டெல்லி விவசாயிகள் போராட்டம்: வெற்றிக் களிப்புடன் வீடு திரும்பும் போராட்டக்காரர்கள்

சிங்கு எல்லையிலிருந்து கலைந்து போகும் விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சிங்கு எல்லையிலிருந்து கலைந்து போகும் விவசாயிகள்

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் இந்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்த போராட்டத்தை முடித்துக்கொண்ட விவசாயிகள், சனிக்கிழமை தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத்தொடங்கியுள்ளனர்.

2020 நவம்பர் 26ம் தேதி டெல்லி எல்லைகளில் குவியத் தொடங்கிய விவசாயிகள், 2021 டிசம்பர் 11ம் தேதி போராட்டத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றிலேயே நடந்த மிக நீண்ட மக்கள் போராட்டம் என்று பலராலும் இந்தப் போராட்டம் வருணிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து பல கிலோ மீட்டர் தூரம் அமர்ந்தும், தங்குவதற்கு கொட்டகைகளை அமைத்தும் விவசாயிகள் போராடிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக என, பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபோதும், அவற்றை நாடாளுமன்றத்தில் முறைப்படி திரும்பப் பெறும் நடைமுறையை நிறைவேற்றும் வரை, போராட்டத்தைத் தொடர்வதாக என விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

தவிர, விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்ட உத்தரவாதம், போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை ஆராய குழு அமைப்பதாகவும், அதில் விவசாயப் போராட்டத்தை ஒருங்கிணைத்த சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் இயக்கம்) பிரதிநிதிகளை சேர்த்துக்கொள்வதாகவும் அரசாங்கம் உத்தரவாதம் அளித்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதாகவும் வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில், தங்கள் இயக்கத்தை இடை நிறுத்துவதாக விவசாயிகள் தலைவர்கள் முடிவெடுத்து அறிவித்தனர்.

அதன்படி, டெல்லியின் சிங்கு, டிக்ரி, காசிபூர் எல்லைகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு இன்று சனிக்கிழமை முதல் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

அவர்கள் தாங்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களை கலைத்துவிட்டு, சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

டிராக்டர்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்களில் அணி அணியாய் ஊர் திரும்புவதால், குண்ட்லி-மானேசர்-பல்வால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை, தலைநகர் டெல்லியை ஆக்ரா மற்றும் அம்பாலா நெடுஞ்சாலைகளுடன் இணைப்பதாகும்.

முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப்பில் தொடங்கிய போராட்டம், நவம்பர், 2020-ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்தது.

டெல்லிக்கு வரும் சாலைகளை மறித்து, சிங்கு, டிக்ரி உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் நிரந்தரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சிங்கு எல்லையிலிருந்து கலைந்து போகும் போராட்டக்காரர்கள்.

போராட்டக்களத்தில் பல்வேறு காரணங்களால் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததாக கூறுகிறார்கள், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

லக்கிம்பூர்கேரியில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சரின் மகன் தொடர்புடைய கார் விட்டு ஏற்றப்பட்டதில், விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: