வனநிலத்தில் ஆதியோகி சிலையா? - தமிழ்நாடு அரசின் ஆர்.டி.ஐ பதிலும் ஈஷா யோகா மையம் சர்ச்சையும்

  • ஆ.விஜயானந்த்
  • பிபிசி தமிழ்
யானை

பட மூலாதாரம், Getty Images

"யானைகளின் வழித்தடங்களை ஈஷா யோகா மையம் ஆக்ரமிக்கவில்லை" என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, தமிழ்நாடு வனத்துறை பதில் அளித்துள்ளது. `அப்பகுதி யானைகளின் வாழ்விடங்கள்தான் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. அது யானைகளின் பாதை அல்ல என்ற முடிவுக்கு வருவது தவறானது' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். என்ன நடந்தது?

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. போலுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட இந்தப் பகுதியில் அனுமதியின்றி ஈஷா யோக மையம் கட்டடங்களை எழுப்பியுள்ளதாக சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர். இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.

வனநிலத்தை ஈஷா ஆக்ரமித்ததா?

ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக வரும் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுகிறது எனவும் சூழல் ஆர்வலர்கள் பேசி வந்தனர். வனப் பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வெளியில் வருவதால் இந்த மோதல் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.

வனத்துறையின் நிலங்களுக்கு அருகிலேயே ஈஷாவின் கட்டடங்கள் இருப்பதால், மனித - விலங்கு மோதல்கள் நடப்பதாகவும் தகவல் வெளியானது. இதற்காக மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் ஈஷா நிர்வாகம் அனுமதியைப் பெறவில்லை எனவும் சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்தினர்.

இந்நிலையில், `ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் எந்தவித ஆக்ரமிப்பும் செய்யப்படவில்லை' என ஆர்.டி.ஐ கேள்விக்கு கோவை மாவட்ட வனத்துறை பதில் அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த தினேஷ்ராஜா என்பவர், கோவை வனக்கோட்ட பொது தகவல் அலுவலருக்கு சில கேள்விகளை அனுப்பியிருந்தார். இதற்கு அளிக்கப்பட்ட பதிலில், `ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையத்தால் வனப்பகுதியில் எந்தவித ஆக்ரமிப்பும் செய்யப்படவில்லை. மேலும், ஈஷா யோகா மையத்தின் கட்டுமானங்கள் எதுவும் வனப்பகுதியில் இல்லை' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகளின் வலசை பாதையா?

`ஈஷா யோகா மையம் அருகே யானைகளின் வழித்தடம் உள்ளதா?' என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ள வனத்துறை, `வரையறுக்கப்பட்ட யானைகள் வழித்தடம் என எதுவும் இல்லை' எனவும் பதில் அளித்துள்ளது. இந்தத் தகவல் ஈஷா யோகா மையம் நிர்வாகிகளுக்கு உற்சாகத்தையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் வேதனையையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

``கோவை மண்டலத்தில் யானைகளின் வழித்தடங்கள் எவை என்பது அறிவிக்கப்படவில்லை. அதை வைத்து ஆர்.டி.ஐ கேள்விக்குப் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், `அது யானைகளின் வாழ்விடங்கள்' என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. அந்தப் பகுதியானது, யானைகளின் வழித்தடமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது யானைகளின் பாதை அல்ல என்ற முடிவுக்கு வருவது தவறானது'' என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

தொடங்கிவைத்த வனத்துறை

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், `` ஈஷா நிர்வாகத்துக்கு எதிராக முதலில் வனத்துறைதான் 2012ஆம் ஆண்டில் புகார் எழுப்பியது. அப்போது கோவை மாவட்ட வனஅலுவலராக திருநாவுக்கரசர் இருந்தார். அவர் 17.8.2012 ஆம் ஆண்டு அரசின் முதன்மை வனப்பாதுகாவலருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ` இது யானைகளின் வழித்தடம், இங்கு ஈஷா யோகா மையம் கட்டடங்களை எழுப்பி வருகிறது. இதனால் யானை-மனித மோதல்கள் நடக்கின்றன' எனக் குறிப்பிட்டு எந்தெந்த சர்வே எண்கள் எல்லாம் வனத்துறையின் நிலத்துக்கு அருகில் உள்ளன, எவையெல்லாம் யானைகளின் வழித்தடம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், `அப்பகுதியில் எந்தக் கட்டடம் எழுப்புவதாக இருந்தாலும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையமான (Hill Area Conservation Authority) (HACA) ஹாகாவிடம் அனுமதி பெற வேண்டும்' எனச் சுட்டிக் காட்டினார். இந்தக் கடிதத்தை உள்ளூர் திட்டக் குழுமத்துக்கு முதன்மை வனப்பாதுகாவலர் அனுப்பி வைத்தார். உள்ளூர் திட்டக் குழுமமும், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு ஈஷாவுக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு ஈஷா தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை'' என்கிறார்.

