சர்சைக்குள்ளான மற்றுமொரு கேலிச்சித்திரம்

சர்ச்சைக்குள்ளான கேலிச்சித்திரம்
Image caption சர்ச்சைக்குள்ளான கேலிச்சித்திரம்

இந்தியாவின் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்து வெளியிட்டுள்ள பாடப்புத்தகம் ஒன்றில் அம்பேத்கார் குறித்த கார்ட்டூன் ஒன்று மறு பிரசுரம் செய்யப்பட்டிருந்தமை சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்போது, அதே அமைப்பு தயாரித்து வெளியிட்டிருக்கும் அந்தப்புத்தகத்தில், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து அக்காலகட்டத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியான கேலிச்சித்திரம் ஒன்று போடப்பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை தூண்டியிருக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்த கேலிச்சித்திரத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் பலர் ஈடுபட்டிருக்கையில், இந்தித் திணிப்பு இல்லை, ஆங்கிலக் கல்வி தொடரும் என்று கூறும் ஆங்கிலப் பதாகைகளை ராஜாஜி தாங்கிக்கொண்டிருப்பது போலவும், அதைப் பார்க்கும் வேறு சிலர், இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது என்று கூறுவது போலவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்தக் கேலிச்சித்திரம், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை இழிவு படுத்துவதாகவும், அந்தக் கேலிச்சித்திரத்துடன், திராவிட இயக்கம் குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரை, திராவிட இயக்கம் குறித்த ஒரு மேம்போக்கான கருத்தை வெளியிடுவதாகவும் , இதை முதலில் தனது இணைய தளத்தில் பிரசுரித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறுகிறார்.

இந்த கேலிச்சித்திரம் குறித்து தமிழக முன்னாள் அமைச்சரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவருமான துரைமுருகன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த கேலிச்சித்திரம் பற்றி, 1960களில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து, துரைமுருகன் அவர்களின் கருத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.