'தானே' புயல்: குறைந்தபட்சம் 18 பேர் பலி

  • 30 டிசம்பர் 2011
புயலின் சமயத்தில் மீனவர் ஒருவர் படத்தின் காப்புரிமை r
Image caption மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடலூர் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் அருகே கரையைக் கடந்த 'தானே' புயலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர், ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

மணிக்கு நூற்று நாற்பது கிலோமீட்டர் வேகத்துடனான சூறைக்காற்றுடனும் மிகக் கடுமையான அடைமழையுடனும் தானே புயல் வெள்ளியன்று அதிகாலை கரையைக் கடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் ஒன்பது பேரும், புதுச்சேரியில் ஏழு பேரும், சென்னையில் இரண்டு பேரும் என இதுவரையிலான உயிர்ச்சேதங்கள் அமைந்துள்ளன.

கட்டிடங்கள், மரங்கள், மின் விநியோகக் கட்டமைப்பு என பலவற்றிலுமாக ஏராளமான பொருட்சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

தங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு புயலைக் கண்டதில்லை என்று புதுச்சேரியையும் அண்டியுள்ள கிராமங்களையும் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிடுங்கியெறியப்பட்ட மரங்கள் சாலைகள் நெடுகிலும் வழிமறித்து நிற்பதால், பல பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக நெய்வேலி நிலக்கரி அனல் மின் நிலையதத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தும் தடைபட்டிருந்தது.

கரையைக் கடந்து வழுவிழந்திருந்தாலும் இந்தப் புயலின் மையம் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால், வட தமிழகத்தில் பல இடங்களிலுமாக குறைந்தது அடுத்த 12 மணி நேரத்துக்கு கடுமையான மழை நீடிக்கும் என வானிலை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக முதல்வர் ஜெயலலிதா ரூ.150 கோடி உதவித் தொகையை அறிவித்துள்ளார்.