ஈஷா மையத்தால் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அதனைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காகவே உள்ளூர் திட்டக் குழுமம் நோட்டீஸ் அனுப்பியதாகக் குறிப்பிடும் வெற்றிச்செல்வன், `` வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 1,44,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ளது. இங்குள்ள 60 கட்டடங்களை இடிப்பதற்காக கடந்த 2013 டிசம்பரில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசு கொடுத்த உறுதிமொழி

இதையடுத்து, அரசின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என 2014ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், `அனைத்துமே அனுமதி பெறப்படாத கட்டடங்கள். இதன்பேரில் நடவடிக்கை எடுப்போம்' எனத் தெரிவித்துள்ளது'' என்கிறார்.

பட மூலாதாரம், ISHA FOUNDATION FACEBOOK PAGE

மேலும், `` தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் யானைகளின் வழித்தடங்கள் என எதுவும் அறிவிக்கப்படவில்லை. யானைகளின் வலசை பாதைகள் கண்டறியப்பட்டாலும் அவை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வனச்சட்டத்தின்படி அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றமும் ஒரு வழக்கில், `தமிழ்நாட்டில் உள்ள யானைகளின் வழித்தடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன'' என்கிறார்.

`` தற்போது வரையில் ஈஷாவின் கட்டடங்கள் என்பது அதிகாரபூர்வமற்றவைதான். அதற்கு ஆதாரமாக அரசின் ஆணைகள் உள்ளன. வன எல்லையில் இருந்து 100 மீட்டர் இடைவெளிவிட்டுத்தான் கட்டடம் கட்ட வேண்டும். இவர்கள் மிக நெருக்கமாக கட்டியுள்ளனர். அது யானைகளின் வாழ்விடப் பகுதியாக உள்ளன. ஆர்.டி.ஐ பதிலில், அறிவிக்கப்பட்ட யானைகளின் வழித்தடங்கள் என்பது இல்லை என வனத்துறை தெரிவித்துள்ளது. அது உண்மைதான்.

அமைச்சர் சொல்வது என்ன?

ஆனால், யானைகளின் வலசை பாதை இல்லை என அவர்கள் அறிவிக்கவில்லை. இதன்மூலம் வார்த்தைகளை வைத்து விளையாடுவதாகப் பார்க்கிறோம். இந்தப் பகுதியில் யானைகளின் வலசைப் பகுதிகளை கண்டறிந்து அறிவிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் எனக் கூறாமல், மூடி மறைக்கும்விதமாக பேசியுள்ளதாகவே பார்க்க முடிகிறது'' என்கிறார் வெற்றிச்செல்வன்.

தமிழ்நாடு அரசின் பதில் தொடர்பாக, தி.மு.கவின் சுற்றுச்சூழல் அமைப்பின் மாநில செயலாளரான கார்த்திகேய சிவசேனாபதியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``ஆர்.டி.ஐ கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்ட பதில்களை பார்த்தேன். ஈஷா தொடர்பாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் என்பது, கட்டட அனுமதி தொடர்பானவைதான். இதுதொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் பதில் கொடுக்கப்பட வேண்டும். அத்துறையின் அமைச்சரிடம் கேளுங்கள்'' என்றார்.

இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` இதுதொடர்பாக துறையின் அதிகாரிகளிடம் பேசிவிட்டு தொடர்பு கொள்கிறேன்'' என்று மட்டும் பதில் அளித்தார்.

தொடர்ந்து, கோவை மாவட்ட வனஅலுவலர் அசோக்குமாரை தொடர்பு கொண்டபோது, பிபிசி தமிழின் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

வனநிலத்தில் ஆதியோகி சிலையா? ஈஷா விளக்கம்

ஆர்.டி.ஐ பதில்களுக்கு சூழல் ஆர்வலர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஈஷா யோகா மையத்தின் ஊடகப் பிரிவை சேர்ந்த கார்த்திக் குமாரிடம் பேசினோம். ``இதுதொடர்பாக உங்களிடம் அதற்குரிய நபர் விளக்கம் அளிப்பார்'' என்றார்.

அடுத்து, ஈஷா யோகா மையம் சார்பில் பிபிசி தமிழிடம் பேசிய தேசிகன் என்பவர், `` ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஈஷா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படும்'' என்றார்.

இதன்பின்னர், ஈஷா யோகா மையம் தரப்பில் இருந்து பிபிசி தமிழுக்கு அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ` ஈஷாவுக்கு எதிராக வன நில ஆக்கிரமிப்பு போன்ற பொய் குற்றச்சாட்டுக்களை சிலர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிரூபிக்கும்விதமாக அரசாங்கம் கடந்த காலங்களில் உரிய விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இதுகுறித்து நாங்களும் பலமுறை விளக்கம் அளித்துள்ளோம். இந்நிலையில், எங்கள் தரப்பு உண்மைக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் வனத்துறை ஆர்.டி.ஐ. மூலம் வெளியிட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

` ஆர்.டி.ஐ தகவல் மூலம், எவ்வித வனநில ஆக்ரமிப்பையும் ஈஷா செய்யவில்லை. யானை வழித்தடத்தில் ஈஷா இல்லை, ஆதியோகி அமைந்துள்ள இடத்தைச் சுற்றி வனநிலம் இல்லை என்பன உள்ளிட்ட பல்வேறு உண்மைகள் சந்தேகத்துக்கு இடமின்றி ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது' எனவும் ஈஷா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :