சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு

இந்திய நாடாளுமன்ற அவை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

இந்திய நாடாளுமன்ற அவை

சில்லறை வர்த்தகத்தில், பல்வேறு நிறுவனத் தயாரிப்புக்களை விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டில் 51 சதத்தை அனுமதிக்க இந்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு, வர்த்தகர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்திருக்கின்றன.

ஏற்கெனவே, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 51 சதமாக இருந்ததை, 100 சதமாகவும்உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கேபினட் செயலர் அஜித்குமார் சேத் தலைமையிலான கமிட்டி, சில்லறை வர்த்தகத்தில் பல்பொருள் நிறுவன தயாரிப்புக்கள் விற்பனையில் 51 சதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில், அது அதிகபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

தற்போது, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், அரசின் இந்த முடிவு, இன்று நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது. அமைச்சரவையின் முடிவு குறித்து, இரு அவைகளிலும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

இதுதொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சர்மா, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் அடுத்த மூன்று ஆண்டுகளில், 10 மில்லியன் வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும், பில்லியன்கணக்கான முதலீடுகள் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை விடுவித்து, அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்ய இது முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்தார். அரசின் முடிவால், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தல் துறைகளில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

திரிணாமூல் காங்கிரஸார் அவையின் மையப்பகுதிக்கு வந்து, முதலில் விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், அதன் பிறகு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு பற்றி சிந்திக்கலாம் என்று ஆவேசமாகக் கூறினார்கள்.

வால்மார்ட்

இந்த திட்டத்தின் விளைவாக டெஸ்கோ, வால்மார்ட் போன்ற சர்வதேச சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் இந்தியாவில் கடைகளை ஆரம்பிக்க முடியும்.

இதுநாள்வரை இந்த நிறுவனங்கள் மொத்த வியாபாரிகளுக்குத்தான் பொருட்கள் விற்க முடிந்ததே ஒழிய நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இவர்கள் பொருட்கள் விற்க முடிந்திருக்கவில்லை.

இந்த முடிவு ஒரு நிர்வாக முடிவென்பதால், இதனை அறிவிப்பதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம் கிடையாது.

கருத்து வேறுபாடுகள்

இந்த திட்டத்தால் இந்தியாவில் வியாபாரப் போட்டி ஏற்படும் அதன் விளைவாக பொருட்களின் விலை குறையும் தரம் உயரும் என்று இந்தியாவில் பணவீக்கமும் விலையேற்றமும் மிக அதிகமாக இருந்துவரும் சூழ்நிலையில் இத்திட்டம் நன்மை தரும் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

ஆனால் பெரும் சர்வதேச நிறுவனங்கள் போட்டிக்கு வந்தால் இந்தியாவின் சிறிய வர்த்தகர்களும் ஏழை வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். தமது உற்பத்திப் பொருட்களுக்கு இந்திய விவசாயிகளுக்கு கிடைத்துவந்த விலை மேலும் குறையும் என்று இன்னொரு பக்கத்தில் வாதிடப்படுகிறது.