பிரயாக்ராஜ் வன்முறை: ஒரு வீட்டை புல்டோசர் மூலம் தகர்ப்பது சட்டப்பூர்வமானதா, சட்டவிரோதமானதா?

  • அனந்த் பிரகாஷ்
  • பிபிசி செய்தியாளர்
புல்டோசர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

பிரயாக்ராஜில் உள்ள ஜாவேத் முகமதின் வீட்டின் இடிபாடுகளுக்கிடையே புல்டோசர்

பிரயாக்ராஜ் வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜாவேத் முகமதின் வீட்டை உத்தரபிரதேச அரசு ஞாயிற்றுக்கிழமை இடித்துள்ளது.

இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த வீட்டில் ஜாவேத் முகமது தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் யோகி அரசின் இந்த நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பியதோடு கூடவே இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டனர்.

அதே நேரத்தில், உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 'குற்றவாளிகள் / மாஃபியாவுக்கு எதிரான புல்டோசர் நடவடிக்கை தொடரும்' என்று ட்வீட் செய்துள்ளார்.

இவ்வாறான நிலையில் புல்டோசர் மூலம் வீட்டை இடிக்கும் நடவடிக்கை சட்டப்பூர்வமானதா அல்லது சட்டவிரோதமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அரசு என்ன சொல்கிறது?

பிரயாக்ராஜில் உள்ள ஜாவேத் முகமதின் வீடு இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, யோகி ஆதித்யநாத் ஒரு ட்வீட்டை பதிவுசெய்துள்ளார்.

"குற்றவாளிகள்/மாஃபியாக்களுக்கு எதிரான புல்டோசர் நடவடிக்கை தொடரும். ஒரு ஏழையின் வீட்டின் மீது தவறுதலாக கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஒரு ஏழை/ஆதரவற்ற நபர் சில காரணங்களால் பொருத்தமற்ற இடத்தில் வீடு கட்டியிருந்தால், முதலில் உள்ளாட்சி நிர்வாகத்தால் முறையான ஏற்பாடு செய்யப்பட்டு, அது முறையாக நிர்வகிக்கப்படும்,"என்று அதில் அவர் கூறியிருந்தார்.

முன்னதாக, மே 26-ம் தேதி, உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா சட்டப்பேரவையில் "ஏழையின் வீட்டில் புல்டோசர் பணியில் ஈடுபடுத்தப்படாது. ஆனால் குண்டர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

குற்றவாளிகளுக்கு எதிரான விரைவான நடவடிக்கை என்ற பெயரில், உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் புல்டோசர் பயன்பாடு தொடங்கியுள்ளது.

"குண்டர்கள், துரோகிகளை நான் விடமாட்டேன். அவர்களை உடைத்து மண்ணில் கலப்போம். சிறுமிகளை தவறாகப்பார்க்கும் யாரும் தப்பிக்கமுடியாது. வீடுகள் இருக்காது, கடைகள் இருக்காது. குற்றவாளிகளுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று இதுவரை 4 முறை மத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்றுள்ள சிவராஜ் சிங் செளஹான் சமீபத்தில் கூறினார்.

சிவராஜ் சிங் செளஹானின் அரசில் உள்துறை அமைச்சராக உள்ள நரோத்தம் மிஸ்ராவும் கர்கோன் வன்முறைக்குப் பிறகு இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டார்.

"கற்கள் எங்கிருந்து வந்ததோ அந்த வீடுகள் கற்குவியலாக மாற்றப்படும்" என்று மிஸ்ரா கூறியிருந்தார்.

யோகி

பட மூலாதாரம், Getty Images

இந்த அறிக்கைக்குப் பிறகு, நிர்வாகம் கர்கோன் மாவட்டத்தில் பலரின் வீடுகளை இடித்தது.

உத்தரபிரதேச முதல்வராக பாஜக தலைவர் யோகி ஆதித்யநாத் ஒரு அரசியல் சாசனப் பதவியை வகிக்கிறார்.

இதிலிருந்து புல்டோசர் மூலம் வீட்டை இடிப்பது தொடர்பாக இந்தத் தலைவர்கள் அளிக்கும் அறிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகவே இருந்தாக வேண்டும்.

"ஒருவர் செய்யும் எந்தக் குற்றத்திற்கும் தண்டனையாக, அவருடைய வீடு இடிக்கப்படலாம்" என்பதே இவர்களின் அறிக்கைகளுக்கு அர்த்தம்.

ஆனால் இந்தியச் சட்டம் அத்தகைய நடவடிக்கையை அனுமதிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

சஞ்சய் ஹெக்டே, உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர். இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதமானது மற்றும் பழிவாங்கும் செயல் என்கிறார் அவர்.

​"சந்தேகத்திற்குரிய நபர்களின் வீட்டில் புல்டோசரை ஏற்ற தற்போதைய சட்டத்தில் எந்த விதியும் இல்லை. மாநகராட்சி தொடர்பான சட்டத்தை மீறியதற்காக புல்டோசரை ஈடுபடுத்தியதாக அரசு கூறுகிறது. எனவே அரசு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அறிவித்த பின் விசாரிக்க அவகாசம் வழங்க வேண்டும்."

