கேரள இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்; ஒரே நாளில் பிரசவம்!

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குழந்தை

(இன்று 10.12.2021 வெள்ளிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதியின் மகள்கள் ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி. இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்தனர்.

இந்தநிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணத்தை நடத்தினர். அதாவது கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி, ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

கர்ப்பமாக இருந்த இருவரும் தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பினர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்பட்டு, அவரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே ரத்தப்பிரிவு என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023-இல் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பத் திட்டம்: மத்திய அமைச்சா் தகவல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விண்வெளி

இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான், 2023-ஆம் ஆண்டு தொடங்கும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவா், இந்த விண்வெளித் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பினால், மனிதா்களை சொந்தமாக விண்வெளிக்கு அனுப்பிய நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தைப் பிடிக்கும் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானே விசாரித்திருக்க கூடாது: முன்னாள் தலைமை நீதிபதி கோகோய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முன்னாள் உச்ச நீதிமற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய்

நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது என் செயல்பாட்டுக்கு அச்சுறுத்துல்விடுக்கும் வகையில்தான் என் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக பார்க்கிறேன் என முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வேதனை தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அயோத்தி வழக்கில் தீர்ப்பு, சபரிமலை தீர்ப்பு மறுஆய்வுமனு, ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு, ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு உள்ளிட்டவற்றில் தீர்ப்பு வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபின் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார் கோகோய்.

கடந்த 2019ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் ஒருவர் அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இந்த வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

இந்த விசாரணைக் குழுவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இடம் பெற்று குற்றச்சாட்டை விசாரிக்க தனியாக குழு அமைத்தார். அந்த குழுவில் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். விசாரணையின் முடிவில் ரஞ்சன் கோகோய் மீது எந்தக் குற்றமும் இல்லை என விசாரணைக் குழு தீர்ப்பளித்தது.

இந்த சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரஞ்சன் கோகோய், "நீதிபதிக்கான நீதி" என்கிற தலைப்பில் எழுதிய சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடந்தது.

அதில் "கடந்த 2019-ம் ஆண்டு நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது என் மீது நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். அது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் நானும் இருந்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை அந்த வழக்கின் விசாரணையில் நான் இடம் பெற்றிருக்கக் கூடாது. நாம் எல்லோரும் தவறு செய்கிறோம். அந்த தவற்றை ஏற்றுக்கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.

எனக்கு எதிராக குற்றச்சாட்டை விசாரிக்கும் போது அந்த விசாரணைக் குழுவில் நானே இடம் பெற்றிருக்க கூடாது. என்னுடைய 45 ஆண்டுகால வழக்குரைஞர் வாழ்க்கையே அதன் மூலம் வீணாகிவிட்டதாக நான் நினைக்கிறேன்.

என் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதை விசாரிக்க திடீரென சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது. அது முறையான விசாரணையில்லை. ஆனால் அந்த அமர்வில் நானும் இருந்தேன், அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கையெழுத்து போட மறுத்துவிட்டேன்.

என்னைப் பொறுத்தவரை தலைமை நீதிபதியாக நான் இருந்தபோது, என் செயல்பாட்டுக்கு ஆபத்துக்கு விளைவிக்கவே என் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவே நினைக்கிறேன். விசாரணையின் முடிவில் யாருக்கும் பாதகமில்லாத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது" என ரஞ்சன் கோகோய் பேசியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: