தமிழக பட்ஜெட் தாக்கல்

புனித ஜார்ஜ் கோட்டை

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமையன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறிய அவர், புதிதாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலவசத் திட்டங்கள்

இலவசமாக கறவை மாடுகள் வழங்கப்படுவதை ஒட்டி, பால் விநியோக கட்டமைப்பும் வலுப்படுத்தப்படும் என்றார்.

இலவச மடிக் கணினி திட்டத்துக்கு 912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படுவதாகவும், முகாம் வசதிகள் மேம்படுத்தப்படவிருப்பதாகவும் பன்னீர்செல்வம் மேலும் கூறினார்.

இந்த வரவு செலவு திட்டத்தில் ரூ.8900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் கிடைக்கும். இருந்தும் பற்றாக்குறை, அரசுக்கடன் எல்லாமே அகில இந்திய அளவில் அமலில் இருக்கும் வரையறைகளுக்குள்தான் இருக்கின்றன என்று நிதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

திமுக வெளிநடப்பு

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் திமுக அணித்தலைவர் மு க ஸ்டாலின் சபையில் பேச எழுந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுகவினர் பழிவாங்கப்படுவதைக் கண்டித்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே வரிசையில் அமர்த்தவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்படுவதைக் கண்டித்தும் தாங்கள் வெளிநடப்புச் செய்த்தாக கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய பட்ஜெட்டில் காணப்படும் பல திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டவை என்பதிலிருந்தே, இவ்வரவு செலவுத்திட்டத்தினை உருவாக்குவதில் அரசு அதிக நாட்டம் காட்டவில்லை என்று நாம் புரிந்துகொள்ளலாம் எனக்கூறியிருக்கிறார்.

மேலும் சமச்சீர் கல்வி, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பட்ஜெட் உரையில் குறிப்பிடப்படாததையும் கருணாநிதி குறை கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் சார்பாக கருத்து தெரிவித்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இருப்பதாகக் கூறினார்.