மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் காலமானார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 ஆகஸ்ட், 2012 - 12:19 ஜிஎம்டி
விலாஸ்ராவ் தேஷ்முக்

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவருக்கு வயது 67.

கடந்த 6-ம் தேதி, மும்பையில் இருந்து விமான ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் தயார்படுத்தி வந்தனர்.

இந் நிலையில், தேஷ்முக்கிற்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தானம் செய்ய இருந்த நபர் இன்று அதிகாலை திடீரென காலமானார். 31 வயதான அந்த ஓட்டுநர், சாலை விபத்து ஒன்றில் சிக்கியதில், அவரது மூளை செயலிழந்துவிட்டது. அரசு மருத்துவமனை ஒன்றில் இருந்த அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றவிருந்த நிலையி்ல் அவர் உயிரிழந்தது, தேஷ்முக்கிற்கு பெரும் பின்னடைவாகிவிட்டது. இதையடுத்து, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தானத்துக்காக மீண்டும் தேடுதல் நடவடிக்கையில் மருத்துவர்கள் ஈடுபட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விலாஸ்ராவ் தேஷ்முக், இரண்டு முறை மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்தார். கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து, அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார்.

கிராம சபைத் தலைவர் பதவியில் இருந்து மாநில முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் பதவிக்கு உயர்ந்தவர் தேஷ்முக்.

அவரது மறைவுக்கு, பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.