கே. இந்தப் படத்தில் மூன்று மதங்களையும் பற்றிப் பேசுகிறீர்கள். மதவாதிகளோ, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களோ எதிர்ப்பு ஏதும் தெரிவித்தார்களா?

ப. எங்களுக்கு சென்சாரிலேயே அந்த எதிர்ப்பு வந்துவிட்டது. அதற்குப் பிறகு எதிர்ப்பு ஏதும் வரவில்லை. இனி ரிலீசின்போது வருமா என்பது தெரியவில்லை.

கே. காட்சிகளை வடிவமைக்கும்போது எந்த அரசியல் தலைவரையாவது மனதில் வைத்துக்கொண்டு காட்சிகளை உருவாக்கினீர்களா?

ப. மையக் கதை நிஜத்தில் நடந்தது. மற்ற சம்பவங்களையெல்லாம் தேடித்தேடி உருவாக்கி, வைத்தோம். அவற்றுக்கெல்லாம் முன் உதாரணங்கள் இருக்கின்றன.

கே. படத்தில் இந்து மதம் சார்ந்து அரசியல் செய்பவர்களைக் கூடுதலாக விமர்சிப்பதுபோன்ற தோற்றம் இருக்கிறது.. அது சரியா?

ப. அது உண்மைதானே. உண்மையில் அவர்கள் அப்படித்தானே செய்கிறார்கள்? நடந்த உண்மைகளைத்தான் சொல்லியிருக்கிறேன்.

கே. படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம், இசை என டி. ராஜேந்தரைப் போல திரைப்படத்தின் பல அம்சங்களையும் நீங்களே செய்திருக்கிறீர்கள். படத்தின் பின்னணி இசையையாவது வேறு யாராவது செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது...

ப. பின்னணி இசைக்கு வெளியில்தான் கொண்டுபோனேன். ஒரு முன்னணி இசையமைப்பாளர், இன்றைக்கு ஒரு படத்திற்கு ஐம்பது லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறவர் எனக்காகக் குறைத்துக்கூட வாங்க தயார் என்று சொன்னார். ஆனால், அங்கே பத்துக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் அங்கே காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முடித்த பிறகுதான் என் படத்திற்கு இசை அமைத்துத் தருவார். அப்படிப் பார்த்தால், படம் மேலும் 6 மாதம் தாமதமாகும். தவிர, இது இசையை அடிப்படையாகக் கொண்ட படமும் இல்லை. பாடல்கள், நடனம் ஆகியவற்றை படப்பிடிப்பிலேயே பதிவுசெய்துவிட்டோம். இனி பின்னணி இசை மட்டும்தான்.

பின்னணி இசைக்கு மட்டும் பல லட்சம் செலவழிப்பதாக இருந்தால் பட்ஜெட் தாங்காது. ஆகவே நாமே செய்துவிடுவோம் என முடிவெடுத்தேன். ஆகவே வில்லியம் என்ற இணை இசைப்பாளருடன் இணைந்து நானே படத்திற்கு இசையமைத்துவிட்டேன். அவர் மிகச் சிறப்பாக ஒத்துழைத்தார். படம் பார்த்த பலர் இசை நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். ஆச்சரியமாக இருந்தது.

கே. நீங்கள் எல்லாப் படங்களையும் கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறீர்கள். மற்றவர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்தால் எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்?

ப. ஏற்றுக்கொண்டுதான் ஆகனும்.

கே. தொடர்ந்து படங்களை இயக்கும் திட்டமிருக்கிறதா அல்லது விமர்சனம் செய்வதுதான் எளிதாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

ப. தொடர்ந்து படம் எடுக்கும் ஐடியா இருக்கிறது. விமர்சனமும் தொடர்ந்து செய்வேன். பலர் இதே போன்ற படத்தையே செய்யும்படி சொல்கிறார்கள். ஆனால், சினிமா தெரிந்த பலர், கமர்ஷியலாக ஒரு படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்திற்கு வா என்கிறார்கள். கமர்ஷியல் கதை என்னிடம் நிறைய இருக்கிறது. பீரோ நிறைய டிவிடியும் இருக்கிறது.

கே. உங்களுடைய விமர்சனங்கள், திரைப்படம் ஆகியவற்றைப் பார்க்கும்போது நீங்கள் ஒரு கலகக்குரல் எழுப்பக்கூடியவராக, எதிர்ப்புணர்வு நிரம்பியவராக தோன்றுகிறது...

ப. ஒருவர் இன்னொருவரைத் தாக்குகிறார் என்றால் அதில் தாக்கப்படுபவர்கள் பக்கம் நிற்பதுதான் சரி. அப்படிச் செய்தால் நம்மை கலகக்காரன் என்பார்கள். பார்த்துவிட்டு சும்மா செல்பவர்களை டீசண்டானவர் என்பார்கள். அப்படி ஒரு டீசன்டான நபராக இருக்க நான் விரும்பவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: