இலக்கிய விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை: ருஷ்டி

சல்மான் ருஷ்டி
படக்குறிப்பு,

சல்மான் ருஷ்டி

இந்தியாவில் நடக்கவுள்ள இலக்கிய விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார்.

தான் இந்தியா வரும்போது தன்னைப் படுகொலை செய்ய சதிகாரர்கள் பணம் கொடுத்து ஆள் வைத்திருக்கக்கூடும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளனர் என்று ருஷ்டி கூறினார்.

தனது வருகையால் விழாவுக்கு வருகின்ற மற்றவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் எனத் தெரிந்து தான் வருவது பொறுப்பற்ற செயலாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடக்கக்கூடிய வருடாந்த இலக்கிய விழாவில் இதற்கு முன்னால் அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி ரஷ்டி கலந்துகொண்டிருக்கிறார்.

ஆனால் அவர் இந்தியா வருவதை இப்போது அனுமதிக்கக்கூடாது என இந்திய முஸ்லிம் குழுக்கள் சில குரல்கொடுத்திருந்தன.

சாடானிக் வெர்சஸ் என்ற தனது புதினம் தொடர்பில் இருபது வருட காலமாக இருந்துவருகின்ற ஒரு சர்ச்சை தொடர்பில் அவர் இந்தியா வருவதை தடுக்க வேண்டுமென முஸ்லிம் அமைப்புகள் கூறியிருந்தன.

சாடானிக் வெர்சஸ் இஸ்லாத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது எனக் கூறி சல்மான் ருஷ்டிக்கு எதிராக இரானின் முன்னாள் அதியுயர் மதத் தலைவர் அயதொல்லா கொமேனி மத ஆணை ஒன்றைப் பிறப்பித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.