ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.6 ஆயிரம் வசூலிப்பதாக புகார்

  • ஜோ.மகேஸ்வரன்
  • பிபிசி தமிழ்
நீர்

பட மூலாதாரம், Getty Images

கரூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குடிநீர் இணைப்புக் கட்டணமாக ரூ.1,200 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.6 ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆனால், மாவட்ட ஆட்சியர் அப்படி முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்கிறார்.

வரும் 2024ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்கும் இலக்குடன் ஜல் ஜீவன் மிஷன் என்கிற திட்டம் மத்திய அரசால் கடந்த 2019ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது. மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெறும் இத்திட்டத்தில், மக்கள் குடி நீருக்காக அலையும் நிலையைப் போக்கி, 55 லிட்டர் வரை குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப் பகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கு தனி நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. கிராம ஊராட்சிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த குறைந்தபட்ச வைப்புத் தொகையை நிர்ணயம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெற கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் கள்ளப்பள்ளி கிராம ஊராட்சியில் ரூ. 1, 200 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரூ. 6 ஆயிரம் வரை கட்டாய வசூல் செய்து வருகின்றனர் என்று புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, தற்போது ராஜஸ்தானில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) பணியாற்றி வரும் புனவாசிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மத்திய நீர் வளத்துறையில் புகார் செய்தார். தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியரிடமும் ஒரு புகார் அளித்துள்ளார். புகாரில், "கள்ளப்பள்ளி ஊராட்சியில் அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்கிறார்கள். அரசையும் பொது மக்களையும் ஏமாற்றி ரூ. 6000 வசூல் செய்கிறார்கள். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணத்தை பொது மக்களிடம் திரும்ப வழங்க வேண்டும். " என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாவட்ட உதவி திட்ட அலுவலர் (ஏ.பி.ஓ) தமிழரசி, மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநர் விஜயசங்கர், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில்குமார், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் கொண்ட குழுவினர் கள்ளபள்ளி ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர் லட்சுமணனிடம் விசாரணை நடத்தினர். பொது மக்கள் பணம் செலுத்திய ரசீதுகள், கோப்புகளையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பொதுமக்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவர் கூறுகையில், "இந்த திட்டம் குறித்தெல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது. பணம் கட்டினால்தான் குடிநீர் இணைப்பு கொடுப்போம் என்றனர். எங்கள் தெருவில் உள்ளவர்கள் பணம் கட்டியும் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குழாயில் தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் பக்கத்து தெருவில்தான் தண்ணீர் பிடித்து வருகிறோம்." என்றார்.

படக்குறிப்பு,

பெரியசாமி

புகார் அளித்த சி.ஐ.எஸ்.எப். பெரியசாமி பிபிசி தமிழிடம் கூறுகையில் , "அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். தவிர்க்க முடியாத நிலையில் அதிகபட்சம் ரூ. 1, 100 மட்டுமே வைப்புத் தொகை வசூலிக்க வேண்டும். ஆனால், ரூ. 6 ஆயிரம் கட்டாய வசூல் செய்கிறார்கள். இது குறித்து ஊரில் உள்ள எனது சகோதரர் சதீஷ் என்னிடம் கூறி ஆதங்கப்பட்டார். இப்பகுதி எனது ஊராட்சியில் இல்லை என்றாலும், பொது நலன் கருதி புகார் அளித்துள்ளேன்.

விவரம் தெரியாமல் கூடுதல் பணம் கட்டியவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க வேண்டும். இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்" என்றார். புகார் அளித்த பெரியசாமியிடம் கிராம ஊராட்சிச் செயலாளர் லட்சுமணன் பேசிய ஆடியோவும் வாட்ஸ் அப் குழுக்களில் பரவியது.

கள்ளப்பள்ளி கிராம ஊராட்சித் தலைவர் சக்திவேலிடம் கேட்டதற்கு, "எங்களது ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பிற்கு கட்டணம் வசூலிக்கவில்லை. ஊராட்சியின் வழக்கமான திட்டங்களுக்குத்தான் வைப்புத் தொகை பெறப்படுகிறது. அதையும் தற்போது நிறுத்தி விட்டோம்." என்றார்,

தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த 6 மாத காலத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் ஒப்பந்தம் எதுவும் விடப்படவில்லை. இது கடந்த ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்பட்ட ஒப்பந்தம். ஆனாலும், முறைகேடு குறித்து மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முறைகேடு என்பது முற்றிலும் தவறானது

இது குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு என்று சொல்வது முற்றிலும் தவறானது. இத்திட்டத்தின் கீழ் பொது மக்கள் பங்களிப்பு நிதியாக ரூ. 1, 200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையையும் உடனே செலுத்த கட்டாயப்படுத்தவில்லை. கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் குடி நீர் இணைப்பு வழங்கப்படுகிறது. வைப்புத் தொகையை தவணை முறையில் செலுத்தினால் போதும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

கள்ளப்பள்ளி ஊராட்சியில் உள்ள 1800 வீடுகளில் 800 வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்திற்கு முன்பே குடி நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், 50 பேர் முறைகேடாக இணைப்பு பெற்றுள்ளனர். அவர்களுக்கு அபராதம் ரூ. 4,800 விதிக்கப்பட்டுள்ளது. இதில், 13 பேர் மட்டுமே அபராதம் செலுத்தியுள்ளனர். அவர்களிடம் தவறுதலாக மேலும் ரூ. 1, 200 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் திரும்ப வழங்கப்படும். குடிநீர் கட்டணத்திற்காக வசூலிக்கப்பட்ட தொகை ஊராட்சியின் 2 வங்கி கணக்குகளில்தான் செலுத்தப்பட்டுள்ளன. இதில், முறைகேடு என்பதற்கே இடமில்லை. எனவே, சிலர் திட்டமிட்டு, பூதாகரமாக்குகிறார்கள். நடைமுறைச் சிக்கலால் ஏற்பட்டுள்ள சிறு தவறு மட்டுமே. முறைகேடு துளியும் இல்லை." என்று விளக்கமளித்துள்ளார்.

குடிநீர் விநியோகம் செய்வது மாநில அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும். இதில் மத்திய அரசின் தலையீடு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும். இது உள்நோக்கம் கொண்டது என்று இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், கிராம ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பிற்கு முறைகேடாக கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் 2ம் தேதி இத்திட்டம் குறித்து, கலந்துரையாடலில், பிரதமர் மோதி கூறுகையில், "சுதந்திரம் பெற்றதில் இருந்து 2019 வரை நம் நாட்டின் 3 கோடி வீடுகளில் மட்டுமே குழாய் வழி குடிநீர் கிடைத்திருந்தது. கடந்த 2019ம் ஆண்டு ஜல் ஜீவன் மிஷன் தொடங்கிய பிறகு 5 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. இன்று நாட்டின் 80 மாவட்டங்களில் உள்ள சுமார் 1.25 லட்சம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் சென்று சேர்கிறது. இலக்குள்ள மாவட்டங்களில் குழாய் வழி குடிநீர் இணைப்பு எண்ணிக்கை 31 லட்சத்தில் இருந்து 1.16 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளைவிட கூடுதலான பணிகள் 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன,''என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: