சென்னையில் மின் வெட்டு அதிகரிப்பு

  • 25 பிப்ரவரி 2012
மின் வினியோகக் கட்டமைப்பு படத்தின் காப்புரிமை Getty
Image caption மின் வினியோகக் கட்டமைப்பு

தமிழகத் தலைநகர் சென்னையில் வரும் திங்கள்கிழமை முதல் தினமும் இரண்டு மணி நேரத்துக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும் என்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் தினந்தோரும் நான்கு மணி நேரம் மின் தடை அமலுக்கு வரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே சென்னையில் தினமும் ஒரு மணிநேர மின் வெட்டு இருந்து வருகிறது. தமிழகத்தின் பிற நகரங்களில் 4 முதல் 8 மணி நேரம் வரையிலான மின் வெட்டு நிலவி வருகிறது.

தமிழகத்தின் மொத்த மின் தேவை 12500 மெகா வாட்டாக இருந்தாலும், மொத்த மின் உற்பத்தி வெறும் 8500 மெகா வாட் என்ற அளவிலேயே இருப்பதால் இந்த மின் தடை அவசியமாகிறது என்று அரசு கூறுகிறது.

வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மேலும் கடுமையான மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விடுமுறை

தொழிற்சாலைகளுக்கு ஒரு நாள் முற்றாக மின் விநியோகத்தை நிறுத்தும் மின் விடுமுறைத் திட்டமும் படிப்படியாக அமல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான மின்சாரப் பற்றக் குறை நிலவுகிறது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் இது ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்தது.

மின் வெட்டை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து அதிமுக ஆட்சிக்கு வந்தாலும், மின் வினியோகம் சீர்படவில்லை என்றே நோக்கர்கள் கூறுகின்றனர்.

மின் தடை காரணமாக தமது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறி தமிழகத்தின் கோவை, திருப்பூர் போன்ற இடங்களைச் சேர்ந்த சிறுதொழில் முனைவோர் பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.

கோடைக்காலம் ஆரம்பித்த பிறகு நிலைமை மேலும் மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது.