அந்தமான் மொழிகள் குறித்த அகராதி

  • 17 நவம்பர் 2011
அந்தமான் பழங்குடிகள்
Image caption அந்தமான் பழங்குடிகள்

இந்தியாவின் அந்தமான் தீவுகளில் அழிந்து வரும் நிலையில் உள்ள மொழிகள் குறித்த முதல் அகராதியை பிரிட்டனில் உள்ள ஒரு பேராசிரியர் தொகுத்துள்ளார்.

அந்தமான் தீவுகளில் பேசப்படும் நான்கு மொழிகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு மொழிகள் ஏற்கனவே அழிந்துவிட்டன. அந்தமானின் பூர்வ குடியினர் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த அகராதியை தொகுக்கும் உத்வேகம் தமக்கு ஏற்பட்டது என்று இந்த அகராதியைத் தொகுத்து பேராசிரியர் அன்விடா அபி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அந்தமானில் வாழும் பூர்வகுடியினர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

அந்தமானில் பேசப்படும் போ என்ற மொழி பேசும் கடைசி நபர் கடந்த ஆண்டு இறந்துபோனதை அடுத்து அந்த மொழி அழிந்துவிட்டதாக கருதப்படுகிறது.

பழங்குடியின மக்கள் வாழும் காட்டுப் பகுதிகள் வழியாக செல்ல பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், தற்போது அதிகரித்துவரும் சுற்றுலாத் தொழில் காரணமாக பழங்குடியினருக்கும் வெளியுலகுக்கும் இடையேயான தொடர்புகள் அதிகரித்துவருகின்றன.

ஆனால் இத்தொடர்புகள் காரணமாக வெளி உலக வியாதிகள் பழங்குடியினருக்கு ஏற்படுவதுடன் மதுப் பழக்கம் போன்ற தீய பழக்கங்களும் அவர்களிடம் ஏற்படுகிறது என்கிற கவலைகளும் சில ஆய்வாளர்களால் வெளியிடப்படுகிறது.