இரட்டை இலக்கத்தை நெருங்கும் இந்திய பணவீக்கம்

இந்திய நாணயம் படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption இந்திய பணவீக்கம்

இந்தியாவில், பணவீக்க வீதம், இரட்டை இலக்கத்தை நெருங்கியிருக்கிறது.

ஆகஸ்ட் மாத நிலவரப்படி, பணவீக்க வீதம் 9.78 ஆக உள்ளது. உணவு மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம், பணவீக்கம் 9.22 சதமாக இருந்தது. தொடர்ந்த 9-வது மாதமாக, பணவீக்கம் 9 சதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

உணவுப் பொருட்களின் விலை 9.6 சதம் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் விலை 45 சதமும், பழங்களின் விலை சுமார் 23 சதமும் அதிகரித்துள்ளது. காய்கறிகளின் விலை சுமார் 12 சதம் அதிகரித்திருக்கிறது.

எரிபொருள் மற்றும் மின்சாரத் துறையில் பணவீக்கம் சுமார் 13 சதமாக உள்ளது.

தொழில்துறை உற்பத்தி, கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜூலை நிலவரப்படி 3.3 சதமாகவே உள்ளது.

ஏப்ரல் – ஜூன் இடையிலான காலகட்டத்தில், பொருளாதார வளர்ச்சி வீதம் 7.7 சதமாக உள்ளது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மிகக்குறைவான வளர்ச்சி வீதமாகப் பார்க்கப்படுகிறது.

பணவீ்க்கம், இரட்டை இலக்கத்தை நெருங்கும் நிலையில், பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேலும் இறுக்கமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 11 முறை வங்கி வட்டி வீதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியிருக்கிறது.

அதே நேரத்தில், வட்டி வீதங்களை உயர்த்துவதன் மூலம் புதிய முதலீடுகளுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை ஏற்படும் என்று தொழில் துறையினர் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.