ஜாகீர் உசேனை வெளியேற்றிய ரங்கராஜன் நரசிம்மன் மீது ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் காவல் துறையிடம் புகார்

நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன்
படக்குறிப்பு,

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திற்குள் சென்ற பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர் உசேன் கோயிலைவிட்டுத் துரத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேனை அவதூறாகப் பேசி திருவரங்கம் கோயிலில் இருந்து கட்டாயமாக வெளியேற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது திருவரங்கம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாருடன், கோயில் நிர்வாகத்திற்கு ரங்கராஜன் இடையூறுகள் அளித்து வருவதாகக் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி முதல் கடந்த ஜூலை 5ம் தேதி வரை திருவரங்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள 21 புகார்களையும் பட்டியலிட்டுள்ளார் திருவரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து.

ஜாகீர் உசேனை வெளியேற்றிய போது பதிவான சிசிடிவி காட்சிகளும் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் நிர்வாகம் அளித்துள்ள புகாரில் இருப்பது என்ன?

திருவரங்கம் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் தற்போது அளித்துள்ளா புகாரில், "கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்திய போது, ஜாகீர் உசேன் இத்திருக்கோயில் தெய்வத்தின் மீது நம்பிக்கை, பற்று கொண்டு பலமுறை சுவாமி தரிசனம் செய்யும் வழக்கம் உள்ளவர். இதன்படிதான் கடந்த 10ம் தேதியும் வந்துள்ளார். அவரை ரங்கராஜன் தீய உள்நோக்கத்துடன் அவமரியாதை செய்துள்ளார். வன்மத்துடனும் செயல்பட்டு கோயிலை விட்டு வெளியேற்றி, குற்றச் செயல் புரிந்துள்ளார்," என்று கூறியுள்ளார்.

படக்குறிப்பு,

ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மீது கோயில் நிர்வாகம் அளித்துள்ள புகார்களின் பட்டியல்

"இத்திருக்கோயில் பழக்க வழக்கத்தின்படி மாற்று மதத்தினராக இருந்தாலும் இத்திருக்கோயில் சுவாமியை ஏற்றுக் கொண்டு, சுவாமியின் மீது நம்பிக்கை மற்றும் பற்றுதல் ஏற்படுத்திக் கொண்டு, இந்து மத கலாசாரப்படி உடையணிந்து வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம். மேலும், இந்து மத சமயச் சின்னம் அணிந்து தரித்துக் கொண்டு வரும் பக்தர்களும் சுவாமியை தரிசனம் செய்யலாம்."

மேலும், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் என்பவர் திருக்கோயிலுக்கு எதிராக குழப்பத்தை ஏற்படுத்தி, பொது மக்களிடம் புரளிகளை பரப்பி வருகிறார். கோயில் நிர்வாகத்தை சிதைக்கும் வகையில், காவல் துறைக்கும் நீதிமன்றத்திற்கும் தவறான தகவல்களை அளித்து வருகிறார்."

"தற்போது திருக்கோயில் பக்தர் ஜாகீர் உசேன் மீது வன்மச் செயல்களை நிறைவேற்றிய ரங்கராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே ரங்கராஜன் மீது இந்திய தண்டனைச் சட்டம், இதர குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

"என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும்"

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பரத நாட்டியக் கலைஞரான ஜாகிர் உசேன் டிசம்பர் பத்தாம் தேதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பெரும் சத்தமிட்டு, தன்னை கோயிலை விட்டுத் துரத்தியதாக ஜாகிர் உசேன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கும் பதிவில், "நான் என் தாய்வீடாக கருதும், தினம் என் நாவிலும் நெஞ்சிலும் ஏற்றித் தொழும் தென்னரங்கனை என்னரங்கனாக கணப்பொழுதும் மறவாது கருதிக் கொண்டிருக்கும் திருவரவங்கத்திலிருந்து ஒரு மத வெறியனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டேன் . காரணம் என் பெயர். முதன்முறையாக நான் இம்மதத்திற்கு தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக் கொண்டிருக்க அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு, பல அவமானங்களுக்கிடையே துரத்தப்பட்டேன்.

இக்காயம் என்னை என்றென்றும் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் என் பற்று அரங்கனையும் ஆண்டாளையும் விட்டு அணு அளவும் அகலாது. காலம், திருப்பாணனை உள்ளழைத்தது போல் என்னையும் என் நம்பிக்கையையும் ஒருநாள் ஏற்கும். அரங்கன் என்றும் எமக்குத் துணை" என்று கூறியிருந்தார்.

ஜாகீர் உசேன் திருவரங்கம் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக இசைக் கலைஞர் டி.எ.கிருஷ்ணா உள்ளிட்டோர் ஜாகீர் உசேனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "இது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :