முல்லைப் பெரியாறு: புதிய அணை பற்றி கேரளா தீர்மானம்

கையெழுத்துப் போராட்டம் நடத்தும் தமிழர்கள்
Image caption கையெழுத்துப் போராட்டம் நடத்தும் தமிழர்கள்

முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் இடிந்துவிடக்கூடும் என்றும் அதற்காக புதியதோர் அணை கட்டப்படவேண்டும் என்றும், அது கட்டி முடிக்கப்படும்வரை தற்போதிருக்கும் அணையின் நீர்மட்டம் 120 அடியாகக் குறைக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கேரள சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழ்நாட்டிற்கு தற்போது வழங்கப்பட்டுவரும் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படுமென்றும் தீர்மானம் கூறுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முல்லைப் பெரியாறு பிரச்சினையினை விவாதிக்கவென இன்று வெள்ளிக்கிழமை கூட்டப்பட்ட சட்டமன்றக் கூட்டத்தில் புதிய அணை குறித்த தீர்மானத்தினை முதல்வர் ஒம்மன் சாண்டி முன்மொழிந்தார்.

அணை அமைந்துள்ள பகுதியில் தொடரும் நில அதிர்வுகள் 116 ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து நியாயமான் அச்சங்களை மக்கள் மனதில் தோற்றுவித்திருப்பதாகவும் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு புதிய அணைதான் ஒரே தீர்வு என்றும் தீர்மானம் வலியுறுத்துகிறது.

மூன்று மணிநேர விவாதத்தை முடித்துவைத்துப் பேசுகையில் முதல்வர் சாண்டி, தமிழ் நாட்டுடன் சுமுக உறவைப் பேணவே கேரளம் விரும்புவதாகவும் பிரச்சினையினை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

‘எந்த இடத்தில் புதிய அணை கட்டப்பட வேண்டுமென தீர்மானித்துவிட்டோம். மத்திய அரசு சுற்றுச்சூழல் பிரச்சினையை உறுதிப்படுத்திவிட்டு அனுமதி வழங்கட்டும், எங்கள் செலவிலேயே அணை கட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருகிறோம் என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசஃப் நேற்று கூறியிருந்தார்.

தமிழகத்தில் போராட்டம் அறிவிப்பு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இதனிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி டிசம்பர் 12-ம் நாள் தமிழகத்தின் மாவட்டத் தலைநகர்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென சென்னையில் கூடிய திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தவிரவும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பாசனத்தால் பயனடையும் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் எதிர்வரும் டிசம்பர் 15-ம் திகதி மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை. மத்திய அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும் திமுக அதிருப்தியாக உள்ளதாக கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழகத்தின் இதுபோன்ற பிரச்சினைகளில் மத்திய அரசின் அணுகுமுறை மிகவும் சோர்வாக உள்ளதே, உங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா எனக்கேட்டபோது, தாம் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதால் வேறு விதமான விளைவுகள் ஏற்படும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது என்றார் கருணாநிதி.