ஸ்பெக்ட்ரம் ஊழல்: 122 உரிமங்கள் அதிரடி ரத்து

இந்திய உச்சநீதிமன்றம்
Image caption இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவின் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தமிழ்நாட்டின் திமுகவைச்சேர்ந்த ஆ ராசா இருந்தகாலகட்டத்தில் வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களையும் இந்திய உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்திருக்கிறது.

புது தில்லியிலிருந்து செயற்படும் ஊழலுக்கு எதிரான தன்னார்வ அமைப்பு மற்றும் ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்த வழக்கில் தீர்ப்பளித்த இந்திய உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்திருக்கிறது.

இது தொடர்பாக இந்திய நடுவணரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ தொடர்ந்திருக்கும் வழக்கில் இந்த உரிமங்கள் அளிக்கப்பட்டபோது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்கிற சுப்பிரமணிய சுவாமியின் கோரிக்கை குறித்து இது தொடர்பான வழக்கை விசாரித்துவரும் சி்பிஐ நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏகே.கங்குலி, ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் வியாழனன்று தீர்ப்பளித்தனர்.

சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்கிற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

மேலும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக புதிதாக விதிமுறைகளை உருவாக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்றைய தீர்ப்பின்படி 2008ஆம் ஆண்டுக்குப் பின் 11 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இதில் டாடா நிறுவனத்தின் மூன்று உரிமங்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 உரிமங்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 உரிமங்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 உரிமங்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 உரிமங்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 உரிமங்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 உரிமங்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 உரிமங்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 உரிமங்களும் அடக்கம். மூன்று நிறுவனங்களுக்கு அபராதம்

முறைகேடாக உரிமங்கள் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தலா ஐந்து கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடாக ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதாக 11 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது சிபிஐ ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளது. இதனால் நாட்டுக்கு சுமார் ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption குற்றம் சாட்டப்படும் ஆ ராசா

.

இந் நிலையில் முறைகேடாக உரிமம் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்று லாபமடைந்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ், எஸ்டெல் ஆகியவை தலா 5 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே போல விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுவரும் லூப் டெலிகாம், ஸ்யாம் சிஸ்டமா ஆகியவை தலா ஐம்பது லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஐந்து நிறுவனங்கள் உள்பட முறைகேடாக உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களின் உரிமங்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு மட்டுமே செல்லும்.அதற்குள் உரிம வினியோகம் தொடர்பாக புதிய விதிமுறைகளை தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் வகுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. டிராய் வகுக்கும் இந்த புதிய விதிமுறைகளின் கீழ் 2ஜி உரிமங்களை மீண்டும் விற்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.