யூடியூபர் மாரிதாஸ் கைது: தமிழக ஆளுநரை சந்தித்து புகார் அளித்த பாஜக

  • ஆ.விஜய்ஆனந்த்
  • பிபிசி தமிழ்
பாஜக

பா.ஜ.க ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். ` ஆளுநரிடம் அளிக்கப்பட்ட மூன்று பக்க புகாரில் ஏராளமான ஆதாரங்களை இணைத்துக் கொடுத்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்' என்கின்றனர் தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள். சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் பாரதியாரின் 140 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் அண்ணாமலை குற்றம் சுமத்தினார்.

பிபின் ராவத் மரணம் தொடர்பாக தவறாகப் பேசிய தி.மு.கவை சேர்ந்த 300 பேர் தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, சைக்கிளில் செல்வதையும் செல்ஃபி எடுப்பதையும் டி.ஜி.பி சைலேந்திர பாபு ஒரு பணியாகச் செய்து வருவதாகவும் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி கையில் இல்லை எனவும் தி.மு.கவினர் கைகளில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், `சி.ஆர்.பி.சி சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க ஆளும் 17 மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்தச் சட்டம் செல்லும் எனக் குறிப்பிட்டவர், எங்களின் பொறுமையைக் கலைத்துவிட வேண்டாம்' எனவும் எச்சரிக்கை தொனியில் பேசினார்.

தொடர்ந்து, கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் தி.மு.க அரசு செயல்படுவதாகக் கூறி வாயில் கறுப்புத் துணியைக் கட்டி பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலையின் பேச்சு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவக்குமார் என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில், ` காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு யூடியூபர் மாரிதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் மாரிதாஸை போலீஸார் கைது செய்தனர். இதனைக் கண்டித்து கடந்த 10 ஆம் தேதி கமலாலயத்தில் பேட்டியளித்த அண்ணாமலை, தமிழ்நாடு அரசை விமர்சித்தும் காவல்துறையை கண்டித்தும் பேசியுள்ளார்.

ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணமலை, எவ்வாறு அவதூறு கருத்துகளைப் பரப்பும் நபருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் எனத் தெரியவில்லை. தமிழ்நாடு காவல்துறையை மிரட்டும் வகையில் அவர் பேசியதை ஏற்க முடியாது. அண்ணாமலை போன்று அனைவரும் பேசத் தொடங்கினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். எனவே, அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் வரையில் நீடித்த இந்தச் சந்திப்பின்போது தி.மு.க அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறியதாகவும் தகவல் வெளியானது.

``ஆளுநருடனான சந்திப்பில் பேசப்பட்டது என்ன?'' என தமிழ்நாடு பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` கடந்த சில நாட்களாக பா.ஜ.க சார்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்த 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மிகவும் சாதாரணமான விஷயங்களையே கையில் எடுத்து வழக்கு போடுகின்றனர். இந்த விவகாரத்தில், தி.மு.கவை சேர்ந்த எதாவது ஒரு ஐ.டி நிர்வாகி போலீஸில் புகார் கொடுப்பார். இவர்களுக்குள் நாடகம் ஒன்றை நடத்தி நள்ளிரவில் கைது செய்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதாவது, இவர்களுக்கு எதிராக எந்தக் கருத்தையும் பதிவிடக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் தி.மு.க சார்பாக பதிவிடுகிறவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர்'' என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` எங்கள் கட்சியின் நிர்வாகியான கல்யாணராமனை கைது செய்துள்ளனர். தற்போது மாரிதாஸை கைது செய்துள்ளனர். இதனை ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். இந்தச் சந்திப்பில் தி.மு.கவின் ஜனநாயக விரோத செயலை, ஆளுநரிடம் சுட்டிக் காட்டியுள்ளோம். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் நடந்த அன்று, அதனை சிலர் கேலி செய்து பதிவிட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் கேளிக்கை விருந்தினை கொண்டாடியுள்ளனர்.

இதுதொடர்பான 300 சமூக ஊடகப் பதிவுகளை ஆளுநரிடம், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்துள்ளார். இதுபோன்ற செயல்களில் நடவடிக்கை எடுக்காமல், மக்களுக்கு நல்ல விஷயங்களைக் கொண்டு செல்கிறவர்களைக் கைது செய்துள்ளனர். இது மாபெரும் தவறு என்பதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். எங்களின் மனு தொடர்பாக ஆளுநரிடம் இருந்து பதில் வரவில்லை. அவர் உறுதியாக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். இந்த விஷயத்தில் எங்களின் கடமையை நாங்கள் செய்துவிட்டோம். அவரது கடமையை அவர் செய்வார். மேலும், இது ஒரு 3 பக்க புகார் கடிதம். அதனுடன் ஆதாரமாக 25 பேப்பர்களை இணைத்துக் கொடுத்துள்ளோம்'' என்கிறார்.

பட மூலாதாரம், @MARIDHASANSWERS TWITTER HANDLE

தி.மு.க குறித்து ஆளுநரிடம் பா.ஜ.க புகார் மனுவை அளித்தது தொடர்பாக, தி.மு.கவின் தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டானிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` தனிநபர் தாக்குதல் நடத்தப்பட்டால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டப்படி புகார் மனு அளிக்கலாம். இந்திய அளவில் பா.ஜ.க போடாத வழக்குகளே இல்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நீதிமன்றத்தையே ஹெச்.ராஜா விமர்சித்தார், பிறகு மன்னிப்பு கேட்டார். இந்த விவகாரத்தில் யாரையும் தேவையில்லாமல் தி.மு.க அரசு கைது செய்யவில்லை'' என்கிறார்.

மேலும், `` கடந்த ஆட்சியில் லஞ்சம் பெற்ற ஊழல்வாதிகளை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என பொதுமக்களே எங்களிடம் நேரிடையாக கேட்கிறார்கள். ஆனால், `ஆதாரம் இருந்தால் மட்டும் கைது செய்யுங்கள்' என முதல்வர் கூறிவிட்டார். நாங்கள் சட்டப்படி செயல்பட்டு வருகிறோம். தங்களின் அதிகார முகவராக ஆளுநரை பயன்படுத்த பா.ஜ.க நினைக்கிறது. ஏழு பேர் விடுதலைக்காக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் ஆளுநரிடம் முதல்வர் கேட்ட 2 கேள்விகளுக்கே பதில் வரவில்லை'' என்கிறார்.

`` ராஜ்பவனுக்கு உள்ளே சென்று மனு கொடுத்தால் தலைப்புச் செய்தியில் வரலாம் என்பதற்காக சென்றுள்ளனர். கல்யாணராமன் மீதும் மாரிதாஸ் மீதும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது. சைலேந்திரபாபு சைக்கிளில் செல்வதையும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். டி.ஜி.பி சரியாக இருப்பதால்தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார். ஐ.பி.எஸ் படித்த அண்ணாமலைக்கு, சட்டம் தெரியாததைதான் அவரது பேச்சு சுட்டிக்காட்டுகிறது. தமிழ்நாடு பா.ஜ.கவின் இந்த நாடகத்துக்கு எல்லாம் பதில் கிடைக்கப் போவதில்லை'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: