திரைப்படத் தயாரிப்புச் செலவு - நம்பகத்தன்மை பிரச்சினைகள்

திரைப்படத் தயாரிப்பு செலவுக் கணக்கு சரிதானா?

பட மூலாதாரம், pr

படக்குறிப்பு,

மிகப் பெரும் செலவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரா ஒன் திரைப்படம்

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான் தயாரித்து நடித்த ரா.ஒன் என்ற திரைப்படம் நாளை தீபாவளி தினத்தன்று வெளியாகிறது. மிக அதிக பொருட்செலவில் அதாவது சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்று கூறப்படும் இந்தப் படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

ரா ஒன் திரைப்படம் போல கடந்த ஆண்டும், தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜனிகாந்த் நடித்த “இயந்திரன்” படமும் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கூறப்பட்டது.

திரைப்பட முதலீட்டு வழிமுறைகள் இன்னும் வெளிப்படைத் தன்மை இல்லாமலேயே இருக்கும் இந்திய திரைப்பட உலகில் இது போன்ற பொருட்செலவு குறித்து செய்யப்படும் விளம்பரங்களில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து தமிழோசைக்கு பேட்டியளித்த தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளரும், திரையுலகப் பிரச்சினைகள் குறித்து எழுதிவருபவருமான, கோவிந்த் தனஞ்செயன், திரைப்படத் தயாரிப்பில் எவ்வளவு செலவு ஏற்பட்டது என்பது குறித்து, சரியான மதிப்பீடுகிடையாது, தயாரிப்பாளர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளவேண்டிய நிலையில்தான் இருக்கிறோம் என்றார்.

இது இந்திய திரைப்படத் துறை இன்னும் ஹாலிவுட் திரைப்படத்துறை போன்று, ஒளிவு மறைவற்ற தன்மையுடன் இருக்கும் நிலையில் இல்லாததால் ஏற்படுகிறது, ஹாலிவுட்டில் நடிகர்களுக்கு ஊதியம் காசோலையாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான செலவுகள் காசோலை மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அது போல திரைப்பட அரங்குகளும் இன்னும் இந்தியாவின் பல ஊர்களில் பணத்தைப் பெற்றுக்கொண்டு டிக்கெட்டுகளை வழங்கும் வழக்கத்தையே கைக்கொண்டிருக்கின்றன. எனவே, தயாரிப்புச் செலவு என்பதும், முதலீட்டுக்கு கிடைத்த வருவாய் என்பதும் இன்னும் சரியான முறையில் கணக்குக்காட்டப்படாத நிலை இருக்கவே செய்கிறது என்றார்.