அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் படத்தின் காப்புரிமை economic times
Image caption இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்

மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் கடந்த 2009ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினைத் தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்திருக்கிறது.

அந்தத் தேர்தலில் 3,354 வாக்குக்களில் சிதம்பரத்திடம் தோல்வியுற்ற அஇஅதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜ கண்ணப்பன், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சிதம்பரம் செய்ததாகப் புகார் கூறி, அவரது தேர்தல் செல்லாது என அறிவிக்கவேண்டும் எனக் கோரி வழக்கு தொடுத்திருக்கிறார்.

அவையெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள், எனவே கண்ணப்பனின் மனு தள்ளுபடி செய்யப்படவேண்டும் எனக்கோரி தனியாக ஓர் மனுவினை சிதம்பரம் தாக்கல் செய்தார்.

அம்மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைப் பிரிவு நீதிபதி கே வெங்கட்ராமன், அமைச்சர் சிதம்பரம் மாவட்ட நிர்வாகத்தை, மற்றும் அப்பகுதி வங்கி அதிகாரிகளைத் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்களை மட்டும் நிராகரித்தார்.

ராஜ கண்ணப்பன் சுமத்தியிருக்கும் மற்ற 27 வேறு புகார்களுக்கெதிரான தனது மறுமொழியினை, சிதம்பரம் தேர்தல் மனு விசாரிக்கப்படும்போது தெரிவிக்கலாம் என நீதிபதி கூறிவிட்டார்.

தீர்ப்பு விவரங்கள் வெளியானவுடனேயே சிதம்பரம் பதவி விலகவேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பாரதீய ஜனதாவின் அகில இந்தியத் தலைவர் நிதின் கட்காரியும் கோரியிருக்கின்றனர்.