மீனவர் மீதான தாக்குதல்கள்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

'மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்ற போதிலும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை': ஜெ. படத்தின் காப்புரிமை aiadmk
Image caption 'மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்ற போதிலும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை': ஜெ.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் பிரச்சனையை மத்திய அரசு தேசியப் பிரச்சனையாகக் கருதுவதில்லை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் தாக்குதல் நடத்தப்படும்போது மத்திய அரசு அதுதொடர்பில் உறுதியான நடவடிக்கை எதையும் எடுப்பதில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இனிமேல் தாக்குதல் நடக்காது என்று அளித்த உறுதிமொழியை இலங்கை அரசு காப்பாற்றவில்லை என்றும் இந்தப் பிரச்சினையில் இலங்கை அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

பாக்கு நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக தமிழக மீனவர்கள் மீன் பிடித்துவரும் நிலையில், அந்த உரிமையை மத்திய அரசு மீண்டும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 14-ம் தேதி பாக்கு நீரிணைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதனால் மூழ்கிக் கொண்டிருந்த படகிலிருந்த மீனவர்களை இன்னொரு படகில் சென்ற மீனவர்கள் காப்பாற்றி அழைத்து வந்ததாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைப் பிரமுகர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது அதுகுறித்து தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 7-ம் தேதி பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், இலங்கைப் பிரமுகர்கள் அடிக்கடி தமிழகம் வருவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு வருவதாக இருந்தால் தமிழக அரசிடம் ஆலோசனை நடத்தி முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய பிபிசியிடம் மறுத்தார்.