பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் உடல்கள் ராணுவ மரியாதையுடன் தகனம்

இறுதி ஊர்வலம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய முப்படை தளபதி பிபின் ராவத்தின் உடல் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல் டெல்லி கண்டோன்மென்டில் பீரங்கிகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

டிசம்பர் 8ஆம் தேதி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 12 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார்.

தற்போது அவர் பெங்களூரில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

நேற்று விபத்து பகுதியிலிருந்து மீட்கப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சிப் பள்ளியில் வைக்கப்பட்டது. அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின் அங்கிருந்து உடல்கள் சூலூர் விமானப் படைத்தளத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்டன.

அங்கிருந்து நேற்று மதியம் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்டோர் உடல்கள் டெல்லிக்கு வந்து சேர்ந்தன.

டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை தளத்தில் விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டன.

அங்கு அவர்கள் உடலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி செலுத்தினார்.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

பாலம் விமாப்படை தளத்திலிருந்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் டெல்லி காமராஜர் சாலையில் உள்ள அவர்களது அதிகாரபூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டது. இன்று காலை பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின் அங்கிருந்து டெல்லி கண்டோன்மென்டில் உள்ள பிரார் சதுக்க தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இருவரின் உடல்கள் மட்டுமே அடையாளம் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் விபத்து

புதன்கிழமையன்று குன்னூர் வெலிங்டன் அருகே இந்திய விமானப்படையின் எம்.ஐ.17வி-5 ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக இந்திய விமானப் படை விசாரணை நடத்தி வருகிறது.

இந்திய விமானப் படையை சேர்ந்த குரூப் கேப்டன் வருண் சிங் என்பவர் மட்டும் இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்தார். தற்பொழுது அவருக்கு உயிர் காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தபோது எம்.ஐ.17வி-5 ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கான பயிற்சி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது.

புதன்கிழமை மதியம் 12:15 மணிக்கு தரையிறங்க வேண்டிய இந்த ஹெலிகாப்டர், ஏழு நிமிடங்களுக்கு முன்பு 12:08 மணிக்கு விபத்துக்குள்ளானது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை காலை இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத் ஓய்வுக்குப் பின்னர் இந்திய முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியாக 2019இல் நியமிக்கப்பட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :