'தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்'- ஜெ.

  • 23 ஆகஸ்ட் 2011
முதல்வர் ஜெயலலிதா படத்தின் காப்புரிமை AFP
Image caption முதல்வர் ஜெயலலிதா

தை மாதத்து முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக அறிமுகப்படுத்திய கடந்த திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து, சித்திரைத் திங்கள் முதல் நாளையே மீண்டும் புத்தாண்டாக அறிவித்து ஜெயலலிதா தலைமையிலான புதிய தமிழக அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

நீதிமன்றம் வரை சென்ற சமச்சீர் கல்வித் திட்டம் தவிர, திமுக ஆட்சியில் அறிமுகமான பெரும்பாலான திட்டங்களை ரத்து செய்துவிட்ட புதிய அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதி தைத் திங்கள் முதல் நாளை புத்தாண்டாக அறிவித்த சட்டத்தையும் இப்போது ரத்து செய்துவிட்டது.

அதற்கான மசோதாவினை இன்று செவ்வாய்க் கிழமை சட்டமன்றத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் அறிமுகப்படுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் விவாதத்திற்குப் பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது.

விவாதத்தின்போது முதல்வர் ஜெயலலிதா ‘தைத் திங்களில் புத்தாண்டு துவங்க எவ்வித ஆதாரமுமில்லை, மாறாக சித்திரையில் தொடங்கவே பல்வேறு ஆதாரங்கள் உண்டு, இந்நிலையில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தினை ரத்து செய்ய, பல தரப்பினரின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, ஜெயலலிதா வழக்கம் போல் ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகிறார், தமிழ் புலவர்களின் கோரிக்கையின்படியே தை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.

1921ல் மறைமலை அடிகளார் தலைமையில் 500 புலவர்கள் இது தொடர்பில் கோரிககை வைத்திருந்தனர் என்றும் நினைவு கூர்ந்திருக்கிறார்.