உரத் தட்டுப்பாடு: பொட்டாஷ் உரத்துக்கு மாற்றாக நுண்ணுயிர் உரம் - ஆர்வம் காட்டாத விவசாயிகள்
- ஜோ. மகேஸ்வரன்
- பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் பொட்டாஷ் உரத் தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக நுண்ணுயிர் உரங்கள் பயன்பாட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையில் டெல்டா மாவட்டங்களில் நெல் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கின. வெள்ளம் வடிந்து, பயிர்கள் தண்டு வலுவாகவும், மணிகள் ஊக்கம் பெற பொட்டாஷ் உரம் தேவையாக உள்ளது. ஆனால், பொட்டாஷ் தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் 50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை பொட்டாஷ் ரூ. 875க்கு விற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 1,040 ஆக உயர்ந்தது. தற்போது ரூ. 1,700 என கடுமையாக உயர்ந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிருக்கு பொட்டாஷ் அவசியமாகியுள்ள நிலையில், இந்த தட்டுப்பாடும் விலை உயர்வும் விவசாயிகளை பாதித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இருப்பில் உள்ள பொட்டாஷ் உரத்தை மூட்டைக்கு ரூ. 700 கூடுதல் விலைக்கு தனியார் விற்பனை செய்கிறார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் பொட்டாஷ் இல்லை. உரிய காலத்தில் உரங்களைப் பயன்படுத்தினால்தான், விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்கும். சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள அரசு, தேவையான உரம், இடு பொருட்களை தவறி விட்டது என்று விவசாயிகள் கூறுகிறார்கள். எனவே, பொட்டாஷ் உரத் தட்டுப்பாட்டுப்பாட்டைப் போக்கி, முந்தைய விலையான மூட்டை ரூ. 1,040க்கு தாராளமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?
தமிழ்நாடு வேளாண்மை, உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டின் டிசம்பர் மாத தேவைக்கு 9,500 மெ.டன் பொட்டாஷ் உரத்தை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போதுள்ள தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு மேலும் 20,000 மெ.டன் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை மாவட்டங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொட்டாஷ் உரத்திற்கு மூட்டைக்கு ரூ. 1, 700 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே இருப்பு உள்ள 18,600 மெ.டன் உரத்திலிருந்து விற்பனை செய்யப்படும் 50 கிலோ மூட்டை ஒன்று, அதில் அச்சிட்டுள்ளபடி ரூ. 1,040க்கு விற்பனை செய்யப்படும். இதைக் கண்காணித்து, நடைமுறைப்படுத்த மாவட்டவாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விவசாய செயல்பாட்டாளர் மன்னார்குடி சேதுராமன் கூறுகையில், "இருப்பில் உள்ள பொட்டாஷ் உரம் முந்தைய விலைக்கே விற்கப்படும் என்பது எந்தளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இந்த விலையுமே அதிகம்தான். காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி என 10 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொட்டாஷ் உரத் தட்டுப்பாடும் விலை ஏற்றமும் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது."
பட மூலாதாரம், SETHURAMAN
சேதுராமன்
"யூரியா, டி.ஏ.பி போன்ற உரங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், பொட்டாஷ் உரம் முழுக்க முழுக்க வெளி நாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே தேவை கருதி முன் கூட்டியே இறக்குமதி செய்திருக்க வேண்டும். மேலும், உர விலையை தனியார் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருவது. உரத்தின் மீதான மானியத்தை மத்திய அரசு படிப்படியாக குறைத்து வருவதுமே இப்படி உச்சத்தில் உரம் விலை இருக்க காரணம்," என்கிறார்.
உரங்களின் விலை, அவற்றுக்கு வழங்கப்படும் மானியம் உள்ளிட்டவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. குறிப்பாக, சத்து அடிப்படையில் உரங்களுக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இதன்படி, 50 கிலோ எடை கொண்ட ஒரு மூடை பொட்டாஷ் உரத்திற்கு ரூ. 303.50, டி.ஏ.பிக்கு ரூ. 1,211 வழங்கப்படுகிறது. மேலும் 45 கிலோ எடையுள்ள யூரியா மூட்டைக்கு ரூ. 1,125 வழங்கப்படுகிறது.
பொட்டாஷ் ஏன் அவசியம்?
பயிர்களுக்கு தழைச் சத்து, மணிச்சத்து , சாம்பல் சத்து ஆகிய மூன்று சத்துகளும் இன்றியமையாதவை. இதில், முதலிரண்டு சத்துகளும் அடியுரம், மேலுரமாக அளிக்கப்படுகின்றன. சாம்பல் சத்து என்பது நடவு நட்டு 40-60 நாட்களில் தேவைப்படும். பயிர் தட்டைகள் வலுவாகி,உறுதியாக நிற்கும். மணிகள் அதிகரித்தால் ஒடிந்து விழாமல் நிற்கும். மகசூல் அதிகம் கிடைக்கும்.