"இங்கு என்ன நடந்தாலும் நகராட்சி சட்டத்தை மீறுவதற்காக இந்த இடிப்பு நடக்கவில்லை. ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார் அல்லது வேறு ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் செய்யப்படும் பழிவாங்கும் செயலாகும். இது முற்றிலும் சட்டவிரோதமானது" என்றார் அவர்.

ஆனால் தண்டனை என்ற பெயரில் வீட்டை இடிக்க சட்டம் அனுமதிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் ஹெக்டே, "ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரது வீட்டை இடிக்க வேண்டும் என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் எந்த விதியும் இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்படலாம். அதை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மாற்றலாம் என்பது சட்டத்தில் உள்ள ஒரே விதி. ஆனால், ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவரது வீட்டை இடிக்க வேண்டும் என்ற சட்டம் இதுநாள் வரையில் உருவாக்கப்படவில்லை."என்றார்.

உத்தரபிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூரும் இந்த நடவடிக்கைகளை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக கருதவில்லை.

புல்டோசர்

பட மூலாதாரம், Getty Images

இதனுடன், குற்றங்களைத் தடுப்பது என்ற பெயரில் சட்டத்தை மீற முடியாது என்று அவர் கூறுகிறார்.

"குற்றங்களைத் தடுக்க நிர்வாகம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான். இதற்காக சட்டத்தை மீற முடியாது. குற்றங்களைத் தடுக்க சிஆர்பிசி, நீதிமன்றம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணிக்க முடியாது" என்று அவர் கூறுகிறார்.

சட்ட விரோத நடவடிக்கை ஏன்?

இவ்வாறான நிலையில், எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனையாக வீட்டை இடிப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றால், இந்த நடவடிக்கையை அரசுகள் தொடர்ந்து நியாயப்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

புல்டோசர் போன்ற செயல்களால் அரசியல் கட்சிகளுக்கு என்ன லாபம் என்ற கேள்வியும் உள்ளது. இதற்கு விடை காண, புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் கேங்ஸ்டர் விகாஸ் துபேயின் வீடு இடிக்கப்பட்டதில் இருந்து வீடுகள் இடிக்கும் பணி தொடங்கியது. யோகி ஆதித்யநாத்தின், குற்றங்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடாக இது பார்க்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தின் பிற மாவட்டங்களிலும் புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதன் மூலம் பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் கிடைத்தது.

கார்கோனில் இடிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகள்

பட மூலாதாரம், MADHYA PRADESH POLICE VIA TWITTER

படக்குறிப்பு,

கார்கோனில் இடிக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகள்

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் நடந்த வன்முறைக்குப் பிறகு, பலரின் வீடுகள் மற்றும் கடைகளை நிர்வாகம் புல்டோசர்களைக் கொண்டு சேதப்படுத்தியது.

இதற்கான காரணத்தை அப்பகுதி மாவட்ட அதிகாரி அனுக்ராவிடம் கேட்டபோது,​​"வீடுகள் எரிக்கப்பட்டவர்களிடம் கேளுங்கள். அந்த மக்களிடையே மிகுந்த கோபம் உள்ளது, இந்த செயலால் நிர்வாகம் எதோ செய்வதாக அவர்கள் உணர்கிறார்கள். நிர்வாகம் தங்களுடன் நிற்கிறது என்று நினைக்கிறார்கள்," என்றார்.

புல்டோசர்களைக் கொண்டு வீடுகள் மற்றும் கடைகளை இடித்த சம்பவங்கள் குஜராத்திலும் காணப்படுகின்றன. பின்னர் டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த வகுப்புவாத வன்முறைக்குப் பிறகு புல்டோசர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜஹாங்கிர்புரியில் புல்டோசர், கதவை உடைத்து திறக்கிறது

பட மூலாதாரம், SALMAN ALI/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜஹாங்கிர்புரியில் புல்டோசர், கதவை உடைத்து திறக்கிறது

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டது.

கான்பூரிலிருந்து கார்கோன் வரையிலும், ஜஹாங்கிர்புரியிலிருந்து பிரயாக்ராஜ் வரையிலும் புல்டோசர்கள் மூலம் வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் சம்பவங்களில் ஒரு விஷயம் பொதுவாக உள்ளது. அதுதான் ஊடகங்களின் மிகப்பெரிய கூட்டம்.

இதனுடன், புல்டோசர் மூலம் வீடுகள் மற்றும் கடைகளை இடித்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தங்கள் தலைவரின் படத்தை மீம்ஸ், சமூக வலைதள பதிவுகள் மூலம் வலுப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இதற்கு உதாரணம் உத்தரபிரதேச அரசில் அமைச்சர் சஞ்சய் ராயின் ட்வீட்.

