இந்தியா: 2010 இல் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் தற்கொலை

கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்த பெண்ணின் குடும்பம்
படக்குறிப்பு,

கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்த பெண்ணின் குடும்பம்

இந்தியாவில் ஒரு நாளைக்கு 368 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த ஆண்டில் (2010) மட்டும் சுமார் ஒரு லட்சத்து முப்பத்தையாயிரம் பேர் (1,34,599) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக

மத்திய அரசின் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்ட விபரங்கள் கூறுகின்றன.

இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 2009 ஆம் ஆண்டு 14,424 பேரும் 2010 ஆம் ஆண்டு 16,561 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

சென்னைக்கு இரண்டாம் இடம்

நாடு முழுவதும் உள்ள 35 பெரு நகரங்களில் பெருநகரங்களைப் பொறுத்தவரை, பெங்களூரில் அதிக அளவாக 1778 பேரும், அதற்கு அடுத்ததாக சென்னையில் 1,325 பேரும் கடந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 41 சதவீதத்தினர் சுயதொழில் செய்தவர்கள். கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் தூக்குப் போட்டுக் கொண்டும் அதற்கு அடுத்து நஞ்சருந்தி 20 சதவீதம் பேரும் தம்மை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக ஆண்கள் அதிக அளவிலும் தனிப்பட்ட உணர்வு ரீதியான விடயங்களுக்காக பெண்கள் அதிக அளவிலும் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

'மெய்நிகர் உலகில் சஞ்சரிப்போர்'

இந்த விடயம் குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட மனோவியல் நிபுணர் டாக்டர் ருத்ரன், தற்கொலைக்கு காரணமான மன அழுத்தம் அதிகரிக்க அக மற்றும் புற காரணங்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.

உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நோய்களால் தற்கொலைக்கான தூண்டுதல் நிகழலாம் என்று தெரிவித்த அவர், புற காரணங்களாலும் தற்கொலைகள் அதிகளவில் நிகழ்வதாகத் தெரிவித்தார்.

இணையம் போன்ற மெய்நிகர் உலகில் (வேர்ச்சுவல் வேர்ல்ட்)சஞ்சரிக்கும் நேரம் அதிகமாகும் வேளையில், நிஜ உலகில் இருப்போருடன் உறவாடுவது குறைவதும் தனிமை அதிகரிப்பதும் தவறான முடிவுகளை எடுக்க மக்களை கொண்டுசெல்வதாக குறிப்பிட்ட டாக்டர் ருத்ரன், இதைத் தடுக்க அடுத்த தலைமுறையினருக்கு தமது கலை கலாச்சாரம் பற்றி விரிவாக சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பரந்து பட்ட அளவில் படிக்க கற்றுத் தரவேண்டும் என்றும் கூறினார்.