தரமான நெல் மணிகள் கிடைக்க சாம்பல் சத்து அவசியமானதாக உள்ளது. இது, மண்ணில் இருக்கிறது. ஆனால், 2-3% மட்டுமே பயிர் எடுத்துக் கொள்ள முடியும். ஆகையால், பசுமைப் புரட்சியின் பயனாக ரசாயன உரங்கள் மூலம் பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டங்கள் அளிக்கப்படுகின்றன. இதன்படி, சாம்பல் சத்தை பொட்டாஷ் பயிர்களுக்கு அளிக்கிறது. ஆகையால் பொட்டாஷ் உரம் அவசியமானதாக இருக்கிறது. ஆகையால் மகசூலைப் பெருக்க பொட்டாஷ் விலை கடுமையாக உயர்ந்தாலும், அதை வாங்கி பயன்படுத்தும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
மாற்று உயிர் உரம்/பொட்டாஷ் பாக்ட்டீரியா
இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இதற்கு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் நுண்ணூட்டங்கள், உயிர் உரங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசிடோ பாக்டர் ஆகிய நுண்ணுயிர்கள் காற்றில் உள்ள தழைச் சத்தை கிரகித்து தருகின்றன. பாஸ்போ பாக்டீரியாக்கள் மணிச் சத்தை கரைத்து பயிருக்கு அளிக்கின்றன.
அந்த வகையில், சாம்பல் சத்தளிக்கும் ரசாயன பொட்டாஷ் உரத்திற்கு மாற்றாக, பொட்டாஷ் பாக்டீரியா (சிலிகேட் சோல்யூப்ளைசிங்க் பாக்ட்டீரியா) எனும் உயிர் உரத்தை வேளாண் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாக்டீரியா மண்ணில் உள்ள சிலிக்கான் சத்தைக் கரைக்கிறது. அப்போது சாம்பல் சத்தும் தானாக கரைந்து வெளியாகிறது. பொட்டாஷ் பாக்ட்டீரியா உயிர் உரம் வேளாண்துறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பட மூலாதாரம், Swaminathan
உதவி இயக்குநர் சாமிநாதன்
இது குறித்து திருவாரூர் மாவட்ட வேளாண் துறை உதவி இயக்குநர் எஸ்.ஆர்.சாமிநாதன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "பொட்டாஷ் பாக்ட்டீரியாவை மணலில் கலந்து உரம் போல் தெளிக்கலாம். தண்ணீரில் கரைத்து ஸ்பிரேயர் மூலமும் தெளிக்கலாம்."
"ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் போதுமானது. ஒரு லிட்டர் பாட்டில் ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், விவசாயிகள் ரசாயன பொட்டாஷ் உரத்தை பயன்படுத்தும் அளவிற்கு, உயிர் உரங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டுவதில்லை. மண்ணை வளப்படுத்தி, குறைந்த செலவில் அதிக லாபம் தரும் உயிர் உரங்களைப் பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும்," என்றார்.
விவசாயி வயலூர் ராசேந்திரன் கூறுகையில், "ரசாயன பொட்டாஷ் உரத்தைத் தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். பொட்டாஷ் உயிர் உரம் குறித்து எங்களுக்கு பெரிதாக அறிமுகம் இல்லை. இது குறித்து கேள்விப்பட்டு, வாங்க சென்ற போது கிடைக்கவில்லை. நான் இதுவரை பொட்டாஷ் பாக்ட்டீரியாவைப் பயன்படுத்தியதில்லை. தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தால் பயன்படுத்துவோம். ஆனாலும் ரசாயன உரத்தை தொடர்ந்து பயன்படுத்தி மண்ணை பழக்கப்படுத்தி வைத்துள்ளொம். உடடனடியாக உயிர் உரங்களை பயன்படுத்துவது சிரமமாகத்தான் இருக்கும். உடனடி மகசூல் கிடைக்காது என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள்," என்றார்.
பட மூலாதாரம், RAJENDRAN
விவசாயி வயலூர் ராஜேந்திரன்
தமிழ்நாடு அரசின் வேளாண் உற்பத்தி ஆணையர் சமயமூர்த்தி பிபிசி தமிழிடம் கூறுகையில், "பொட்டாஷ் உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரம் கூடுதல் விலை, தட்டுப்பாடு குறித்து விவசாயிகள் தகவல் அளிக்க 93634 40360 என்கிற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதே நேரத்தில், பொட்டாஷ் பாக்ட்டீரியா (கே.எம்.பி) 22 இடங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன."
"இவை, 2020-21 ஆண்டில் 52, 500 லிட்டர் உற்பத்தி செய்து, விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, 2021 -22ம் ஆண்டில் 44, 000 லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு யூனிட்டிலும் தலா 50 ஆயிரம் லிட்டர் என மொத்தம் 11 லட்சம் லிட்டர் நுண்ணுயிர் உரங்க்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது," என்றார்.
இயற்கை உரங்களை பயன்படுத்தி எலுமிச்சை சாகுபடி
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்