இந்திய தங்க வியாபாரிகளின் போராட்டம் வாபஸ்

இந்திய நகைக்கடை ஒன்று
Image caption இந்திய நகைக்கடை ஒன்று

தங்கம் மீதான புதிய வரி திரும்பப் பெறப்படும் என்ற இந்திய மத்திய நிதி அமைச்சரின் உறுதி மொழியை அடுத்து தங்க நகை வியாபாரிகள் தமது கடையடைப்புப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இந்தியாவில் தங்கம் மீது புதிதாக கலால் வரி விதிக்கப்பட்டதையும் ஏற்கனவே இருந்த இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதையும் வாபஸ் பெறுகிறோம் என இந்திய நிதியமைச்சர் வாக்குறுதியளித்துள்ளதாக நகைக் கடை பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட அரசாங்க நிதியறிக்கையில் தங்க உற்பத்தி மீது புதிதாக இரண்டு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இருந்துவரும் இறக்குமதி வரி இரண்டு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைகள் தமது வர்த்தகத்தைப் பாதிக்கும் என்று கூறி இந்திய நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தை மேற்கொண்டு வந்திருந்தனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியை சந்தித்து புதிய வரிகள் விலக்கிகொள்ளப்பட வேண்டுமென நகைக்கடை உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன.

இந்நிலையில் வெள்ளியன்று புது தில்லியில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, அரசாங்கம் புதிய விதிகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் வலியுறுத்தியதாக நகைக்கடை உரிமையாளர் பிரிதிநிதிகள் கூறுகின்றனர்.

தமது கோரிக்கையை அமைச்சர் ஏற்றதாகவும், நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் தங்கம் மீதான புதிய வரி வாபஸ் பெறப்படும் என அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தமிழோசையிடம் பேசிய சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தமிழோசைடம் கூறினார்.

அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று, கடந்த இரண்டு வார காலமாக தாங்கள் மேற்கொண்டுவரும் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிடம் உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வருவதற்கு மக்களிடையே காணப்படும் தங்க மோகம் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தங்கத்தின் விலையை உயர்த்தி அதன் விற்பனையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு புதிய வரிகளை விதித்தாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே நேரம் தங்கம் என்பது ஒரு முதலீடாக மட்டுமல்லாது இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாகவும் கருத்து உள்ளது. உலகில் அதிக அளவு தங்க நகை வைத்துள்ளவர்கள் இந்தியர்கள் என்று சமீபத்திய ஆய்வு கூறியுள்ளது.