சென்னை அரசு அலுவலக தீவிபத்தில் ஒருவர் பலி

தீயணைப்பு வீரர் படத்தின் காப்புரிமை Reuters
Image caption இவ்விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சென்னையில், தமிழக அரசின் தொழில் வணிக துறை மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்கள் இயங்கி வந்த புராதனக் கட்டிடமொன்றில் திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயினை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் இருவர் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்திற்கு மின்கசிவே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பல அரசு அலுவலகங்களை உள்ளடக்கிய எழிலகம் வளாகத்தினையொட்டி அமைந்துள்ள சேப்பாக்கம் அரண்மனைக் கட்டிடங்கள் ஒன்றில் தொழில், வணிகம் மற்றும் சமூக நலத்துறை அலுவலகங்கள் இருக்கின்றன.

தீ பிடித்தது தெரியவந்தவுடன் தீயணைப்பு படைக்குத் தெரிவிக்கப்பட்டது, அவர்களும் விரைந்துவந்து கட்டுப்படுத்தினர்.

ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய அன்பழகன் என்ற தீயணைப்பு வீரர் அதே இடத்தில் இறந்தார்.

அவரை மீட்பதற்குச் சென்ற பிரியா, மற்றும் முருகனும் படுகாயம் அடைந்தனர். பிறகு அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தீயணைப்புப் படையின் இயக்குநர் போலோநாத், உயிரிழப்பும் காயங்களும் பின்னடைவுதான் என்றாலும், இது குறித்து தாம் சொல்ல எதுவுமில்லையென்றும், கட்டிடங்கள் பராமரிப்பு பொதுப்பணித்துறை வசமே இருப்பதாகவும் கூறினார்.

சத்துணவு மற்றும் சமூக நலத்துறை செயலாளர் கே.கோபால் கட்டிடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதால் அரசு துறை அலுவலகங்களை வேறு இடத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எரிந்து போன ஆவணங்களின் நகல்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், எனவே அவ்வகையில் பாதிப்பு எதுவும் இல்லையென்றும் தெரிவித்தார்.

முதல்வர் ஜெயல்லிதா விபத்தில் இறந்த தீயணைப்பாளர் அன்பழகன் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்த பிரியா ரவிச்சந்திரன் மற்றும் முருகன் ஆகியோருக்கு தலா ரூ. 25 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்த பிரபாகரன் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாயும் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.