சம்பந்தப்பட்ட தலைவர் யாருக்கும் பயப்படுவதில்லை என்பதையும், குற்றத்திற்கு எதிராக கடுமையாக செயல்பட்டு உடனடி நடவடிக்கை எடுப்பதையும் நிலைநாட்ட, இந்த சமூக ஊடகச் செய்திகள் முயல்கின்றன.

காணொளிக் குறிப்பு,

அஃப்ரீன் பாத்திமா வீட்டை இடித்த உபி அரசு - இவர் யார்?

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, குற்றம் நடந்த சில மணி நேரங்களுக்குள் சந்தேக நபர்களைப் பிடிப்பது விரைவான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. இதற்குப் பிறகு குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கான நீதித்துறை செயல்முறை தொடங்கியது.

ஆனால், யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, புல்டோசர் மற்றும் ஹாஃப் என்கவுன்டர்கள் (குறிப்பாக காலில் சுடுவது) போன்றவற்றைப் பயன்படுத்துவது விரைவான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இது விமர்சனத்துக்கு உள்ளானது.

இதன் மூலம் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத்தேர்தலிலும் பா.ஜ.க. ஆதாயம் பெற்றது. ஆனால் இதற்கெல்லாம் என்ன தேவை என்ற கேள்வி எழுகிறது.

மூத்த பத்திரிகையாளர் அஷூதோஷ் பரத்வாஜ் சமீபத்தில் அவுட்லுக் என்ற ஆங்கில இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார், அதில் அவர் இதை விரிவாக விளக்கியுள்ளார்.

"இந்த மாபெரும் இயந்திரம் ஒரு வலுவான தலைவரின் பிம்பத்தை உருவாக்கப் பயன்படுகிறது. புல்டோசர் பாபா மற்றும் புல்டோசர் மாமா போன்ற புனைப்பெயர்கள் வளர்கின்றன. மார்ச் மாதம், பாஜக எம்எல்ஏ ராமேஷ்வர் ஷர்மா தனது அரசு இல்லத்திற்கு வெளியே பல புல்டோசர்களை நிறுத்தி வைத்தார். அவைகளில் பிரமாண்டமான போர்டுகள் அமைக்கப்பட்டன,"என்று பரத்வாஜ் எழுதுகிறார்.

'மகளின் பாதுகாப்பில் யார் இடையூறாக வந்தாலும், புல்டோசர் மாமா சுத்தியலாக மாறுவார்," என்று அதில் எழுதப்பட்டிருந்தது. சில நாட்களுக்குப் பிறகு, 'புல்டோசர் மாமா ஜிந்தாபாத்' என்ற கோஷத்துடன் முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை ஷர்மா வரவேற்றார். சட்ட விரோதமான செயல் இப்போது அரசியல் ஆதாயம் தரும் செயலாக மாறிவிட்டது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் 58 பேரணிகளில் புல்டோசர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், இந்த எல்லா இடங்களிலும் கட்சி வெற்றி பெற்றதாகவும் செய்திகள் வந்தன. யோகியின் வெற்றிக்குப் பிறகு ஆக்ராவில் பல இளைஞர்கள் புல்டோசர் மற்றும் புல்டோசர் பாபாவின் பெயரை பச்சை குத்தியுள்ளனர் என்று யோகியின் அபிமானிகள் கூறுகின்றனர்.

புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்தால் என்ன ஆகும்?

ஆனால், புல்டோசர் நடவடிக்கைகளை பாஜக நியாயப்படுத்துகிறது மற்றும் குற்றங்களைக் குறைப்பதில் அவை உதவிகரமாக உள்ளன.

இவ்வாறான நிலையில், சட்டவிரோதமான முறையில் வீடுகளை புல்டோசர் மூலம் அகற்றும் சம்பவங்களை சாதாரணமாக கருதினால், அதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

"அச்சத்தை உருவாக்கி குற்றங்களை தடுப்பது என்பது கடந்த கால விஷயமாகிவிட்டது. இப்போது சீர்திருத்தக் கோட்பாடு உள்ளது . ஆதிக்கவாதிகளின் கொள்கை இப்போது வேலை செய்யாது. இப்போது 18 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளைப் பற்றி பேசினால் அது சரியில்லை.மிகவும் சிரமப்பட்டு இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட முடிந்தது. கடந்த 75 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. இதை சிறப்பாக தொடர வேண்டும். அதை உடைக்க முடியாது. "என்று முன்னாள் தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் கூறினார்.

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாகிவிட்டால் அதன் விளைவு என்னவாகும்.

இதற்கு பதிலளித்த சஞ்சய் ஹெக்டே, "அரசுகள் இப்படியே தொடர்ந்தால், ஒன்று பொதுமக்கள் பயத்தில் ஒடுங்கி விடுவார்கள் அல்லது கோபம் மேலும் அதிகரிக்கும். இது எந்த விவேகமான அரசும் செய்யாத நெருப்பை நெருப்பால் அணைக்கும் வேலை" என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: