டெசோ மாநாட்டுக்கு அனுமதி தர தமிழக அரசு மறுப்பு

  • 10 ஆகஸ்ட் 2012
கருணாநிதி
Image caption மாநாட்டை நடத்த முடியுமா?

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) மாநாட்டுக்கு அனுமதியளிக்கப் போவதில்லை என்று தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் நீதிமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

டெசோ மாநாடு நடத்த அனுமதியளிக்கக் கூடாது என்றும், அந்த அமைப்புக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணுகோபால் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த டெசோ மாநாட்டுக்கு, 8 ஆயிரம் பேர் வருவார்கள் என்று முதலி்ல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எவ்வளவு பேர் வருவார்கள் என்று அரசு கேட்டிருந்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், முரசொலி பத்திரிகையில், ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்றும், பெருமளவில் வாகனங்கள் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நவநீதகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

மேலும், மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ள மைதானத்துக்கு எதிரே மருத்துவமனை இருப்பதால், அங்கு வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், சென்னையில் மாநாடு நடத்த தமிழக அரசு அனுமதியளிக்கப் போவதில்லை என்று அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

ஆனால், டெசோ அமைப்பின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், நகர காவல் துறை விதிகளின் கீழ், தனியார் மைதானத்தில் மாநாடு நடத்த காவல் துறையிடம் அனுமதி பெறத் தேவையில்லை என்று சுட்டிக்காட்டினார். ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்காகத்தான் அனுமதி கோரியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து, சென்னை நகர காவல்துறை ஆணையர் அவர்கள் பரிசீலித்து, பொருத்தமான முடிவை எடுக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'ஈழம்’ வார்த்தையை கைவிட அறிவுரை

இதனிடையே, டெசோ மாநாட்டின் தலைப்பில் 'ஈழம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறையின் துணைச் செயலர் ஆர்.கே. நாக்பால், டெசோ மாநாட்டு அமைப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உத்தேச சர்வதேச மாநாட்டுக்கு அனுமதியளிப்பதில், அரசியல் ரீதியாக இந்த அமைச்சகத்துக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அந்த மாநாட்டின் தலைப்பில் இருந்து ஈழம் என்ற வார்த்தையைக் கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, டெசோ மாநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து எந்தவிதக் கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.