சீரியல் குற்றம்: மூதாட்டிகளை கொன்று, பிணங்களோடு உடலுறவு கொண்டதாக ஒருவர் கைது

கண்டமங்கலம் போலீஸ் நிலையம்.
விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த வயதான பெண்கள் இருவரை கொலை செய்து சடலத்துடன் புணர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் பெண்கள் உயிரிழந்த பிறகு அல்லது மயக்க நிலையில் இருக்கும் போது பாலியல் வல்லுறவு செய்யும் குணமுடையவர் என்றும், இதுவரை விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது 4 கொலை, 6 வன்புணர்வு மற்றும் 8 கொள்ளை வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் கூறுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கலித்திரம்பட்டு கண்டப்பன்சாவடி கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி என்பவரின் மனைவி சரோஜா. இவருக்கு வயது 80. இவர் தனது மகள் பூங்காவனத்துடன் வசித்துவந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மற்ற நபர்கள் வெளியே சென்று விட்டதால் சரோஜாவும் பூங்காவனமும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை சூழலைப் பயன்படுத்தி அதிகாலை வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் வீட்டிலிருந்த சரோஜா, பூங்காவனம் இருவரையும் அடித்து கொலை செய்துவிட்டு, அவர்களிடமிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்கள் சடலத்தை உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டமங்கலம் காவல் துறையினர் உறவினர்களிடம் புகாரைப் பெற்று விசாரணையைத் தொடங்கினர்.
கவிதாஸ்
விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணி நடந்தது. சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகையும், திருவெண்ணெய்நல்லூரில் நான்கு வருடங்களுக்கு முன் மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்ட இடத்தில் கிடைத்த கைரேகையும் ஒத்துப்போயின. திருவெண்ணெய்நல்லூர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் கைரேகை கவிதாஸ் என்பவருடையது என்பது ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அந்த கவிதாஸ், கலித்திறாம்பட்டு அருகே உள்ள சூளையில் ஜேசிபி ஓட்டுநராக வேலை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் பிரபு தலைமையிலான தனிப்படை கவிதாஸை கைது செய்தனர். இவர் விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்.
மேற்கொண்டு காவல் துறை விசாரணையில், "கவிதாஸ் வீட்டில் தனியாக இருந்த சரோஜா மற்றும் பூங்காவனம் இருவரையும் தடியால் தாக்கி அவர்களிடமிருந்த 8 கிராம் நகையை கொள்ளையடித்து, கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் உயிரிழந்த பிறகு சடலத்தை புணர்ந்துவிட்டு தப்பிச்சென்றார்," என்று காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றவாளி வீட்டில் இருக்கும் வயதான பெண்களை நோட்டமிட்டு அவர்களைக் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை கொள்ளை அடிக்கிறவர், மேலும் தாக்கப்பட்ட பெண்கள் உயிரிழந்த பிறகு அல்லது மயக்க நிலையில் இருக்கும்போது பாலியல் வல்லுறவு செய்யும் குணமுடையவர் என்பது தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.
இது பற்றி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பிபிசியிடம் கூறியதாவது, "கடந்தகால வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு இறுதியில் பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவு செய்து, அவர்கள் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற வழக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இதற்கிடையில் விழுப்புரம் இரட்டை கொலை மற்றும் பாலியல் வல்லுறவு வழக்கில் விசாரணை செய்ததில் இவர்தான் கடலூரிலும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
கவிதாஸ் தொடர்ந்து இதுபோன்ற கொடுங் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில், இவர் மீது ஒரு கொலை மற்றும் வல்லுறவு வழக்கு உள்ளது. கள்ளக்குறிச்சி திருநாவலூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை, கொள்ளை மற்றும் வல்லுறவு வழக்கும், சேலம் மாவட்டத்தில் இரு கொள்ளை வழக்கும் பதிவாகியுள்ளது," என்றார் அவர்.
"இவருக்கு மது குடித்துவிட்டால் உடலுறவு கொள்ளவேண்டும் என்ற மனநிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனியாக இருக்கும் பெண்களை அடையாளம் கண்டு இப்படி செய்து வந்துள்ளார். இவரை பொருத்தவரை இதுவரை இவர் செய்த கொலை, பாலியல் வல்லுறவு அனைத்துமே 60 முதல் 80 வயதான பெண்கள். இந்த வழக்கை விரைவில் விசாரணை செய்து, இவருக்கு கடுங்காவல் தண்டனை பெற்று தரவேண்டும்," எனக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: