பாதிக்கப்பட்ட இருளர் பெண்களுக்கு இழப்பீடு

பாதிக்கப்பட்ட பெண்கள் படத்தின் காப்புரிமை bbc
Image caption பாதிக்கப்பட்ட பெண்கள்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பழங்குடி இருளர் இனப்பெண்கள் நால்வரை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு காவலர்களும், திருக்கோவிலூர் காவல்நிலைய ஆய்வாளரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

பாதிக்கப்பட்டபெண்களுக்கு தமிழக அரசு தலா 5 இலட்ச ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளது.

முதல்வர் ஜெயல்லிதா இதுகுறித்து வெளியிட்டுள்ள் அறிக்கையொன்றில் மண்டபம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் போது அந்த கிராமத்தைச் சேர்ந்த நான்கு இருளர் பெண்களை காவல் துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, காவல் துறையில் ஒரு புகார் பெறப்பட்டது. குற்ற நடைமுறை சட்டப்பிரிவுன் கீழும் 176 (i)ன்படி இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச்) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இடைநீக்கம்

முதற்கட்ட விசாரணையில், இருளர் இனத்தைச் சேர்ந்த சில பெண்களை காவல் துறையினர் இரவு நேரத்தில் வாகனத்தில் வைத்திருந்ததாக தெரிய வந்ததால் தனது உத்தரவின் பேரில், ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகர், காவலர்கள் கார்த்திகேயன் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்

திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவேண்டுமெனக்கோரி பொதுநலவழக்கொன்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மனு விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிப்தி இக்பால் மற்றும் சிவஞானம் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர், புகாருக்குள்ளாயிருக்கும் காவலர்கள் மாவட்டத்திற்கு வெளியே அனுப்பப்படவேண்டும் என உத்திரவிட்டு வழக்கை டிசம்பர் 7ஆம் நாளுக்கு ஒத்திவைத்தனர்.